ஒன்றுபட்ட இயக்கங்கள் வழியாக தமிழகத்தில் ஜாதி-தீண்டாமையை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனிய சக்திகளை தோற்றோடச் செய்வோம் என்று கழகம் கூட்டிய சென்னை மாநாட்டில் பல்வேறு சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் சூளுரைத்தனர்.

சென்னை மண்டல திராவிடர் விடுதலைக் கழகத்தின் தமிழர் ஒற்றுமைக்கான ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு 4.2.2013 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னை தியாகராயர் நகர் முத்தரங்கன் சாலையில் மேட்டூர் டி.கே.ஆர். குழுவினர் இசை நிகழ்ச்சியோடு தொடங்கியது. மண்டல அமைப்புச் செயலாளர் கு.அன்பு தனசேகரன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் நா. அய்யனார் வரவேற்புரை யாற்றினார். அவர் தனது உரையில், ‘இந்த மாநாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறை பிறர் மனதைப் புண்படுத்தும் முழக்கங்களை எழுப்புவார்கள் என்று காரணம் கூறியிருந்தது. காலம் காலமாக தீண்டாமை அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு சேரியில் உழலும் மக்கள் புண்பட்டுக் கிடப்பதைப் பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை; ஆனால், இதை சுட்டிக்காட்டி, உரிமை கோருவது புண்படுத்தும் செயலா என்று கேட்டார். திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறும் மருத்துவர் ராமதாசு, வாக்களிக்கும் வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்தக் கோருவாரா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து காஞ்சி மாவட்ட கழகத் தலைவர் டேவிட் பெரியார், சூத்திரர்களை பார்ப்பனரின் ‘தேவடியாள் மக்கள்’ என்று நிலைநிறுத்தும் மனு சாஸ்திர இழிவு இப்போதும் தொடர்ந்து கொண் டிருப்பதை எதிர்த்துதான் மனுசாஸ்திரத்தை தீயிட்டுக் கொளுத்துகிறோம் என்றார். தொடர்ந்து இளைஞர் இயக்க சார்பில் மருத்துவர் எழிலன் உரையாற்றினார்.

மருத்துவர் எழிலன் தனது உரையில் - மருத்துவர் என்பவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி யாகவே இருக்க முடியும். பகுத்தறிவு இல்லாத மருத்துவர்கள் தொழில் ரீதியாக செயல்படக் கூடியவரே தவிர, உண்மையான மருத்துவராக முடி யாது. மருத்துவ விஞ்ஞானம், மூடநம்பிக்கைகளை முற்றாகத் தகர்த்து எறிகிறது. இப்போது ஜாதியை காப்பாற்றப் புறப்பட்டிருப்பவர்களை நோக்கி மருத்துவ ரீதியாகவே சில கேள்விகளை முன் வைக்கிறேன். நீங்கள் பேசும் ஜாதிக்கு என்று தனியாக குருதி உள்ளதா? குருதி 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. எந்த ஜாதியினராக இருந்தாலும் இந்த நான்கு வகை குருதிதான் ஓடுகிறது. அறுவை சிகிச்சைக்கு ஒரு வன்னியருக்கு குருதி தேவைப்பட்டால் எனக்கு வன்னியர் குருதி மட்டுமே வேண்டும் என்று எந்த நோயாளியாவது கூறுவாரா? ஜாதியைத் தீவிரமாக ஆதரிக்கிற ஒருவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு வந்தால், நான் வன்னியன், வன்னியன் சிறுநீரகத்தை மட்டுமே பொருத்த வேண்டும். நான் கவுண்டர், கவுண்டர் ஜாதி கண்களை மட்டுமே எனக்கு பொருத்த வேண்டும் என்று கூறுவதற்கு தயாராக இருக்கிறார்களா? கேட்கமாட்டார்கள்; உயிர் பயம்.

