இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சி அதிகாரம் பார்ப்பன-பனியா-பன்னாட்டு சக்திகளிடமே இருக்கிறது! இந்த உண்மை இப்போது நடந்துள்ள அமைச்சரவை மாற்றத்திலும் பளிச்சிடுகிறது.

ஆங்கில நாளேடு ஒன்று உ.பி.யில் பார்ப்பனர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, அக்.29)

உ.பி.யிலிருந்து 3 பார்ப்பனர்கள் அமைச்சரவையில் முக்கிய துறைகளுக்கு உயர்த்தப் பட்டுள்ளனர். இணை அமைச்சராக இருந்த ஜிதின் பிரசாத்துக்கு கூடுதலாக இராணுவத் துறையும், இராஜிவ் சுக்லாவுக்கு மனித வளத் துறை மற்றும் திட்டத் துறையும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பார்ப்பனர்களுமே காங்கிரசிலிருந்து அதிருப்தியுற்று விலகி நின்றவர்கள்.  பாரதிய ஜனதா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி விசு வாசிகளாக மாறிவிட்டவர்கள். ஆனாலும்கூட பார்ப்பனர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடனேயே இவர்கள் கவுரவிக்கப் பட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பன ஓட்டு வங்கியை குறி வைத்து இந்த மாற்றம் நடந்துள்ளது என்று அந்த ஆங்கில ஏடு எழுதுகிறது. ராஜிவ் சுக்லாவுக்கும் கூடுதல் துறை ஒதுக்கிய செய்தி காங்கிரஸ் வட்டாரத்திலேயே வியப்பை உருவாக்கியுள்ளதாம். காரணம் காங்கிரஸ் கட்சியை தனது சமூகத்துக்குள் செல்வாக்கு பெறச் செய்ய எந்த முயற்சியையும் சுக்லா மேற்கொண்டதில்லையாம். மாநிலங்களவை உறுப்பினரான சுக்லா காங்கிரஸ் தொண்டர்களிடமும் தொடர்பு இல்லாதவர் என்றும் செய்திகள் கூறுகின்றன. மனித வளத் துறை என்பது சமூக நீதியான இடஒதுக்கீட்டை கவனிக்கும் முக்கியத்துவம் பெற்ற துறை. இதற்கு ஒரு பார்ப்பனரை அமைச்சராக்கியுள்ளது பார்ப்பனர்களை மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோல் உ.பி. அமைச்சர்களான பெனி பிரசாத் வர்மா, பிரகாஷ் ஜெய்ஸ்வால் போன்ற பார்ப்பனர்கள் காங்கிரசுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசி வந்தவர்கள் என்றாலும், அவர்களுக்கு ஏற்கனவே இருந்த துறைகள் அப்படியே ஒதுக்கப்பட்டுவிட்டன;

அதேபோல், மத்திய அரசை ஆட்டிப் படைத்து வரும் சக்திகளாக தொழிலதிபர் அம்பானி குழுமம் இருப்பதையும், அமைச்சரவை மாற்றம் உணர்த்தியிருக்கிறது. பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டியிடமிருந்து அத்துறை பறிக்கப்பட்டு, அறிவியல் தொழில்நுட்பத் துறை அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா-கோதாவரி நதிப் படுகையில் இயற்கை எரிவாயு எடுக்கும் உரிமம் பெற்றிருந்த ரிலையன்ஸ் நிறுவனம் - அரசுடன்  செய்து கொண்ட ஒப்பந்தப்படி எரிவாயு எடுக்காமல், பாதியளவு மட்டுமே எடுத்துள்ளது. இதை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி தட்டிக் கேட்டார். எரிவாயுவின் விலையை உயர்த்த வேண்டும் என்ற ரிலையன்ஸ் குழும கோரிக்கையையும், மத்திய அமைச்சரவையின் உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு எதிரானது என்று கூறி, ஜெய்பால் ரெட்டி நிராகரித்துவிட்டார். காக்கி நாடாவிலிருந்து தூத்துக்குடிக்கு குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகும் தொடங்கவில்லை. இதையும் ஜெய்பால் ரெட்டி கேள்வி கேட்டு ரிலையன்ஸ் நிறுவனத் துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார்.

ஜெய்பால் ரெட்டி அமைச்சரானவுடனேயே ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நெருக்கமாக இருந்த பெட்ரோலியத் துறை செயலாளரை நீக்கினார். இவருக்கு முன் இத்துறைக்கு அமைச்சராக இருந்தவர் முரளி தியோரா என்ற மராட்டியப் பார்ப்பனர். இவர் அம்பானி குழுமத்தின் முகவராகவே செயல்பட்டார். அம்பானியின் பரிந்துரையிலேயே அமைச்சர் பதவி பெற்றவர் என்று அப்போதே செய்திகள் கசிந்தன. தியோராவின் வெளிப்படையான அம்பானி ஆதரவு செயல் பாடுகளால் அவர் நீக்கப்பட்டார். ஜெய்பால் ரெட்டி பதவிக்கு வந்தப் பிறகு, இந்த மாற்றம் ‘கண் துடைப்பு’ தான் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல், அம்பானியின் குறுக்கீடு களை உறுதியோடு எதிர்த்தார் ஜெய்பால் ரெட்டி. வி.பி.சிங் அமைச்சரவையில் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். அழுத்தமான சமூகநீதிப் பார்வை கொண்டவர். மண்டல் குழு பரிந்துரைக்கு எதிராக பார்ப்பன சக்திகள் கிளர்ந்தெழுந்தபோது வி.பி.சிங் பக்கம் உறுதியாக நின்றவர். இப்போது நேர்மையான நடவடிக்கைகளுக்கு தனது துறையைப் பலி கொடுத்துள்ளார்.

கட்சிக்கே துரோகம் செய்தாலும் பார்ப்பனர்களை திருப்திப் படுத்த விரும்பும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, அம்பானியின் முறைகேடுகளை எதிர்த்து நேர்மையாக செயல்பட்ட ஒருவருக்கு தண்டனையும் வழங்குகிறது.
ஆக, மத்திய ஆட்சி என்பது பார்ப்பன பனியாக்களின் ஆட்சி என்பதையே மீண்டும் இந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன!

Pin It