தலையங்கம்

வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழ்நாடு கருநாடக கூட்டு அதிரடிப் படையினர், அப்பாவி மக்களை ‘மனித வேட்டை’யாடினர். 1993-94களில் நடந்த இந்த ‘அட்டூழியப் படுகொலை  சித்திரவதைகள்’ பற்றி, விசாரிக்க, தேசிய மனித உரிமை ஆணையம், நீதிபதி ஏ.சதாசிவம் மற்றும் கி.வி.நரசிம்மன் தலைமையில் 1999-ல் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. விசாரணை ஆணையத்தின் செயல்பாடுகளையே முடக்க - அதிரடிப்படையினர் தீவிர முயற்சிகளை செய்து பார்த்தனர். சாட்சி கூற விடாமல் மக்கள் அச்சுறுத்தப்பட்டனர்.

2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி விசாரணை ஆணையம், தனது பரிந்துரையை சமர்ப்பித்துவிட்டது. இதை வெளியிட்ட வைப்பதற்கே, மனித உரிமை அமைப்புகள் கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. கடந்த அக்டோபர் மாதம் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்கள் - ‘மக்கள் கண்காணிப்பகம்’ என்ற மனித உரிமை அமைப்பின் முயற்சியால் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அணி பொறுப்பாளராக இருக்கும் திருமதி ஆன்னி ராஜா அவர்களின் முயற்சியால், பாதிக்கப்பட்ட பெண்கள், பிரதமர், உள் துறை அமைச்சர், மனித உரிமை ஆணையத் தலைவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகு கடந்த வாரம், சதாசிவம் விசாரணை அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

பல அதிர்ச்சியான தகவல்கள் வெளி வந்துள்ளன. அதிரடிப் படையினர், பலரை சுட்டுக் கொன்று விட்டு, ‘மோதலில் இறந்ததாக’ பதிவு செய்துள்ளதை, ஆணையம் சுட்டிக் காட்டியிருக்கிறது. 60 அப்பாவி மக்களை மிக அருகாமையில் இருந்தே சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். 12 பேரை பக்கவாட்டிலிருந்தும், முன்னாலிருந்தும், பின்னாலிருந்தும் சுட்டுக் கொன்றுள்ளனர். இப்படிப் பல்வேறு அட்டூழியங்களை சுட்டிக்காட்டியுள்ள விசாரணை ஆணையம் 72 குடும்பங்களுக்கு தமிழ்நாடு-கருநாடக அரசுகள் உரிய நட்டஈடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதே போல் ‘தடா’வில் சிறைபிடிக்கப்பட்டு பல ஆண்டுகாலம் கருநாடக சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 38 பேருக்கு உரிய நட்டஈடு வழங்கவும், ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

ஆனால், இரு மாநில அரசுகளும் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டன. இது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். இந்தப் படுகொலைகளையும் அத்துமீறல்களையும் நடத்திய அதிரடிப்படையினருக்கு, கோடிக்கணக்கில் அரசுப் பணத்தை எடுத்து வீசி, வீடுகளையும், விருதுகளையும், விருந்துகளையும், தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கியதை நாடு மறக்கவில்லை. விசாரணை ஆணையத்தால் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்டவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் விருதுகளையும் வாரி வழங்கி விட்டு, இவர்களின் அடக்குமுறையால் குடும்ப உறுப்பினர்களையும், உடைமைகளையும், உடல் உறுப்புகளையும் இழந்து நிற்கும் மக்களுக்கு ‘எதுவும் தர முடியாது’ என்று மறுப்பது, என்ன நீதி என்று கேட்கிறோம்! நடப்பது மக்களின் ஆட்சியா? காவல்துறையின் சர்வாதிகார ஆட்சியா? என்ற கேள்வி எழவே செய்யும். தமிழக முதல்வர் திறந்த உள்ளத்தோடு, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று வற்புறுத்துகிறோம். மக்கள் இயக்கங்கள் - மனித உரிமை அமைப்புகள், இதற்குக் குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

Pin It