பார்ப்பன இந்துத்துவ சக்திகள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்வேறு மாநிலங் களில் பார்ப்பனியப் பண்பாட்டை சட்டங்களால் திணித்து மீண்டும் ‘ராமராஜ்யத்தை’ உருவாக்க முயன்று வரும் அதிர்ச்சியான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறப்பாக நிர்வாகம் நடக்கிறது என்றும், வளர்ச்சிப் பாதையில் நடை போட்டு வருகின்றன என்றும் ‘துக்ளக்’ போன்ற பார்ப்பன ஏடுகள், பரப்புரை செய்து வருகின்றன.  ஆனால் இங்கே என்ன நடக்கிறது?

நித்தின் கட்காரி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் - பா.ஜ.க.வின் தலைவரான பிறகு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமை யாகக் கொண்டுவந்துவிட்டது. இதற்காக ஆர்.எஸ். எஸ். நடத்தும் பல்வேறு ‘சங் பரிவாரங்களின்’ பிரதிநிதிகளும் பா.ஜ.க.வினரும் அவ்வப்போது கூடிப் பேசும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு நடத்தப் படுகின்றன. ‘சமன்வயா பைதாக்’ (இணைந்து நிற்போம்) என்ற பெயரில் நடக்கும் இந்த கூட்டங் களில் பா.ஜ.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆக.2011 இல் உஜ்ஜயின் நகரில் நடந்த இந்த ‘இணைப்பு’ கூட்டத்தில் ஒரு முக்கிய சூழ்ச்சிகரமான முடிவு எடுக்கப்பட்டது. அதாவது, பா.ஜ.க.வின் தேசிய தலைமை அன்னா அசாரே, ராம்தேவ் போன்றவர்களுடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு பற்றி பேசிக் கொண்டே, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மதவெறி சட்டங்களை தீவிரமாகக் கொண்டு வந்துவிட வேண்டும் என்றும், இதனால் ஊடகங்கள் மக்களின் கவனம், ஊழல் எதிர்ப்பில் மட்டும் திருப்பி விடப்படுவதால், ‘இந்துத்துவ’ சட்டங்களை கவனக் குவிப்பு இல்லாமல், அமுல்படுத்தி விட முடியும் என்றும் முடிவு செய்துள்ளனர். இந்த செயல்முறை வேகமாக அரங்கேறி வருகிறது.

ம.பி.யில் சிவராஜ் சிங் சவுகான் தலைமை யில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி, 2004 ஆம் ஆண்டு முதல் அங்கே அமுலில் உள்ள ‘பசுவதை தடுப்புச்  சட்ட’த் தில் கடுமையான திருத்தங்களைச் செய்துள்ளது. இதன்படி மாட்டுக் கறி சாப்பிடுவதே குற்றமாக அறிவிக் கப்பட்டுள்ளது. பசு மாட்டை வெட்டுவதாக புகார் வந்தால், 7 ஆண்டுகள் சிறைத் தண் டனை என்று சட்டத் திருத்தம் கூறுகிறது.

தடா, பொடா போன்ற காட்டுமிராண்டி சட்டங்களைப்போல் குற்றம்சாட்டப்பட்டவர்தான் தன்னை குற்றவாளியல்ல என்று நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது. ஒரு தலைமை போலீஸ்காரரே ஒரு வீட்டுக்குள்ளோ, உணவு விடுதிக்குள்ளோ நுழைந்து மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று ஒருவரைக் கைதுசெய்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ‘பசுவதைத் தடுப்பு’ என்ற பார்ப்பனிய சட்டம் அமுலில் உள்ளது. ஆனால், சாப்பிடுகிறவர்களையும் குற்றவாளி யாக்கும் சட்டம் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லை. மற்றொரு செய்தியையும் குறிப்பிட வேண்டும்.

