விவசாய மான்யம், உணவு மான்யம் போன்ற மான்யங்கள் வழங்குவதால்தான் கடும் நிதி நெருக்கடிகளை சந்திப்பதாக மத்திய அரசு புலம்புகிறது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள சர்வதேச நிதியமைப்புகளான உலக வங்கி, சர்வதேச நிதியமைப்பு போன்ற நிறுவனங்களும் இதே கருத்தையே வலியுறுத்துகின்றன. ஆனால், பெரும் தொழில் நிறுவனங்களான கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் பெரும் தொகை ஒவ்வொரு ஆண்டும் தள்ளுபடி செய்யப்படுவது பற்றி, பார்ப்பன ஊடகங்களோ, இந்திய பார்ப்பன ஆட்சியோ, சர்வதேச நிதியமைப்புகளோ, வாய் திறப்பதில்லை.

• 2005 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை பெரும் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் தள்ளுபடி செய்யப்பட்ட வருமான வரி மட்டும் ரூ.3,95,878 கோடி. (2005 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக 48.17 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது)

• இதே காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள ‘எக்சைஸ்’ வரி – ரூ.9,55,726 கோடி. (217.81 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது)

• இதே காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட சுங்கவரி (கஸ்டம்ஸ் டூட்டி) – ரூ.12,22,438 கோடி. (75.1 சதவீதம் அதிகரிப்பு)

• ஆக மொத்தம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2005-2006 இல் தொடங்கி, 2011-2012 வரை இந்திய அரசு தள்ளுபடி செய்துள்ள வரி – ரூ.25,74,042 கோடி (25 அய்ந்து லட்சத்து 74 ஆயிரத்து 42 கோடிரூபாய்).

2005 -06 ஆம் ஆண்டு நிதியாண்டு தொடங்கி, இப்படி தள்ளுபடி செய்வது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்து 112.6 சதவீத அதிகரிப்பில் வந்து நிற்கிறது. (ஆதாரம்: நிதிநிலை அறிக்கைகள்) (பி.சாய்நாத் – ‘இந்து’ நாளேட்டில் (மார்ச் 21, 2012 எழுதிய கட்டுரையிலிருந்து)

பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் பெரும் தொழில் நிறுவனங்களும் இப்படி மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பது மட்டுமல்ல, பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களும் கோடி கோடியாய் சொத்துகளை முடக்கிப் போட்டுள்ளன. திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நடக்கும் பல்வேறு மோசடிகளை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு தொடர் கட்டுரைகளை வெளியிட்டு அம்பலப்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஏழுமலையான் என்ற கல் முதலாளியின் சொத்து ஒரு லட்சம் கோடி. ஆண்டுதோறும் வரும் உண்டியல் வருமானம் ரூ.600கோடி. தங்கம் 12 ஆயிரம் கிலோ. விலைமதிப்பற்ற ஆபரணங்கள் 11 ஆயிரம் கிலோ. வெள்ளியின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடி. 8 அடி உயர சிலைக்கு நாள்தோறும் போடப்படும் நகை 65 லிருந்து 70கிலோ தங்கம், கல் முதலாளியின் ஒரு நாள் சராசரி வருமானம். ரூ.80 லட்சத்திலிருந்து ரூ.1.5 கோடி வரை. தலையில் சூட்டப்படும் கீரிடம் 30 கிலோ தங்கத்திலால் ஆனது.

விஜய நகர தெலுங்கு மன்னன் கிருஷ்ண தேவராயன், மொழியால் ‘தெலுங்கன்’ என்றாலும் அவன் போற்றி வளர்த்தது தெலுங்கை அல்ல. பார்ப்பானையும் சம°கிருதத்தையும் தான். அவன் தான் ஏழுமலையான் மேலே உள்ள தங்க கோபுரத்தை வழங்கினான். 10,000 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தின் மீது தான் இந்த கல் முதலாளி அமர்ந்திருக்கிறான். நாடு முழுதும் இந்த முதலாளிக்கு உள்ள நிலம், 4200 ஏக்கர் என்று அண்மையில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சந்தை நிலவரப்படி இதன் மதிப்பு, 90000 கோடி என்கிறார்கள் தேவ°தான அதிகாரிகள். இது தவிர, தேவஸ்தான கட்டுப்பாட்டில் 40 கோயில்களும் அந்தக் கோயிலுக்கு பல்லாயிரக் கோடிக்கணக்கில் நகைகளும் சொத்துகளும் உள்ளன. சுரங்கக் கொள்ளை மன்னனும் கருநாடக முன்னாள் அமைச்சரும் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பவருமான ஜனார்த்தனரெட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல் முதலாளிக்கு ரூ.42 கோடிக்கு வைரம் பொதித்த நகை வாங்கிப் போட்டார்.

தேவ°தான பாதுகாப்பு மய்யத்தில் (பொக்காசம்) “பகவான்” நகைகள் வைக்கப்பட்டுள்ளன. 2006 ஆம்ஆண்டு சோதனையிட்டபோது 30 தங்கக் காசுகள் காணாமல் போனது தெரிந்தது. இந்த காசுகளை திருடியவர் தலைமை பார்ப்பன அர்ச்சகரான டாலர் சேஷாத்திரி என்பவர்தான் என்று கண்காணிப்பு சோதனையில் கண்டறியப்பட்டது. (இவர் கழுத்தில் டாலரோடு இருப்பவர்; எனவே டாலர் சேஷாத்திரி என்று அழைக்கப்படுகிறார்)

