86 வயது சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணமடைந்துவிட்டார். ‘மண்ணின் மைந்தர்களுக்கே முதல் உரிமை’ என்ற முழக்கத்துடன் தொடங்கிய அவரது அமைப்பு, இந்தத்துவா கொள்கையுடன் தன்னை இணைத்துக் கொண்டு, சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்களை எதிர்த்தது. அதன் காரணமாக வன்முறை கலவர பூமியாக பம்பாயை மாற்றியது சிவசேனா. பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு பம்பாயில் இஸ்லாமியர்களை திட்டமிட்டு, சிவசேனா ஆட்கள் படுகொலை செய்தார்கள். இதை ஸ்ரீ கிருஷ்ணா பரிந்துரை ஆதாரங்களுடன் பதிவு செய்தது. மதவெறியைத் தூண்டி வாக்குகளை கேட்டதால் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகள் தேர்தல் ஆணையத்தால் பறிக்கப்பட்டன. மராட்டியர்களின் ‘மராத்தா’ பெருமைகளை மதவாதத்துடன் இணைக்கும் ஆபத்தான அரசியலின் சின்னம் தான் பால்தாக்கரே!

ஒடுக்குமுறைக்கான கருவிகளாகிவிட்ட எந்த அடையாளத்தையும் காலத்தின் பழமை கருதி உயர்த்திப் பிடிப்பதும் நியாயப்படுத்துவதும் உண்மையான மக்கள் விடுதலைக்கு ஒரு போதும் உதவாது. பால்தாக்கரேக்களின் மதவெறி அரசியலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டில்கூட அவரது ஆதரவாளர்கள் பால்தாக்கரே மரணத்துக்கான அனுதாபம் பெரியார் சிலைகளை அவமதிப்பதில்தான் இருக்கிறது என்று கருதுகிறார்கள். சேலத்தில் அவரது மரண செய்தி வந்தவுடன் அவரது ஆதரவாளர்களால் பெரியார் சிலைக்கு காவி உடை போர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் பெரியார் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கும் திரு.கி.வீரமணி, பால்தாக்கரே மரணத்துக்கு ‘நாகரிகம்’ கருதி, இரங்கல் அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கும் செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. வெளிப்படையான பேச்சு போன்ற பண்புகளை மட்டும் பெரியாரியலின்  அடையாளமாகப் பார்ப்பதில் உருவாகும் ஆபத்து இது. வெளிப்படையான பேச்சு, உண்மை, நேர்மை, ஒழுங்கு போன்ற குணநலன்களை தனியே பிரித்தெடுக்காமல், அது எதற்காக எந்த நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் இணைத்துப் பார்ப்பதே பெரியாரியலின் சரியான புரிதலாக முடியும்.

86 வயது வாழ்ந்த பால்தாக்கரே மரணத்துக்காக வருந்த வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அவர் விதைத்துவிட்டுச் சென்றுள்ள மதவெறிக்காகவே நாம் கவலைப்பட்டு வருந்த வேண்டியிருக்கிறது!

Pin It