மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் நடத்திய ‘வன்னியர் இளைஞர் பெரு விழாவை’ மக்கள் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புச் செய்தது. அங்கே பேசியவர்கள் சிந்திய ‘சிந்தனை’த் துளிகள்:

• இலவசங்களைக் கொடுத்து சாராயத்தைக் கொடுத்து திராவிடக் கட்சிகள் வன்னியர் சமூகத்தை சீரழித்துவிட்டது என்றார் “சின்ன அய்யா” (டாக்டர் அன்புமணி). அடுத்து தமிழ்நாட்டில் அமையப் போவது பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி தான் என்றும், முதலமைச்ச ரானவுடன் போடப்படும் முதல் கையெழுத்து ‘மதுக்கடைகளை மூடுவது’, இரண்டாவது கையெழுத்து இலவசங்களை ஒழிப்பதுதான் என்றும் அவர், இனி இலவசமாக குழந்தைகளை தருவோம் என்றுகூட திராவிட கட்சிகள் கூறுவார்கள் என்று கிண்டலடித்துள்ளார். அடுத்த ஆண்டு இதே இடத்தில் நடக்கும் சித்ரா பவுர்ணமி விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர் களும் இந்த மேடையில் இருப்பார்கள். அவர்களுக்கு பாராட்டு விழா நடக்கும் என்றார்.

• விழாவில் பேசிய பலரும் “சின்ன அய்யா”வை தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்றே பேசினார்கள்.

•              ‘மாவீரன்’ குரு பேசுகையில், “நாங்கள் ஷத்திரியர் பரம்பரை, நெருப்பிலிருந்து பிறந்தவர்கள், சிவபெருமான் ஆசி பெற்றவர்கள், விவசாயிகள், படை நடத்தியவர்கள். இப்போதும் இந்த நாட்டில் உணவை உற்பத்தி செய்து தருவது எங்கள் ஷத்திரியர் குலம் தான்! நாங்கள் நெருப்பிலிருந்து பிறந்ததாக ‘வன்னிய புராணம்’ கூறுவது கற்பனையல்ல. சீதை நெருப் பில் இறங்கி, தனது கற்பை நிரூபித்திருப்பதை நம்புகிறவர்கள், நாங்கள் நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்பதை நம்பக் கூடாதா? என்று கேள்வி எழுப்பினார். (இதை மேடையிலிருந்து இரண்டு மருத்துவம் படித்த டாக்டர்கள் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது தான் வேடிக்கை)

• முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சாதி பற்றி குறிப்பிட்ட மாவீரன், “நாங்கள் அஞ்சி ஓடுவதற்கு மேளம் அடிக்கும் ஜாதி அல்ல - வீர வன்னியர்கள்” என்றார். “எங்களை எதிர்த்து வீரமணி பேசுகிறான், கருணாநிதி பேசுகிறான், தா.பாண்டியன் பேசுகிறான்”, வீரமணி கருப்புச் சட்டை போட்டுவிட்டால் பெரிய ஆளா? கருப்புச் சட்டைப் போட்டவன் எல்லாம் பெரிய ஆளா? இவனுகள் எல்லாம் “நாலாம் ஜாதி பயலுக”. நாங்கள் வீர வன்னியர் குல ஷத்திரியர்கள்” என்றார்.

•              ‘தேவர்’ சங்கத்தைச் சார்ந்த குமார் என்பவர் பேசுகையில், “வன்னியர் கிராமங்களில் வேறு கட்சிகளின் கொடிகள் பறக்கக் கூடாது. ஊர் எல்லையில் இங்கே வேறு ஜாதியினருக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்புப் பலகையை எழுதி வையுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

• பிராமணர் சங்கத்தைச் சார்ந்த அருண் பிரசாத் என்பவர் பேசும்போது, “2016 ஆம் ஆண்டு உடனே வரவேண்டும் என்று தாங்கள் காத்திருப் பதாக, (அதாவது பா.ம.க. ஆட்சி அமைக்கும் காலம்) ஒரே வரியில் பேச்சை நிறுத்திக் கொண்டார். ஆனால், ‘பிராமண’ சங்கத் தலைவர் நாராயணன், இந்த நிகழ்ச்சி குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில், “ஜாதி மறுப்புத் திருமணத்தை எதிர்ப்பதில் பா.ம.க.வுடன் நாங்கள் ஒன்றுபடு கிறோம். ஆனால் தலித் சமூகத்தினரை தனிமைப் படுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்று கூறியுள்ளார்.