குஜராத்தில் கேசுபாய் பட்டேல் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்தபோது (1998-2001) மாட்டுக் கறியை சாப்பிடுவதையே குற்றம் என்று அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அப்போது மத்தியில் வாஜ்பாய் பிரதமர். மத்திய பா.ஜ.க. ஆட்சியே இந்த அரசாணையை திரும்பப் பெறுமாறு கேட்டதற் கிணங்க கேசுபாய் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். ஆனால், இப்போது ‘மதச்சார்பின்மை’ பேசிக் கொண்டிருக்கும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் குடியரசுத் தலைவர் இந்த பார்ப்பனிய சட்டத்துக்கு கடந்த 2011 டிசம்பர் 22 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளார். மத்திய பிரதேச அரசிதழிலும் இது வெளியிடப்பட்டு விட்டது. ம.பி. மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியும், சட்டசபையில் மென்மையான எதிர்ப்பை பதிவு செய்து, ஒதுங்கிக் கொண்டுவிட்டது.

ம.பி.யில் போபாலிலும் ஏனைய நகரங்களிலும் மாட்டுத் தொழுவம் போன்ற குடிசைகளில்தான் முஸ்லீம்கள் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சியில் இப்படி வாழும் முஸ்லீம்களின் ‘தொழுவங்கள்’ பல மடங்காக அதிகரித்து விட்டது.

முதலமைச்சர் சவுகான், 2006 இல் ‘பசு புனிதமான மிருகம்’ என்று அறிவித்து, 200 ஹெக்டர் நிலப் பரப்பில் கிழடு தட்டிப் போன பசு மாடுகளைப் பராமரிக்கும் ‘கவுசலா’க்களை அரசு செலவிலேயே அமைத்துள்ளார். ‘பசு பாதுகாப்பு வாரியம்’ ஒன்றை யும் அரசு அமைத்துள்ளது. அரசு நிதி உதவியோடு மாநிலம் முழுதும் ஏராளமான பசு பாதுகாப்பு மய்யங்கள் உருவாக்கப்பட்டு, பல கோடி பணம் செல விடப்படுகிறது. இதில் ஊழல் தலைவிரித்தாடுவதாக பல தொண்டு நிறுவனங்களும் எதிர்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

பசுவுக்கு மட்டும் பாதுகாப்பு தரும் ம.பி. அரசு எருதுகளை வெட்ட அனுமதித்துள்ளது. இந்தியாவி லிருந்து எருதுகளைஏற்றுமதி செய்வதில் முதலிடம் ம.பி. மாநிலம்தான். ‘பசு’, ‘பிராமணன்’ ஆகவும், ‘எருது’, ‘சூத்திரன்’ ஆகவும் கருதப்படுகிறது. எனவே தான் பார்ப்பனர் மாடு வளர்த்தால் பசு மாட்டை வளர்ப்பார்களே தவிர எருதுகளை வளர்க்க மாட்டார்கள்.

அதுமட்டுமல்ல, அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். சில் சேரலாம். அது கலாச்சார அமைப்பு என்று ம..பி. அரசு 2006 பிப்ரவரியில் அறிவித்தது.

அரசுத் திட்டங்களின் பெயர்கள்கூட ‘இந்துத்துவ’ கண்ணோட்டத்திலேயே சூட்டப்படு கின்றன. பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான திட்டத்துக்கு ‘லாட்லி லட்சுமி’ என்றும், நீர்வள மேம்பாடு திட்டத்துக்கு ‘ஜலாபிஷேக்’ என்றும் கல்வி மேம்பாடு திட்டத்துக்கு ‘தேவ் புத்ரா’ என்றும் பெயர்சூட்டியிருக்கிறார்கள்.

ம.பி.யில் அரசு பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு ‘சூரிய நமஸ்காரம்’ 2007 ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட வரும் குழந்தைகள், உணவுக்கு முன் ‘போஜன் மந்திரா’ என்ற சமஸ்கிருத மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். கீதையின் மய்யக் கருத்துகள் பள்ளிகளில் கட்டாயமாக கற்றுத் தரப்படவேண்டும் என்று 2011 இல் மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து சில அமைப்புகள் நீதிமன்றம் போனாலும், மாநில உயர்நீதிமன்றம் அரசு உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறிவிட்டது.

புராணங்களில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படும் மகேசுவர், உஜ்ஜயின் போன்ற நகரங்களை ‘புண்ணிய நகரங்களாக’ அறிவித்துள்ளதோடு அதற்கு இந்து புராணப் பெயர்கள் சூட்டப்பபடு கின்றன.