ஒரு ஜாதிப் பற்றுள்ள மருத்துவர், தன்னிடம் சொந்த ஜாதி நோயாளிகள் வந்தால் மட்டுமே போதும். மற்ற ஜாதிக்காரர்கள் வேண்டாம் என்று கூறுவாரா? ஆக உயிர் பயம் என்றால் அங்கே ஜாதி பார்ப்பதில்லை. பணம் வருகிறது என்றால் ஜாதி காணாமல் போய்விடுகிறது. திருமணம் என்று வந்தால் மட்டும் ஜாதி வந்துவிடுகிறது. ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் போது எத்தனையோ லட்சம் கருமுட்டைகளில் ஒரு கரு முட்டையால் மட்டுமே குழந்தை உருவாகிறது. அந்தக் கரு முட்டை எந்த ஜாதிக்குரியது என்று கூற முடியுமா? புத்தரும், வள்ளுவரும், வள்ளலாரும் ஜாதியை எதிர்த்தார்கள். “ஒரு பைசா தமிழன்” பத்திரிகை நடத்திய நமது மூதாதையர் அயோத்தி தாசப் பண்டிதர், ஆதி திராவிடர்களை ஜாதியற்ற வர்களாக அரசுப் பதிவேடுகளில் பதியச் சொன்னார். அரசியல் சட்ட வரைவுக் குழு தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை தூக்கியெறிந்தபோது பிற்படுத்தப்பட் டோருக்கான ஆணையம் நியமிக்கப்படாததை சுட்டிக் காட்டினார். தாழ்த்தப்பட்ட தலைவர்களும் பிற்படுத்தப்பட்ட தலைவர்களும் இணைந்து போராடியதால்தான் நமக்கான உரிமைகள் கிடைத்தன. இந்த இடஒதுக்கீட்டு உரிமையால் பயனடைந்த மருத்துவர் ராமதாஸ், இப்போது தலித் மக்களுக்கு எதிராகப் பேசுவது என்ன நியாயம்?

ஒடுக்கப்பட்ட கறுப்பர் இன மக்களின் விடுதலைக்காக வெள்ளைநிற வெறியை எதிர்த்து  அமெரிக்காவில் பல தலைவர்கள் போராடி னார்கள். அதன் விளைவால் கறுப்பர் இனத்தைச் சார்ந்த ஒபாமா, அந்நாட்டில் இரண்டாவது முறையாக அதிபராகியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பூர்வக்குடிகளான பழங்குடி மக்களை கொன்று குவித்துவிட்டு, அங்கே வெள்ளையர்கள் அதிகாரத்தைப் பிடித்தார்கள். அதற்காக ஆஸ்திரேலியப் பிரதமர், பழங்குடி மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். சர்வதேச அளவிலான இன ஒதுக்கல் தடை சட்டத்தில் ஜாதி ஒதுக்கலையும் சேர்க்கவேண்டும் என்று அய்.நா.வை இந்தியாவிலுள்ள ஜாதி எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தியபோது ஜாதி இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை இதில் அய்.நா. தலையிடக் கூடாது என்று இந்திய அரசு கூறியது. ஆனால், ஜாதியை ஒழிப்பதற்கு எதையாவது செய்தார்களா? தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களில் ஊட்டச் சத்து குறைந்தவர்கள் 87 சதவீதம் பேர் என்று யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது. அப்படி யானால் இந்தியாவில் சுதந்திரம் கிடைத்தது யாருக்கு? பார்ப்பன உயர்ஜாதி கூட்டத்துக்குத் தானே? ஜாதியை பாதுகாக்கப் புறப்பட்டிருப் பவர்கள் இது பற்றி சிந்திக்க மாட்டார்களா?

கூடங்குளத்தில் அணுமின் திட்டத்தின் ஆபத்துகளை எதிர்த்து, அங்கே வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடுவதை இந்திய அரசு அலட்சியப்படுத்துகிறது. கூடங்குளத்தில் 10 பார்ப்பனர்கள் இருந்திருந்தால் அத் திட்டத்தை இந்திய அரசு திணித்திருக்குமா? ஆபத்து எதுவும் இல்லை என்று பேசுகிறவர்கள், இத்திட்டத்தை மயிலாப்பூரில் தொடங்குவார்களா? ஜாதி நகர்ப் புறத்தில் ஒழிந்துவிட்டது என்று சிலர் வாதிடு கிறார்கள். எங்கே ஒழிந்திருக்கிறது? அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் தலித் மாண வர்கள் அவமதிப்புக்குள்ளாகி, தற்கொலை செய்து கொள்ளும் அவலத்தை அதுபற்றி விசாரணை நடத்திய தோரத் குழு அம்பலப்படுத்தியது. எங்கும் எதிலும் ஜாதி வெறி தலைதூக்கி நிற்கிறது.

