இந்தியாவிலும் உலகிலும் கடவுள்-மத நம்பிக்கை குறைந்து வருவதாக, அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. உலகில் 5 கண்டங்களி லுள்ள 57 நாடுகளில் 51,927 பேரிடம் இது பற்றிய கருத்துகள் கேட்கப்பட்டன. அதன் படி, இந்தியாவில் மத நம்பிக்கையுள்ளோர் எண்ணிக்கை 7 ஆண்டுகளில் 6 சதவீதம் குறைந்துள்ளது. 2005இல் 87 சதவீதம் பேர் தங்களுக்கு கடவுள் மத நம்பிக்கை இருப்பதாக கூறியிருந்தனர். 2013இல் 81 சதவீதம் பேர் மட்டுமே இவ்வாறு கூறி யுள்ளனர். அதே நேரத்தில் நாத்திகர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்ட வர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதம் குறைந்துள்ளது. 2012 இல் 4 சதவீதம் பேர் தங்களை நாத்திகர்கள் என்று பதிவு செய்தார்கள். 2013 இல் இது 3 சதவீத மாகியுள்ளது என்று ஆய்வு கூறுகிறது. இது இந்தியாவில்!

உலகம் முழுதும் மதத்தை நம்புவோர் எண்ணிக்கை 9 சதவீதம் குறைந்துள்ளது. நாத்திகர்கள் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

சில நாடுகளில் மட்டுமே மத நம்பிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். அதில் பாகிஸ்தானும் ஒன்று. அந்த நாட்டில் மத நம்பிக்கையாளர்கள் 6 சதவீதம் அதிகரித்துள்ளனர். தற்போது உலக கத்தோலிக்கர்களின் தலைவராக உள்ள போப் சொந்த நாடான அர்ஜென்டினாவிலேயே மதத்தை நம்புவோர் 8 சதவீதம் குறைந்துவிட்டனர்.

தென்னாப்பிரிக்காவில் 19 சதவீதமும், அமெரிக்காவில் 13 சதவீதமும், சுவிட்சர் லாந்து மற்றும் பிரான்சு நாடுகளில் 23 சதவீதமும் - மத நம்பிக்கையாளர்கள் குறைந்துள்ளனர்.

உலகில் பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவுக்கே சவால் விட்டு வளர்ந்து கொண்டிருக்கும் சீனா, நாத்திகர்கள் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடாக உள்ளது. மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் தங்களுக்கு கடவுள் மத நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளனர். கடவுள் நம்பிக்கையற்றவர்களின் உலக சராசரி 13 சதவீதம்; சீனாவில் மட்டும் இது 50 சதவீதமாக உள்ளது.

கடவுளை மறுத்த டார்வின் பெருந்தன்மை

கடவுள் ஒவ்வோர் உயிரினத்தையும் தனித்தனியாக உருவாக்கியதாகத் தான் உலகின் எல்லா விஞ்ஞானிகளும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கை தவறானது என்று முதலில் சொன்னவர் டார்வின்தான். அவரது 20 வருட ஆராய்ச்சி மூலம் இதைக் கண்டறிந்தார்.

ஓர் இனத்தை சேர்ந்த உயிரினம் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது அது அந்த புதிய சூழ்நிலையில் நன்கு வாழ்ந்து வருவதற்கு தேவையான புதிய உடல் மாற்றங்களை படிப்படியாக உருவாக்கிக் கொண்டுவிடும் என்பதை இவர் ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லி வந்தார். வாழ்க்கை என்பது ஒரு தீவிரமான போராட்டம்தான். அதில் திறமையும், சக்தியும் மிகுந்த உயிரினங்கள் தான் தங்களுடைய இனப்பெருக்கத்தைச் செய்து கொண்டு இந்த உலகில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன என்று கூறினார்.

