தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் 26.5.2013 அன்று கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவை தீர்மானம் நிறைவேற்றி யது. இந்தக் கோரிக்கை இப்போது வலுப்பெற்று வருகிறது.

இடஒதுக்கீட்டை கடைபிடிக்காத பள்ளிக்கல்வித் துறை அரசாணை 252 திருத்தப்பட்டு, புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதன் அடிப்படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் ஜூன் 9 ஞாயிறன்று கல்வியாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடை பெற்றது.

இந்தக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாநில அரசுகள் மதிப்பெண் தளர்வு வழங்கலாம் என்று தேசிய ஆசிரியர் கல்வி வாரியம் கூறி உள்ளது.

அவ்வாறு தமிழ்நாடு அரசு மதிப்பெண் தளர்வு வழங்காமல், அனைத்து பிரிவினருக்கும் குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 விழுக்காடு என நிர்ணயித்துள்ளது இடஒதுக்கீட்டிற்கு எதிரானது. மதிப்பெண் தளர்வு வழங்காதது ஒடுக்கப்பட்ட மக்களின் வேலை வாய்ப்பை தட்டிப் பறிப்பதோடு, இவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமையை மறுப்பதாகும்.

ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க தகுதியை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை 252ஐ 5.10.2012 அன்று வெளியிட்டது. இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்காததால் அந்த அரசாணை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14, 15(4), 16(4) பிரிவுகளுக்கு எதிரானதாக உள்ளது.

மத்திய அரசு தனது அலுவலக குறிப்புகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வழிகாட்டு தலைக் கொடுத்திருக்கிறது. அதாவது, எக்காரணத் தைக் கொண்டும் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப் பட்டோர் பணியிடங்கள் காலியாக இருக்கக் கூடாது. ஆகவே, அதற்கேற்ப மாநிலங்கள் இட ஒதுக்கீடு கொள்கைகளை உருவாக்கிக் கொள்ள லாம். இதற்கு மாற்றாக அந்த அரசாணை இட ஒதுக் கீட்டை மறுத்து, தரத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறது.

இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதியை தீர்மானிக்காத அரசாணை எண்.252 இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றம் இந்திரா சகானி வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக உள்ளது. அரசாணை எண்.252 தீர்மானித்த தகுதியின் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்புவதில் பின்பற்றிய இடஒதுக்கீட்டு வழிமுறை தன்னிச்சையானது.

தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் பின் பற்றுவதுபோல இடஒதுக்கீட்டின் அடிப்படையிலஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் தீர்மானித்திருக்க வேண்டும். மாறாக, தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தி வழங்கப்பட்டதாக கூறப்படும் இடஒதுக்கீடு என்பது, முறையாக இடஒதுக்கீட்டின் அடிப் படையில் தகுதி பெறக் கூடிய உரிமையை ஒடுக்கப்பட்ட மக்களை இழக்கச் செய்துள்ளது.

இதன் விளைவாக 2012 டிசம்பர் ஆசிரியர் பணி நியமனத்தில் 1184 பணியிடங்கள் (பிசி-இஸ்லாமியர்-153, எம்.பி.சி./டி.என்.சி.-151, எஸ்.சி.-659, எஸ்.சி.-அருந்ததியர்-131, எஸ்.டி-90) நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய சூழலும், தகுந்த பயிற்சியும் வழங்கப்பட்டால் எவரும் தகுதி உடையவராக முடியும்.

கல்வியில் பட்டயமோ, பட்டமோ பெற்றவர் களுக்கு மீண்டும் தகுதித் தேர்வு என்பதற்கு பதிலாக, கல்வியியலில் பட்டயம் அல்லது பட்டம் பெற்ற வர்களுக்கு பணி நியமனங்களை வழங்கி உரிய பயிற்சியினை வழங்குவதே சிறந்த ஆசிரியர்களை உருவாக்க வழி வகுக்கும். இருப்பினும், இன்றுள்ள சட்டத்தின்படி நடத்தப்படும் தகுதித் தேர்விலாவது சமூக நீதியை காக்கும் பொருட்டு இந்திய அரச மைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டை, தமிழ்நாடு அரசும் கடைபிடிக்க வேண்டும்.

ஆகவே, ஆசிரியர் தகுதி தேர்விலும், அதன் அடிப்படையிலான பணி நியமனங்களிலும் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித் தனியாக தகுதி மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும். அதற்கேற்ப தமிழக அரசு அரசாணை 252இல் உரிய திருத்தங்களை செய்து புதிய அரசாணையை வெளியிட வேண்டும்.

டிசம்பர் 2012இல் நடைபெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு பின்பு ஏற்பட்டுள்ள எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப் பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு கல்லூரி முன்னாள் முதல்வர்கள் ப.சிவக்குமார், மு.திருமாவளவன், பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் வற்புறுத்தினர்.

தேசிய ஆசிரியர் கல்வி கழக நெறிமுறைகளின் 9ஆம் விதிப்படி, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்ற வேண்டும். ஆனால், சென்ற ஆண்டு தமிழக அரசு நடத்திய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை கடைபிடிக்காமல் 19 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டை முறையாக கடைபிடித் திருந்தால் கூடுதலாக 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை கிடைத்து இருக்கும். எனவே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 19 ஆயிரம் ஆசிரியர்களின் பணி நியமனத்தை உடனடியாக ரத்து செய்து, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் புதிதாக பணி நியமனம் நடத்த வேண்டும். இடஒதுக்கீடு விதி முறைகளின்படி, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தை நடத்தாத, தமிழக அ ரசின் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்ரியை பணி நீக்கம் செய்து, அவர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும். இல்லை யென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Pin It