இந்த ஜாதி நோயை ஒழிப்பதற்கான ஒரே மருந்து பெரியாரியம்தான். பெரியாரின் கொள்கை கைத் தடியையும் அம்பேத்கரின் அறிவு நூல்களையும் ஆயுதமாக்கி ஜாதியை விரட்டியடிப்போம் என்றார் மருத்துவர் எழிலன்.

வழக்கறிஞர் விஜயகுமார் : உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜயகுமார் பேசுகையில், ஜாதி ஒழிப்புக்கு தமிழகத்தில் முற்போக்கு இயக்கங்கள் அணி திரட்டப்பட வேண்டும். ஏதோ, ஒரு இயக்கத் தால் மட்டும், இதை சாதித்துவிட முடியாது. அப்படி, பல்வேறு முற்போக்கு இயக்கங்களை திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ள திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன். நிறத்தால் வேறுபட்டுள்ள கறுப்பர்கள் என்றாலும் வெள்ளை யர்கள் என்றாலும் மரபணுக்கள் (டி.என்.ஏ.) அனை வருக்கும் பொதுவானதே என்று விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. தற்போது தேர்தல் அரசியலுக்காக ஜாதியைக் கையில் எடுத்துள்ளார் இராமதாசு. அவர், இதில் வெற்றிப் பெறப்போவது இல்லை. தமிழ்நாட்டில் 1970க்கு முன்பும் சரி, அதற்குப் பிறகும் சரி, ஆட்சியைப் பிடித்த கட்சிகள், அதற்காக ஜாதி வெறியைத் தூண்டிவிட்டதாக வரலாறு இல்லை. ஆட்சியமைப்பதற்கு ஜாதி வெறி பயன் பட்டதும் இல்லை. ஜாதி ஒழிய கல்வி அடிப்படை யானது. கல்வி இப்போது தனியார் மயமாகி வியாபாரமாகி விட்டது. அதை எதிர்த்துப் போராட வேண்டும். மருத்துவர் ராமதாசு, தனது மகன் முதல்வராக முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார். அதற்காக ஜாதி வெறியைத் தூண்டிவிடுகிறார். அவர் வெற்றிப் பெறப் போவதில்லை என்றார் வழக்கறிஞர் விஜயகுமார்.

வழக்கறிஞர் ரஜினி: இந்த நாட்டில் நீதி என்பது சமூக நீதி; அநீதி என்பது மனுநீதி. பவுத்தத்துக்கும் பார்ப்பனி யத்துக்கும் இடை விடாது தொடர்ந்த யுத்தம்தான், இந்த நாட்டின் வரலாறு என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். சூத்திரர் கூலி வாங்காமல் உழைக்க வேண்டும் என்கிறது மனுநீதி. கூலி கேட்டதால்தான் கீழவெண் மணியில் 44 தலித் மக்கள் உயிருடன் எரிக்கப் பட்டனர். மனுதர்மம்தான் இவர்களை சாகடித்தது என்று குறிப்பிட்ட ரஜினி. தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாட்டில் தமிழ்  தேசியம் பேசும் கட்சிகள் டாக்டர் ராமதாசின் ஜாதிய அணி திரட்டலுக்கு எதிராக ஏன்போராட வரவில்லை. இதை எதிர்த்து களத்தில் நிற்பது திராவிடர் விடுதலைக் கழகம் தானே!  அமைப்புக்குள்ளே ஜாதியை பேசுவதும், மேடைகளில் தமிழைப் பேசுவதும்தான் தமிழ் தேசியமா? என்று கேள்வி எழுப்பினார். ஜாதியை எதிர்க்காத தமிழ்தேசியம், இந்துத்துவா தான் என்று கூறிய அவர், முதலில் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு ‘திராவிடர்’ கோட்பாட்டைக் கையில் எடுக்க வேண்டும். காதல் திருமணம் பெருக வேண்டும். திட்டமிட்டு காதலிக்கிறார்கள் என்கிறார் இராமதாசு, நாம் திட்டமிட்டே காதலிப்போம். இனி நடக்கிற திருமணங்கள் எல்லாம் திட்டமிட்ட ஜாதி மறுப்பு காதல் திருமணங்களாகவே நடக்கட்டும். தலித் மக்களுக்கு எதிராகப் பேசுவது தங்கள் கருத்துரிமை என்கிறார்கள். அதற்கு மட்டும், இவர்களுக்கு அரசியல் சட்டம் தேவைப்படுகிறது. ஆனால், உள்துறை அமைச்சர் ஷிண்டே, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் பயிற்சி முகாம்களை நடத்துகிறது என்று சொன்னால் அவர் பதவி விலக வேண்டும் என்கிறார்கள். ஷிண்டேவுக்கு கருத்துரிமை கிடையாதா? என்ற கேள்வியை எழுப்பினார்.

