இந்திய நாடாளுமன்ற குழு எதிர்க்கட்சித் தலைவர் பாரதிய ஜனதாவைச் சார்ந்த சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைச் சென்று, தமிழர் வாழும் பகுதிகளையும் சில அகதிகள் முகாம்களையும் பார்வையிட்டு, ராஜபக்சேவை சந்தித்துவிட்டு திரும்பியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கட்சிகள் இதில் இடம் பெறவில்லை. இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் கடுமையாக விமர்சித்து வரும் இந்திய கம்யூனி°ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரதிநிதிகள், இக்குழுவில் இராசபக்சேவைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு சேர்க்கப்படவில்லை என்று தெரிகிறது.

ஈழத்தில் இறுதி கட்ட இனப் படுகொலையின்போது போரை நிறுத்தி, தமிழினத்தைக் காப்பாற்றுங்கள் என்று தமிழகமே திரண்டு நின்று குரல் கொடுத்தபோது, அதை காதில் போட்டுக் கொள்ள காங்கிர° ஆட்சி தயாராக இல்லை. இனப் படுகொலை வெற்றிகரமாக நடந்து முடியட்டும் என்றே அதற்கான உதவிகளை செய்து கொண்டு காத்திருந்தார்கள். இப்போது போரின் பாதிப்புகளைக் கண்டறிய குழுவை அனுப்புகிறார்கள். ஏதோ, ராஜபக்சே ஜனநாயக ஆட்சியை நடத்தி வருவது போலவும், குற்றங்குறைகளை சுட்டிக் காட்டினால் அவரது கருணை உள்ளம் அதைக் களைவதற்கு துடித்து எழும் என்பது போலவும் ஒரு பம்மாத்து காட்டப்படுகிறது. இந்தக் குழு இப்போது அவசரமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பது ஏன்? எதிர்வரும் நவம்பரில் இலங்கையின் மனித உரிமை தொடர்பான விவாதம் அய்.நா. மனித உரிமைக் குழுவில் விவாதத்துக்கு வரவிருக்கிறது. அப்போது இந்திய நாடாளுமன்றக் குழு நேரில் பார்வையிட்டு, நிவாரணப் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக கூறிவிட்டதாக இலங்கை அரசு கூறிக் கொள்ளலாம். அதற்கு வேண்டுமானால் இக்குழுவின் பயணம் பயன்படலாம். இனப்படுகொலை நடந்து முடிந்து மூன்று ஆண்டுகளான பிறகும் ராணுவத்தின் ஆட்சியே தமிழ்ப் பகுதிகளில் தொடருவது மிகப் பெரும் கொடுமை.

இலங்கை அரசு நியமித்த விசாரணை ஆணையமே (எல்.எல்.ஆர்.சி.) இதை ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கை அரசு ஒப்புக் கொண்ட உண்மையைத்தான் இந்தக் குழுவினரும், திரும்பி வந்து கூறிக் கொண்டிருக் கிறார்கள். காங்கிர° உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி உறுப்பினர் டி.கே. ரங்க ராஜன் போன்றோர், செய்தியாளர்களிடம் கூறிய கருத்துகள் எல்லாம், ராஜபக்சே தமிழர் பிரச்சினையில் கவலையுடன் இருப்பது போன்ற தோற்றத்தையே உருவாக்கிக் காட்டுகின்றன. இதை எவரும் நம்பத் தயாரில்லை. அதிலும் டி.கே. ரங்கராஜன், தமிழ் ஈழத்தை, ஈழத்தில் தமிழர்கள் எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருப்பது தலைசிறந்த நகைச்சுவையாகும். “எங்கள் மார்க்சிய கம்யூனி°ட் கட்சி கோழிக்கோடு மாநாட்டில் ஈழப்பிரச்சினை தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தைத்தான், அகதி முகாம்களில் வாழும் தமிழர்களிலிருந்து நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் வரை அப்படியே ஆதரித்தார்கள்” என்று சொல்லாமல் விட்டாரே! அதற்காக நன்றி கூறலாம்.

இப்போதும் சிங்களவர் பகுதிகளிலே சுதந்திரமான சிவில் நிர்வாகமும், தமிழன் பகுதிகளிலே சிங்களர்களை மட்டுமே கொண்ட ராணுவ நிர்வாகத்தையும் சித்திரவதை முகாம்களையும் கொலை பீடங்களையும் நடத்தி வரும் ஆட்சியில் தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் “வாழவேண்டும்” என்று பேசுவதில் ஏதேனும் நியாயம் இருக்க முடியுமா?

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, தமிழ் ஈழத்தை ஆதரித்து கருத்துக் கூறியதால், ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் நெருக்கடிதான் உருவாகும் என்று ‘இந்து’ பார்ப்பன ஏடு தலையங்கம் தீட்டுகிறது. ராஜபக்சே என்ற சர்வாதிகாரிக்கு கோபம் வந்துவிடாமல், ‘தாஜா’ செய்து கை கட்டி வாய்ப் பொத்தி தமிழர்கள் வாழும் உரிமைகளை மன்றாடிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் கருதுகிறார்கள் போலும்! இனப் படுகொலையும் போர்க் குற்றங்களும் நடக்கும் எந்த ஒரு நாடும் இறையாண்மை பெற்றது அல்ல என்று சர்வதேச சட்டங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

ராஜபக்சே என்ற போர்க் குற்றவாளிக்கு சர்வதேச அழுத்தங்களும் நெருக்கடிகளும் உருவாக்கப்படும் முயற்சிகளே ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமே தவிர, கருணை மனுக்களைப் போடுவதால் எதுவும் நடக்காது என்பதைப் புரிந்து கொண்டாக வேண்டும்.

மற்றபடி இந்திய குழுவினர் சென்றார்கள்; திரும்பினார்கள் என்பதைத் தவிர எந்தப் பயனும் இல்லை என்று உரத்துக் கூற முடியும்.

- தலையங்கம் (புரட்சிப்பெரியார் முழக்கம்)

Pin It