அரசு அலுவலகங்களில் மத சம்பந்தமான சிலைகள் அமைப்பதோ, பூஜைகள் நடத்துவதோ கூடாது என்று அரசு ஆணைகள் பல இருந்தும், பல சுற்றறிக்கைகள் அதிகாரிகளால் அனுப்பப்பட்டும் பல அரசு அலுவலகங்களில், இது போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்தே வருகிறது குறிப்பாக ஆயுத பூஜை பரவலாக அரசு அலுவலகங்களில் நடத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பிரச்சனைகளை கழகம் கையில் எடுத்து, அதிகாரிகளுக்கு கடிதம் வழியாக எச்சரித்து வந்தது. தோழர்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு சென்று வலியுறுத்தும் போது அவர்கள் காவல் துறையிடம் புகார் கூறும் நிலை தொடர்ந்தது. அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்பதை காவல் துறை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சேலம் மாவட்டம் மேட்டூர் காவல் நிலையத்திலும், சென்னையில் உள்ள காவல் நிலையங்களிலும் தோழர்கள் நேரடியாக தடுத்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஓரளவு காவல் நிலையங்களில் பூஜை நடத்துவது குறைந்தது. இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு சில தினங்களுக்கு முன்னரே, காவல் நிலையங்களில் பூஜை நடத்தக் கூடாது என்று சென்னை காவல் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

வழக்கம் போல் இந்த ஆண்டும், சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை நடத்துவது சட்டவிரோதம் என்று சுட்டிக்காட்டி, அதன் அரசு ஆணைகளை இணைத்து, மீறி நடத்தினால் நாங்கள் நேரடியாக தடுப்போம் என்று எச்சரித்து, முன்கூட்டியே கடிதங்களை பதிவு அஞ்சல் மூலமாக அனுப்பியிருந்தனர்.

ஆயுத பூஜை அன்று விடுமுறை என்பதால், அதற்கு முதல் நாளான 22-10-2012 அன்றே சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ஆயுத பூஜை நடத்தும் ஏற்பாடுகள் ஆடம்பரமாக நடைபெற்று கொண்டிருந்தது. இதை அறிந்த கழகத் தோழர்கள் மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் சென்று, இது சட்ட விரோதம் என்று வலியுறுத்தினர். அங்கிருந்த சிலர் பூஜை நடத்தியே தீருவோம் என்று கூறி பூஜைகளை நடத்தியதோடு, தோழர் கிருஷ்ணனை தாக்கியும் உள்ளனர். அரசு ஆணைகளை மீறி சட்ட விரோதமாக பூஜை நடத்தியதோடல்லாமல், சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கத்தில் சுட்டிக்காட்டிய தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல், கழகத் தோழர்கள் 10 பேரை காவல் துறை கைது செய்தது. மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்திவேல், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் சேலம் வீரமணி, மாநகரத் தலைவர் மூனாங்கரடு சரவணன், மாநகர பொருளாளர் அம்மாபேட்டை செந்தில், சிந்தாமணியூர் பிராகாசு, செம்மாண்டப் பட்டி சின்னத்துரை, நங்கவள்ளி சிவராஜ், கொண் டலாம்பட்டி செந்தில்குமார் ஆகிய பத்து பேர் மீதும், பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட மேலும் பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேட்டூரில்

22-10-2012 அன்று மாலை மேட்டூர் காவல் துணைக் கண்காணிப்பாளர், திராவிடர் விடுதலைக் கழக மேட்டூர் நகரத் தலைவர் பாஸ்கர், செயலாளர் சம்பத்குமார் ஆகியோரோடு, ஆயுத பூஜை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டத்தின் முடிவில், மேட்டூர் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் ஆயுத பூஜை நடத்த மாட்டோம். மற்ற அலுவலகங்களில் பூஜை நடத்தினால் எங்களிடம் புகார் கொடுங்கள், நாங்கள் தடுக்கிறோம். நீங்களாக நேரடியாக தடுக்க வேண்டாம், என்று ஒரு ஒப்பந்தம் செய்து அதில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், கழக நகரத் தலைவர், செயலாளர் ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தம் செய்து கொண்டு நகலையும் தோழர்களுக்கு வழங்கினர். மேட்டூரில் எந்த அரசு அலுவலகத்திலும் ஆயுத பூஜை நடத்தப்படவில்லை.

நங்கவள்ளி

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில், கழகத் தோழர்களின் வேண்டுகோளை ஏற்று அனைத்து அலுவலகங்களிலும் பூஜை நடத்தவில்லை. ஆனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மட்டும் பூஜை நடத்தியே தீருவேன் என்று ஊராட்சி மன்ற தலைவர் பிடிவாதமாக இருந்தார். ஆயுத பூஜை அன்று அதிகாலையில், தோழர்கள் அருள், கண்ணன், குமார், செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். தோழர்கள் மீது யாரும், எந்த புகாரும் கொடுக்காமலேயே, சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டனர். காவல் துறையின் உதவியோடு மாலை 3-00 மணி அளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மட்டும் ஆயுத பூஜை நடத்தப்பட்டது. இதை தவறு என்று சுட்டி காட்டிய கழகத் தோழர்களை அவதூறாக பேசியதோடு மட்டுமல்லாமல், காவல் நிலையத்திலும் பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டபுரம் காவல் துறை மேற்கொண்டது. பக்கத்து ஊரில் உள்ள தோழர்கள் புறப்பட தயாரான நிலையில் காவல் நிலையத்தில் பூஜை நிறுத்தப்பட்டது. காவல் துறையின் மோசமான செயல்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Pin It