அப்துல் சமது: தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அப்துல் சமது உரையாற்றுகையில், பெரியார் இயக் கத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான உறவுக்கு நீண்ட பாரம்பர்யம் உண்டு. அதன் தொடர்ச்சியாகவே இந்த மேடையில் பேசுகிறேன் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து என்று கூறிய பெரியார், இஸ்லாமிய மதம், திராவிடர் மதம் என்றார். பெரியார் என்றுமே எங்கள் நேசத்துக் குரிய தலைவர். உண்மையில், மனுசாஸ்திரத்தின் மறுப்புதான் இஸ்லாம் மார்க்கம். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கருத்தியலை வழங்கிய கோல்வாக்கர், வர்ணாஸ்ரமத்தை கேள்விக்குரியதாக்கி, இல்லா தொழிக்க வந்ததே இஸ்லாம் என்று எழுதினார். இஸ்லாமியர்களாகிய நாங்கள், மனு சாஸ்திர எதிர்ப்பாளர்கள். அதனால் தான் இந்த பெரியார் மேடையில் உரிமையோடு வந்து நிற்கிறோம். ஏதோ, இந்த மேடைக்கு வந்ததற்காக நான் பெரியாரைப் பேசுவதாக கருதிவிடக் கூடாது. இந்த அப்துல்சமது பேசுகிற ஒவ்வொரு மேடையிலும் பெரியாரைப் பற்றி குறிப்பிடாமல், உரை நிறைவடையாது. இன்றுவரை பார்ப்பனிய இந்துத்துவா சக்திகள் தீண்ட முடியாத நெருப்புத் துண்டாகத் திகழக் கூடிய தலைவராக பெரியார் விளங்குகிறார்.