ஆர்.எஸ்.எஸ். அரசு உதவியோடு நடத்தும் ‘ஏகல் வித்யாலயா’ பள்ளிகளில் சரசுவதி வந்தனம், சமஸ்கிருத சுலோகங்களை ஓதுவது அனைத்து மதப் பிரிவு மாணவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட் டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கை ஏராளமாக அதிகரித்துள்ளது.

அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக் கழகங்களும் சங்பரிவார் பரப்புரை மய்யங்களாக மாற்றப்பட்டுள்ளன. பழங்குடி மக்கள் வழிபட்டு வந்த ஆண், பெண் கடவுள்களும் ‘இந்து’ கடவுள் களாக மாற்றப்பட்டுவிட்டன.

கிறிஸ்தவர்கள் நடத்தும் நிறுவனங்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்துமாறு மாவட்ட நிர்வாகத் துக்கு அரசு 2010 இல் ரகசிய உத்தரவு பிறப்பித்தது. ஊடகங்களில் இந்த செய்தி வெளியானவுடன் அரசு உத்தரவை திரும்பப் பெற்றது.

மதமாற்றத்தைத் தடை செய்யும் கடுமையான சட்டம் ஒன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட் டுள்ளது. சிறப்பு ராணுவ அதிகாரச் சட்டங்களைப் போல் கடுமையான பிரிவுகளை உள்ளடக்கி யிருக்கிறது இந்த சட்டம்.

அரசின் பசு பாதுகப்பு சட்டத்தால் முஸ்லீம்கள், தலித்துகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இறந்த பசு மாட்டுத் தோல் மற்றும் கொழுப்புகளைப் பயன்படுத்தி அந்தத் தோலைக் கொண்டே செருப்புகளை தயாரிக்கிறார்கள். ‘சாமர்’ என்ற தலித் பிரிவினர்; அவர்கள் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு விட்டது.

இந்தியாவில் மக்கள் அதிகமாக சாப்பிடு வது மாட்டிறைச்சிதான். ஆண்டுக்கு 26 லட்சம் டன் மாட்டிறைச்சியை இந்தியர்கள் சாப்பிடுகிறார்கள். 6 லட்சம் டன் ஆட்டிறைச்சியும், 14 லட்சம் டன் பன்றி இறைச்சியையும், இந்தியர்கள் சாப்பிடு வதாக அய்.நா.வின் கால்நடை குறித்த தகவல், பகுப்பாய்வு மய்யம் கூறுகிறது. உலகில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் இருக்கிறது. ஆண்டுக்கு 1.28 மில்லியன் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதியாகிறது. இதே ம.பி. மாநிலம் போபாலில் தான் இந்தியாவின் மிகப் பெரிய எருது மற்றும் ஆடு வெட்டும் நிறுவனங்கள் உள்ளன. இதை நடத்துகிறவர்கள், இந்து ‘பனியா’க் களும் ‘ஜெயின்’ பிரிவினரும் தான்.

அமெரிக்காவில் வாழும் பார்ப்பனர்களும் பனியாக்களும் ‘விசுவ இந்து பரிஷத்’ அமைப்பை உருவாக்கி, ‘இந்திய வளர்ச்சி மற்றும் புனர்வாழ்வு நிதியம்’ (ஐனேயை னுநஎநடடியீ யனே சுநடநைக குரனே) என்ற தொண்டு நிறுவனத்தின் வழியாக பல ஆயிரம் கோடி டாலர்களை இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு திருப்பி விடுகிறார்கள்.

இயற்கையை வழிபடும் பழங்குடி மக்களை ‘இந்து’க்களாக மாற்றும் ‘ஷுருதி மேளா’ (தூய்மைப் படுத்தும் சடங்கு)க்களை விசுவ இந்து பரிஷத் நடத்தி வருகிறது. உ.பி., அரியானா, ஜார்கன்ட் மாநிலங்களில் இந்த மதமாற்ற சடங்குகள், கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளன. 2011 டிசம்பரில் உ.பி. மாநிலம் ஷாஜான்பூரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் 1200 பழங்குடிமக்கள் - ‘இந்து’க்களாக மாற்றப்பட் டுள்ளனர். இந்துக்களான பிறகு இவர்கள் எந்த சாதிப் பிரிவில் சேர்க்கப்படுவார்கள்? நிச்சயமாக இந்துமதம் ‘அவர்ணஸ்தர்களாக’ அறிவித்துள்ள தாழ்த்தப் பட்டோர் பிரிவில்தான் இவர்களுக்கு இடம் வழங்கப்பட்டிருக்கும்.