அதேபோல் இந்த நிகழ்ச்சியில் நாடார் சங்கத்தின் சார்பில் பேசிய தனபாலன், இதே இதழுக்கு அடுத்த நாள் அளித்த பேட்டியில், “எந்த ஒரு சமூகத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பது தங்களுக்கு உடன்பாடான கருத்து அல்ல” என்று கூறிவிட்டார்.

• இறுதியாக பேசிய “பெரிய அய்யா” (மருத்துவர் இராமதாசு), “காவல்துறை தலித் தலைவர்களை அடக்காவிட்டால், நாங்கள் அடக்கிக் காட்டு கிறோம்” என்றார். ஆனால், காவல்துறை யிலுள்ள “அவர்களை”த் தவிர (தலித் பிரிவினர்) மற்ற எல்லா காவல்துறையினருமே எங்கள் கட்சியினர்தான். அதாவது நாங்கள் கூறும் கருத்தில் உடன்பாடு கொண்டவர்கள் தான் என்றார். சுப்ரமணிய அய்யர் என்பவர் தனக்கு மிகவும் நெருக்கமான நண்பராகியுள்ளார் என்ற தகவலையும் வெளியிட்டார்.

சில விளக்கங்கள்

வன்னியர் சங்க குரு, “நாங்கள் நாலாஞ் ஜாதி யல்ல. (நான்காம் ஜாதி என்பது வர்ணாஸ்ரமப்படி சூத்திரர்). மாறாக வீர வன்னியர் ஜாதி” என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். தென்னகத்தில் ‘பிராமணர்-சூத்திரர்’ என்ற இரண்டு வர்ணா ஸ்ரமப் பிரிவுகள் மட்டுமே உண்டு. ‘வைசிய-சத்திரிய’ பிரிவினர் கிடையாது என்று ஏற்கனவே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தவிர மனு சாஸ்திரமே ஷத்திரிய ஜாதிகள் படிப்படியாக சூத்திரர்களாகி விட்டார்கள் என்று கூறியிருக் கிறது. மனு சாஸ்திரத்தின் 102 ஆவது அத்தியாயம் 43 ஆவது சுலோகம் இவ்வாறு கூறுகிறது.

“பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் ஷத்திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வர வர சூத்திரத் தன்மை அடைந்தார்கள்.”

44 ஆவது சுலோகம் கூறுவதாவது:

“பௌண்டரம், ஒளண்டரம், திரவிடம், காம் போசம், யவநம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம், இத்தேசங்களை ஆண்டவர்கள் (ஷத்திரியர்கள்) அனைவரும் சூத்திரர்களாய் விட்டார்கள்” - என்று மனு சாஸ்திரம் கூறுகிறது.

இந்த “மாவீரர்களை” மனு சாஸ்திரமே ஷத்திரர்களாக அங்கீகரிக்கவில்லை. இவர்கள், சூத்திரர்களாகி விட்டார்கள் என்று கூறுகிறது. அதாவது குருவின் மொழியில் 4 ஆம் ஜாதிகள்.

இலவசம் : சில கேள்விகள்

இலவசங்களைக் கொடுத்து திராவிட கட்சிகள் வன்னியர்களை பிச்சைக்காரர்களாக்கிவிட்டது என்று ‘சின்ன அய்யா’ மாமல்லபுரத்தில் பேசியிருக்கிறார். அப்படியானால், அரசு தரும் இல வசங்களை தங்களது கட்சிக்காரர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அறிவிப்பாரா? அடுத்து வெளியிடவிருக்கும் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை ஒழிப்போம் என்று அறிவிப்பார்களா?

மற்றொரு முக்கிய கேள்வி: இலவசத்தை எதிர்க்கும் இவர்கள், தங்களின் ஒரே அடையாளமாக பெருமையுடன் முன் வைக்கும் ‘ஜாதி’ என்பது பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கியதா? அல்லது கடுமையாக உழைத்துப் பெற்றதா? அல்லது விலை கொடுத்து வாங்கியதா? எந்த உழைப்போ படிப்போ செலவோ இல்லாமல் ஒவ்வொருவருக்கும் இலவசமாகக் கிடைத்ததுதானே இந்த ஜாதி. இந்த இலவசத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளலாமா?

Pin It