தங்க டாலர்களைக் கையாடிய அந்த பார்ப்பனர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் அதிகார வலிமை யோடு அவர் சன்னிதானத்தில் வலம் வருகிறார். திருப்பதி தேவஸ்தான விதிமுறைகளின்படி ஒவ்வொரு ஆண்டும் இந்த நகைகள் சரிபார்க்கப்படவேண்டும். ஆனால், அப்படி சரிபார்ப்பதே கிடையாது என்கிறார், ‘திருமலா தேவலாய பரிகாசனா சமிதி’ என்ற அமைப்பைச் சார்ந்த பக்தை சுசீலா. ஆந்திர மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்துக்கு நிகராக ஏழுமலையான் சொத்துகள் இருக்கின்றன. ஆனாலும், நிர்வாகம் இதை ஒழுங்காக பாதுகாக்கும் திறமையுடன் செயல்படுகிறதா என்பது சந்தேகம் தான் என்கிறார், தணிக்கை அதிகாரி இலக்குமணன் ராவ். இது தவிர ஒவ்வொரு ஆண்டும் சேவைக் கட்டணமாக ரூ.300 கோடியும், காணிக்கை செலுத்தும் முடிகளை விற்பதால் ரூ.300 கோடியும், லட்டு விற்பனையில் ரூ.100 கோடியும் கல் முதலாளிக்கு வருமானம் கொட்டுகிறது.

பார்ப்பனர்களின் சுரண்டல் மடமாகவும், அதிகார பீடமாகவும் திகழும், இத்தகைய கோயில்களில் பூசைகள் முறையாக நடக்கிறதா? ஏழுமலையானுக்கு பூசை செய்யக் கூடிய அர்ச்சகர்கள், வைகாசன ஆகமத்தைப் பின்பற்ற வேண்டியவர்கள். இவர்கள், ஏழுமலையானைத் தவிர வேறு எங்கும் பூசை செய்யக் கூடாது என்பது இந்த ஆகமவிதி. ஆனால், தலைமை அர்ச்சகப் பார்ப்பனராக உள்ள டாலர் சேஷாத்திரி பெரும் தொழிலதிபர்களுக்காக விசேட பூசைகளையும் யாகங்களையும் நடத்துவதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. பெரும் தொழிலதிபர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், பிரபலமானவர்களுடன் கோயிலின் தலைமை அர்ச்சகர்களாக உள்ள தீக்சித்துலு மற்றும் சேஷாத்திரி என்ற பார்ப்பனர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள். அடிக்கடி பம்பாய்க்கு விமானத்தில் பறந்து, பெரும் தொழிலதிபர்களுக்காக யாகம், விசேட பூசைகளை நடத்துகிறார்கள். இதற்காக திருப்பதி நிர்வாகம் ஏப்ரல் 2010 இல் குற்றம் சாட்டி கண்டித்து விளக்கம் கேட்டது. அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் ‘ஆகம’ விதிகளை காலில் போட்டு மிதித்து, பழக்க வழக்கங்கள் பற்றியும் கவலைப்படாது, அர்ச்சகர் வேலையை வளம் கொழிக்கும் தொழிலாக மாற்றிவிட்டார்கள். திருப்பதி – திருமலைஅறங்காவல் சட்டத்தின் பிரிவு 34(3)ன் கீழ் அர்ச்சகர்கள் பரம்பரை வழியில் நியமிக்கப்படுகிறார்கள்.

வைணவ பார்ப்பனர்களாக வைகாசன ஆகமம் தெரிந்தவர்களாக இருந்தால் போதும், வேறு எந்த தகுதியும் தேவை இல்லை. தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகா மாநிலங்களில் இந்தத் தொழிலில் பரம்பரையாக ஈடுபட்டுள்ள 2500 பார்ப்பன குடும்பங்கள் இருக்கின்றன. “ஒவ்வொரு நாளும் ஏழுமலையானுக்கு செய்யப்பட வேண்டிய சடங்குகள் எந்தக் குறையும் இல்லாமல் செய்து வரவேண்டும்” என்பதே ஆகமம் விதிக்கும் கட்டளை என்றும், அதை, இங்கே உள்ள அர்ச்சகர்கள் மதிப்பதில்லை என்றும், ‘ராஷ்டிரிய சம°கிருத வித்யாபீட்’ பேராசிரியர் சக்கரவர்த்தி ராகவன் என்ற பார்ப்பனரே குற்றம் சுமத்துகிறார். பெரும் தொழிலதிபர்கள் நடத்தும் ‘பாசு’, ‘சேனா’ என்ற யாகங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.10 லட்சம் செலவிடப்படுகிறது. இதில் பெரும் தொகை ‘தட்சணையாக’ கிடைப்பதால் ஆகமவிதிகளை எல்லாம் உதறிவிட்டு, ஏழுமலையான் அர்ச்சகர்கள் ஓடுகிறார்கள் என்கிறார், நாராயண சா°திரி என்ற அர்ச்சகர்.

முழுமையாக ஆகமப் பயிற்சிப் பெற்ற பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராவதை எதிர்க்கும் உச்சநீதிமன்றங்களும், பார்ப்பனர்களும் நாட்டின் ‘கல் முதலாளி’ பட்டியலில் முதலிடத்தில் நிற்கும் பணக்கார ‘கடவுளுக்கே’ ஆகமங்கள் மீறப்படுவதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இவை எல்லாம் ஏதோ நாம் இட்டுக்கட்டி எழுதுவதல்ல. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் (மார்ச் 31, ஏப். 4) வெளியிட்ட தகவல்கள் தான் இவை.

பன்னாட்டு நிறுவனங்களும் கடவுள் எனும் கல் முதலாளிகளைக் கட்டுப் பாட்டில் வைத்துள்ள பார்ப்பனர்களும் கரம் கோர்த்துக் கொண்டு நாட்டையும் மக்களையும் சுரண்டி வருவதற்கு? இதைவிட சான்றுகள் வேண்டுமா? – இரா

Pin It