பசுவுக்கு ஆணையமாம்!

இந்தியாவில் 35000 கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் வித்யாபாரதி மற்றும் ஏகல் வித்யாலயா பள்ளிகள் நடக்கின்றன என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதில் ‘இந்துத்துவ’ கோட்பாடுகளே பாடங் களாக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர், உத்தரகாண்ட் மாநிலங்களில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சிகள், ‘இந்துத்துவ’ ஆட்சிகளாகவே செயல்படுகின்றன. உத்தரகான்ட் மாநிலத்தில் ‘கோமாதா’ (பசு வணக்கம்) வழிபாடும், சமஸ்கிருதப் பாடங்களும் மாணவர்களிடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட்டில் பசு பாதுகாப்புக்காக முழு அதிகாரத்துடன் நிர்வாக அமைப்புகளோடு, ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு பசு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு, பசுவை வெட்டுவதையும், கடத்துவதையும் குற்றமாக்கி யுள்ளது. மாநிலம் முழுதும் ‘கோ சாதனா’ என்ற பெயரில் பசு காப்பு மய்யங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படும் மய்யங்களுக்கு அரசு விருதுகளை வழங்கி வருகிறது.

பசு மாட்டு மூத்திரத்தை ஆராய்ச்சி செய்யும் சோதனைச் சாலைகளை இம்மாநில அரசு நடத்துகிறது. பல ஆராய்ச்சி நிலையங்களுக்கு பசு மாட்டு மூத்திரத்தை மாநில அரசே சேகரித்து அனுப்பி வருகிறது. டேராடூம் மாவட்டத்தில் கால்சி எனும் பகுதியில் பசு மூத்திரத்தை பதப்படுத்தும் மய்யம் ஒன்று செயல்படுகிறது. யோகா மய்யம் நடத்தும் பாபாராம்தேவ் தனது நிறுவனத்தின் மருந்து உற்பத்திக்காக ஒவ்வொரு மாதமும் இந்த மய்யத்திலிருந்து 40 லிட்டர் பசு மூத்திரத்தை லிட்டர் ரூ.20 என்ற விலைக்கு வாங்குகிறார்.

உத்திரகாண்ட் ஆட்சி ரிஷி கேஷத்தில் ‘பசு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம்’ ஒன்றை நிறுவியுள்ளது. இதற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட் டுள்ளது.

உத்தரகாண்டில்....

கடந்த பத்தாண்டுகளாக உத்திரகாண்டில் பா.ஜ..க. ஆட்சியே நடக்கிறது. 100 சமஸ்கிருத பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை உருவாக்கி, வேதம் தொடர்பான பார்ப்பன சடங்குகளைப் பயிற்றுவித்து வருகிறது. இந்தக் கல்லூரிகளுக்கு அரசு நிதி உதவி வழங்குவதோடு ஆசிரியர்களுக்கும் அரசு ஆசிரியர்கள் பெறும் ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. சமஸ்கிருதம் - அன்றாடம் பயன்படுததப்படும் வழக்கு மொழியாக மாற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று ஒரு மூத்த அதிகாரி கூறுகிறார்.

சமஸ்கிருதத்துக்காக தனிப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளதோடு, நான்கு பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கப்படுகிறது. சமஸ்கிருத பள்ளிகளுக்கு இலவச மதிய உணவு, பாட நூல்கள், கணினிகளை வழங்கி, மாணவர்களுக்கு உதவித் தொகைகளையும் அரசு வழங்குகிறது. சமஸ்கிருத வளர்ச்சிக்காக சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட் டுள்ளார். அரசு ஆவணங்கள்  சமஸ்கிருத மொழிகளிலேயே கிடைத்து விடுகின்றன. சமஸ்கிருதத்திலேயே உரையாட பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இதுவரை பயிற்சி பெற்றுள்ளனராம். சமஸ்கிருத மொழி வழியாகவே சமஸ்கிருத பாடங்கள் நடத்தப்படுகின்றன.