காடுகளிலும் மலைகளிலும் சமவெளிகளிலும் கடற்கரை பிரதேசங்களிலும் பல ஆண்டு பயணம் செய்து உலகில் வாழ்ந்து வரும் உயிரினங்களைப் பற்றி, தான் சேகரித்த விவரங்களைக் கொண்டு உயிரினங்களின் ஆரம்ப நிலை என்ற நூலை எழுதினார். 20 வருட உழைப்பு அது. அப்போது அவருக்கு பெரிய சங்கடம் ஏற்பட்டது. ஆல்பிரட் ரஸ்ஸெல் வாலஸ் என்ற இளம் விஞ்ஞானி உயிரினங்களுக்கிடையே ஏற்படும் மாறுதல்களை விவரித்து ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை எழுதி டார்வினுக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர், தான் கட்டுரையை விஞ்ஞான கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.

அதுநாள் வரையில் தான் செய்து வந்த ஆராய்ச்சியை வேறு யாரும் செய்து வரவில்லை என்று டார்வின் நம்பி இருந்தார். இப்போது ஓர் இளம் விஞ்ஞானி தனக்கு போட்டியாக வந்து விட்டிருக்கிறார். அந்த கண்டுபிடிப்பை உலகிற்கு தெரிவிக்க தன்னுடைய உதவியை நாடி இருக்கிறார். மேற்கொண்டு என்ன செய்வதென்று தடுமாறினார். அவரது நண்பர்களோ நீங்கள் 20 வருடமாக உலகம் முழுவதும் சுற்றி கடினமான ஆராய்ச்சி மூலம் திரட்டிய புதிய கண்டுபிடிப்பை கண்டிருக்கிறீர்கள். இதைப் பற்றி ஒரு பெரிய நூலையே எழுதியுள்ளீர்கள். உங்கள் ஒருவருக்குத் தான் புகழ், பெருமை அனைத்தும் கிடைக்க வேண்டும். உடனே உங்கள் கண்டுபிடிப்பை விஞ்ஞான கழகத்தில் அறிவிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றனர்.

டார்வின் இதை மறுத்தார். நான் கண்டுபிடித்ததையே இளம் விஞ்ஞானியும் கண்டுபிடித்துள்ளார். அவரது கட்டுரையையும் தனக்கு அனுப்பி உதவும்படி கேட்டுக் கொண்டார். இளம் விஞ்ஞானியை ஏமாற்றி விட்டதாக ஒரு அவப்பெயர் எனக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. அப்படி யாரும் பேசாமல் இருக்க நான் என் புத்தகத்தை எரித்துவிடவும் தயாராக இருக்கிறேன் என்றார்.

இதைக் கேள்விப்பட்ட இளம் விஞ்ஞானியோ இந்த கண்டுபிடிப்புக்கான பெருமை முழுவதும் டார்வினுக்கு தான் போய்ச் சேர வேண்டும். நான் அவருடைய ஒரு சீடன் தான் என்று அறிவித்தார். டார்வின் இதை ஏற்க மறுத்துவிட்டார். 1859 இல் விஞ்ஞானக் கழகத்தில் இருவரும் தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை படித்தனர். உலகமே டார்வினுடைய பெருந்தன்மையைப் பாராட்டியது.

5 ரூபாய் நாணயத்தில் ‘மகாவிஷ்ணு தேவி’

இந்திய அரசு 5 ரூபாய் நாணயம் ஒன்றை ‘மகாவிஷ்ணு தேவி’ படத்துடன் 2012இல் வெளியிட்டுள்ளது.

மதச்சார்பற்ற நாட்டில் இப்படி ஒரு நாணயத்தை ‘நாணயமின்றி’ வெளியிட் டிருக்கிறார்கள். இனி ராமன், கிருஷ்ணன் படங்களையெல்லாம்கூட நாணயத்தில் வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. காங்கிரஸ் ஆட்சி, பா.ஜ.க. ஆட்சிக்கு மாற்று என்று அவ்வப் போது கூறி வரு கிறது. இதுதான் ‘மாற்று’ என்பதற் கான அடையாளமோ?

Pin It