வர்ணாஸ்ரமம் இப்போது எங்கே இருக்கிறது. அது ஒழிந்துவிட்டது என்று பேசுவோரும் இருக்கிறார்கள். இன்றைக்கும் மனித மலத்தை மனிதர்களே எடுக்கிறார்கள். இது வர்ணாஸ்ரமம் திணித்த அவலம். அந்த மலம் எடுக்கும் அருந்ததிய சமுதாயத்துக்காரர். இந்த நாட்டில் சங்கராச்சாரி யாகிவிட்டால் அப்போது வர்ணாஸ்ரமம் ஒழிந்து விட்டது என்று ஒப்புக்கொள்ள முடியும். அதுவரை வர்ணாஸ்ரமம் இங்கே நீடித்துக் கொண்டு இருக்கிறது என்பதுதான் பொருள். பெயருக்குப் பின்னால், ஜாதிப் பெயரைப் போடுவதற்கே வெட்கப்படும் நிலைமையை இந்த மண்ணில் உருவாக்கியவர் பெரியார். ஆனால், இப்போது ஜாதியை பகிரங்கமாக நியாயப்படுத்தி சிலர் பேசுகிறார்கள்.  மாமல்லபுரத்திலே பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சித்ரா பவுர்ணமி விழாவில் ஒரு நாடகம் போட்டிருக்கிறார்கள். மக்கள் தொலைக்காட்சியிலும் அது ஒளிபரப்பப்பட்டதை நான் பார்த்தேன். அதில் வன்னியர்கள், ஷத்திரிய வம்சத்தில் வந்த பெருமைக்குரியவர்கள். நெருப்பி லிருந்து பிறந்தவர்கள் என்று, தங்களது ஜாதிய ஷத்திரிய வம்த்துக்கு பெருமை கொண்டாடி னார்கள். இப்படி ஷத்திரியர் என்பதை, இவர்கள் ஒப்புக் கொண்டாலே, பிராமணர், வைசியர், சூத்திரர் என்று சமுதாயத்தைப் பிளவுபடுத்திய மனுசாஸ்திரத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பதுதானே பொருள்? ஒருவன் தன்னை ‘பிராமணன்’ என்று அறிவித்துக் கொண்டால், ஏனைய மக்களை தங்களுக்கு கீழானவர்களாகவும், ‘சூத்திரர்’களாகவும் அறிவிக்கிறார்கள். பெரியார் எளிமையாக புரியும்படி கூறினார், “ஒரு வீதியில் ஒரு வீட்டில் மட்டும், ‘இது பத்தினி வாழும் வீடு’ என்று பெயர்ப் பலகை போட்டால் என்ன அர்த்தம்? ஏனைய வீடுகளில் வாழ்வோர் ‘பத்தினி’ கள் அல்ல என்பது தானே?” என்று கேட்டார்.

இராமதாஸ் தன்னை ஷத்திரியன் என்று கூறி, வர்ணாஸ்ரமத்தை ஆதரிக்கிறார். இராமதாசின் இந்த வர்ணாஸ்ரமத்தை நாங்கள் எதிர்க்கிறோம். வர்ணாஸ்ரம ஜாதிய ஒடுக்குமுறைகளை சந்திக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பக்கம்தான் நாங்கள் நிற்போம். அவர்களே எங்களின் உறவுகள் என்றார் அப்துல் சமது.

1932 ஆம் ஆண்டு லண்டனில் வட்டமேஜை மாநாடு நடந்தபோது, அதில் இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக பங்கேற்ற ஆகாகானை, காந்தி தொடர்பு கொண்டு, இஸ்லாமிய சமூகத்தின் 14 அம்ச கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமையை நீங்கள் ஆதரிக்கக்கூடாது என்று கேட்டபோது, காந்தி அவர்களே, நாங்கள் அம்பேத்கர் பக்கம்தான் நிற்போம் என்று உறுதியாகச் சொன்னார் ஆகாகான். இந்த செய்தியை புரட்சியாளர் அம்பேத்கரே பதிவு செய்திருக்கிறார். அவரது கருத்துத் தொகுப்பு நூல்களின் 37வது பகுதியில் இது இடம் பெற்றிருக்கிறது. அரசமைப்பு சட்ட அவைக்கு  பிரதிநிதிகளைத் தேர்வு செய்தபோது, பம்பாய் மாகாண சட்டசபையிலிருந்து அம்பேத்கரை தேர்வு செய்ய, அவருடைய கட்சி உறுப்பினர்கள் யாரும் இல்லை. எனவே வங்காள சட்டசபையிலிருந்து முஸ்லிம் லீக் ஆதரவை வழங்க முன் வந்தது; அம்பேத்கர் தேர்வு செய்யப்பட்டார்.

உலகிலேயே நாத்திகம் பேசும் ஒரு இயக்கத்தோடு, இஸ்லாமியர்கள் கைகோர்த்து நிற்பது இங்கே மட்டும்தான், வேறு எங்குமில்லை.  ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தப்பட்ட இழிவுகளும் ஒடுக்குமுறைகளும் கடவுள் பெயரால் நிலைநாட்டப்பட்டதால் அந்தக் கடவுளை எதிர்க்க பெரியார் நாத்திகம் என்ற ஆயுதத்தை எடுத்தார். அந்த புரிதல் எங்களுக்கு உண்டு. பெரியார் கொள்கையின் தொடர்ச்சியாக மனு சாஸ்திரத்தை வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து நடத்தப்படும் இந்த இயக்கத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இதில் உறுதியாக நிற்போம் என்றார் அப்துல் சமது.