சமஸ்கிருதம் - ஆட்சி மொழி

அரசின் இரண்டாவது ஆட்சி மொழியாக சமஸ்கிருதத்தை உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே இப்படி அறிவித்துள்ள முதல் ஆட்சி உத்தரகாண்ட்தான். அரசு தலைமைச் செயலகத்தில் பெயர்ப் பலகைகளில் சமஸ்கிருதம் இடம் பிடித்துவிட்டது. அரசு இரண்டு கிராமங்களை தேர்வு செய்து (தம் தோலா மற்றும் சிமோத்தா) சமஸ்கிருத கிராமமாகவே மாற்றும் முயற்சிகளை முடுக்கிவிட்டு, அன்றாடம் பேசும் மொழியாகவே சமஸ்கிருதத்தை மாற்றப் போகிறார்களாம். அரித்துவார் மற்றும் ரிஷிகேஷ் நகரங்கள் சமஸ்கிருத நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேதம், புராணங்களில் பயிற்சிப் பெற்ற (பார்ப்பன) புரோகிதர்களின் தேவை அதிகரித்து வருகிறது என்றும், அதற்கு ‘புரோகிதர்களை’ உருவாக்கும தங்களின் முயற்சிகள் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என்றும் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான சுஷில் உபாத்யாயா  என்ற பார்ப்பனர் கூறுகிறார். ராணுவத் துறையில்கூட பார்ப்பன பண்டிதர்களுக்கான தேவைகள் இருப்பதாகவும் அதற்கும் பண்டிதர்களை அனுப்பவிருப்பதாகவும் அவர் கூறுகிறார். குப்தர் ஆட்சி காலத்தில் நடந்ததுபோல் பார்ப்பனர்கள் பா.ஜ.க. ஆட்சியில் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்துவ மதத்தினருக்கு பாதுகாப்பு இல்லை. ‘தரம் சேனா’ போன்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மதமாற்றம் நடக்கிறதா என்பதை சோதனையிடப் போவதாகக் கூறி, கிறிஸ்தவ வழிபாட்டுத் தளங்களுக்குள்ளும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களுக்கும் அத்துமீறி நுழைந்து விடுகிறார்கள். சர்ச்சுக்குப் போகிறவர்கள் தாக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் அச்சத்தின் பிடியிலேயே வாழ்வதாக சத்தீஸ்கர் கிறிஸ்தவ கழகத்தின் தலைவர் அரண்பண்ணலால் என்பவர் கூறுகிறார். கிறிஸ்துவர்கள் நடத்தும் கான்வென்ட் பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சரசுவதி பூசைகளை நடத்துகிறார்கள். காவல்துறையில் புகார் தந்தால் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் கூறுகிறார்கள். பாதிரியார்களும் கிறிஸ்தவ குடும்பத்தினரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் தாக்கப்படுகிறார்கள்.

குஜராத்தில் மோடி ஆட்சியை பொற்கால ஆட்சியாக பார்ப்பனர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பட்டேல்களையும் பன்னாட்டு நிறுவனங்களையும் கொழுக்க வைத்துக் கொண்டிருக்கிறது மோடி ஆட்சி. குஜராத் இனப் படுகொலையில் ‘மத வெறுப்பாளராக’ சர்வதேச அடையாளம் பெற்று விட்ட மோடி, இப்போது, ‘மதச்சார்பின்மை’ காவலராக தன்னை அடையாளம் காட்ட, உண்ணாவிரத நாடகங்களை நடத்தி வருகிறார். உதட்டளவில் ஏமாற்றுப் பேச்சுகளை உதிர்த்து வரும் அவரிடம் செயலில் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை என்பதையே அங்கிருந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன.

(அது பற்றி அடுத்த இதழில்) தகவல்: ‘பிரண்ட்லைன்’ (பிப்.26, 2012)

Pin It