தருமபுரி ஜாதிவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், தூண்டியவர்கள், நடவடிக்கை எடுக்காத அரசுத்துறை அதிகாரிகள் அனைரையும் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! -  கொளத்தூர் மணி அறிக்கை.

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாயை ஒட்டிய பகுதிகளில் நடந்தேறிய வன்முறை வெறியாட்டம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. தங்கள் ஜாதிப் பெண்ணை ஒரு தாழ்த்தப்பட்டவர் மணந்துவிட்டார் என்ற ஒற்றைக் காரணத்தை முன்வைத்து, அந்தப்பகுதிகளில் 268 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன, அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. 60 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. இந்த ஜாதி வெறிக் கோரத் தாண்டவங்களை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(2)(3), 3(2)(4), 3(2)(5) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மேலும் இவ்வாறான கொடுமைகளின் வேர்களைத் தேடிப்போனால், அப்பாவி மக்களின் ஜாதி உணர்வை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அரசியல் தலைவர்களே உள்ளனர். இவர்கள் வாயளவில் தமிழின ஒற்றுமையைப் பேசிக்கொண்டு செயலளவில் ஜாதி உணர்வுகளைத் தூண்டிவிடுபவர்களாக உள்ளனர். அண்மைக் காலங்களில் அ.இ.அ.தி.மு சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, தன் ஜாதியினர் ஜாதிவிட்டு ஜாதி திருமணம் செய்யக்கூடாது; அதனால் பாரம்பரியப் பண்பாடு சிதைந்துவிடும் என்றார்.

பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவோ, தன் ஜாதிப் பெண்களைத்திருமணம் செய்யும் பிற ஜாதியினரை வெட்ட வேண்டும் என்றார்; திடீர் கொங்குவேளாளர் சங்கத் தலைவர் மணிகண்டன் என்ற ஒருவர் தனது ஜாதியினரை, ஜாதி மறுப்புத்திருமண எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கச் செய்ததோடு, தங்கள் ஜாதிப் பெண்கள் அதிகம் பயிலும் கல்லூரிகளுக்கு முன்பாகப் போய் ஜாதி மறுப்புதிருமண எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ஜாதி மறுப்புத்திருமண இணையர்களைப் பாராட்டி, பரிசுகளை வழங்கியும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுத்தும் ஊக்குவிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு முற்றும் எதிராக இயங்கும் இவர்களைப் போன்றோர் மீது, அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக தருமபுரி மாவட்ட நிகழ்வுகளுக்குத் தூண்டுகோலாய் இருந்த இவர்கள் மீதும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து உடனடியாகக் கைதுசெய்யவேண்டும்.

அதோடு ஜாதிமறுப்புதிருமணம் செய்துகொண்ட இணையர்களின், குடும்பங்களின் பாதுகாப்புக்கு வருவாய், காவல்துறை அதிகாரிகளைப் பொறுப்பு என உச்சநீதிமன்றம் லதாசிங் வழக்கில் ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளது. இந்தச் சூழலில் தருமபுரி வன்முறை தொடங்கி முடிய ஐந்து மணி நேரத்துக்கும் மேலாகி இருந்த நிலையிலும் எந்தத்துறை அதிகாரிகளும், எந்தவித தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடாமலிருந்ததை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி, கடமை தவறிய அதிகாரிகள் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டம் பிரிவு 4 ன் கீழ் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

Pin It