வழக்கறிஞர் அஜிதா : ஜாதியம் வன்முறை வழியாக தனது அதிகாரத்தை நிறுவுகிறது. அதன் காரணமாகவே பெண்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. டெல்லி யிலே நடந்த பெண்கள் மாநாட்டில்  பெண் ணுரிமை பேசும் பெண்கள், ஜாதி எதிர்ப்பையும் பேச வேண்டும். ஜாதியத்துக்கும் பெண்ணடிமைக் கும் உள்ள உறவு இறுக்கமானது என்று பலரும் ஒப்புக் கொண்டார்கள். அய்ரோப்பிய நாடு களுக்கான நாடாளு மன்றம் இந்தியாவில் தலித் பெண்கள் மீதான வன்முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. இப்போது ஜாதியைக் காப்பாற்றும் வலிமையான அமைப்பு திருமண மாகும். எனவே ஜாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே நடக்கக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோர் குழந்தைகளை ஜாதியற்றவர்கள் என்று அறிவித்து, தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இப்போது ஜாதிக்கு ஆதரவாக பேசும் ராமதாசு, தங்கள் ஜாதியில் நடக்கும் திருமணங்களில் எந்த வன்னியரும் வர தட்சணை வாங்கக் கூடாது என்று அறிவிப்பாரா? அவரால் அப்படி கூற முடியுமா? ஜாதிக்கு ஆதரவாக பேசுவது அடிமைத் தனத்தை நியாயப் படுத் தும் காட்டுமிராண்டித் தனம் என்றார், வழக்கறிஞர் அஜீதா.

எஸ்.கே மகேந்திரன்: தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சார்ந்தவருமான எஸ்.கே மகேந்திரன், நாட்டை ஆள்வது அரசியல் சட்டம் என்று சொல்லப்பட்டா லும் மனுதர்மத்தின் ஆதிக்கமே பல துறைகளில் நீடிக்கிறது. உயர்கல்வி நிறுவனமான அய்.அய்.டி. யில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் எனது உறவுக்காரப் பெண் முதன்மையாக அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெற்றார். ஆனாலும் அவருக்கு தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் கீழ்தான் சேர்த்தார்களே தவிர, பொதுப் போட்டி யின் கீழ் சேர்க்கப்படவில்லை. இது முறைகேடு அல்லவா என்று நான் அய்.அய்.டி. பேராசிரியர் களை கேட்டபோது, அய்.அய்.டி.யில் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டால் தலித் மாணவர்கள் பார்ப்பனர் தரும் குடைச்சலில் மன நோயாளிகளாகிவிடுவதாக என்னிடம் கூறி னார்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாய பேராசிரி யர்கள்கூட அய்.அய்.டி.யில் கிடையாது. பார்ப்பனர்கள் ஆதிக்கம்தான்.

அப்துல்கலாம் ஒரு ஏவுகணையை கண்டு பிடித்தார். அதற்கு என்ன பெயர் சூட்டினார்கள்? ‘அக்னி’ என்று பெயர்  சூட்டினார்கள். கலாம் பெயரைக்கூட சூட்டியிருக்கலாம். சிறந்த விளை யாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள். அர்ஜுனன் பெயர். நியாயமாக கட்டை விரலைப் பறி கொடுத்த ஏகலை வன் பெயரையல்லவா சூட்டியிருக்க வேண்டும்?

தமிழ்நாட்டிலே இப்போதும் ஒரு தலைமைச் செயலாளராகவோ, நிதித் துறை செயலாள ராகவோ யார் வர முடிகிறது? கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுகூட தலைமைச் செயலாளர் பதவிக்கு பல மூத்த அதிகாரிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஒரு பார்ப்பன அதிகாரியை தேடிப் பிடித்துத் தானே நியமித்தார். 2001 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்காக புதிய விடுதி கட்டப்பட்டது. அப்போது நான் சட்டமன்ற உறுப்பினர். அப் போது 43 தலித் சட்டமன்ற உறுப்பினர்களுக்காகக் கட்டப்பட்ட விடுதிக்கான செலவை மட்டும் ஆதி திராவிடர் நலத் துறை நிதியிலிருந்துதான் கலைஞர் கருணாநிதி எடுத்தார்.  காலம் காலமாக நிலைத்து நிற்கும் கட்டிடத்துக்குக்கூட அவற்றை எங்களைப் போன்ற தலித் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கிட, ஆதிதிராவிடர் நல நிதியைத் தான் பயன்படுத்தினார்கள். வர்ணாஸ்ரமம் நிலை நிறுத்திய பார்ப்பன ஆதிக்கம், தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் ராமதாசு தங்களின் ஜாதிக்கான பிரதிநிதியாக தன்னை கூறிக் கொண்டு, ஜாதியை நியாயப்படுத்துகிறார். ஜாதிகளின் கூட்டமைப்பை ஊர்ஊராகக் கூட்டு கிறார். இவர், எப்படி எல்லோருக்குமான பிரதிநிதியாக இருக்க முடியும்? அதற்கான அதிகாரத்தை இவருக்கு யார் தந்தது? - என்று கேட்டார், தோழர் மகேந்திரன்.

பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் - மனு சாஸ்திரம் இப்போதும் இயங்கிக் கொண்டிருப்பதை பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டி விளக்கினார். மனு சாஸ்திரம் கட்டமைத்த ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கான இயக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாடு முழுதும் நடத்தும் என்றார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி - ஜாதி தீண்டாமை ஒழிப்புக்காக கழகம் நிறைவேற்றிய தீர்மானங்களை விளக்கி மாநாட்டை நிறைவு செய்தார். (உரை பின்னர்) சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமாறன் நன்றியுரை யுடன் இரவு 10.30 மணியளவில் மாநாடு நிறைவடைந்தது.  மாநாட்டில் கழகப் பொருளாளர் இரத்தின சாமி, அமைப்புச் செயலாளர் தாமரைக்கண்ணன், சேலம் மண்டல அமைப்புச் செயலாளர் சக்திவேலு மற்றும் மேட்டூர் மாவட்டக் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்ட அமைப்பாளர் திலிபன் தலைமையில் ஒரு வேனில் வேலூர் மாவட்ட கழகத் தோழர்களும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா. அய்யனார் தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தி லிருந்து இரண்டு வேன்களிலும், தஞ்சை தோழர்கள் ஒரு வேனிலும் அரக்கோணம் கிராமப் பெண்கள், விடுதலை இயக்கத்தைச் சார்ந்த பெண்கள் ஒரு வேனிலும் மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் நடந்த சாதிவெறித் தாக்குதல்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மாநாடு தொடங்குவதற்கு முன்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர்களோடு ஊர்வலமாகச் சென்று தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மாநாட்டையொட்டி திட்டமிடப்பட்டிருந்த ஜாதி-தீண்டாமை ஒழிப்புப் பேரணிக்கு காவல் துறை கடைசி  நேரத்தில் அனுமதி மறுக்கவே உயர்நீதிமன்றத்தில் மாநாடு நடைபெறும் நாளன்று கழக சார்பில் தடையை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் ரஜினிகாந்த், மூத்த வழக்கறிஞர் சங்கர சுப்பு வாதாடினார்கள். நீதிபதி வழக்கை வேறு தேதிக்கு தள்ளி வைத்ததால் திட்டமிட்டபடி பிப். 4 ஆம் தேதி பேரணியை நடத்த முடியவில்லை. ஜாதிகளைக் கடந்து பல் வேறு முற்போக்கு சமுதாய அரசியல் இயக்கங்களை ஒருங்கிணைத்து தலித் மக்களுக்கு ஆதரவாகவும் ஜாதி வெறி சக்திகளுக்கு எதிராகவும் திராவிடர் விடுதலைக் கழகம் மேற்கொண்டுள்ள முயற்சியை மாநாட்டில் பேசிய பலரும் பாராட்டினர்.

Pin It