ஈழத்தில் தமிழர்கள் தங்கள் இறை யாண்மைக்குப் போராடுவதற்கு முழு உரிமை படைத்தவர்கள். அது ஒன்றுதான் தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து பாதுகாக்கும் என்று பிலிப்பைன்சு நாட்டின் போராளியும், மார்க்சிய லெனினிய அறிஞருமான பேராசிரியர் ஜோஸ்பெரியா சிசன் கூறியுள்ளார். ‘தமிழ்நெட்’ இணையத்துக்கு அவர் சிறப்புப் பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். 72 வயது மார்க்சிய-லெனினிய சிந்தனையாளரான சிசன், அமெரிக்க ஆதரவு பிலிப்பைன்ஸ் ஒடுக்குமுறை அரசுக்கு எதிராக போராடி வருகிறார். பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தத்துவார்த்தவாதிகளில் ஒருவரான இவர், அந்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர். மாவோயிச சிந்தனைகளை ஏற்றுக் கொண்ட அவரது பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி 1968 இல் உருவானது. அடுத்த ஆண்டே ஒடுக்குமுறை பிலிப்பைன்ஸ் அரசுக்கு எதிராக ‘புதிய மக்கள் ராணுவம்’ என்ற ராணுவ அமைப்பை உருவாக்கினார். அந்த மக்கள் ராணுவம் பிலிப்பைன்சுக்கு எதிராக போராடி வருகிறது.

இக்கட்சியின் முன்னணி அமைப்பாக பிற இடதுசாரி கட்சிகள், சர்ச் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ‘பிலிப்பைன்ஸ் தேசிய ஜனநாயக முன்னணி’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. பிலிப்பைன்சு அரசுக்கும் போராடும் கம்யூனிஸ்ட் கட்சிக்குமிடையே ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி, சமரசப் பேச்சுகளைத் தொடங்கிடும் முயற்சிகளில் 2011 இல் நார்வே இறங்கியது. ஒஸ்லோ நகரில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பேச்சு வார்த்தைகள் தொடங்கிய வுடனேயே, அமெரிக்கா பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியையும், அதன் மக்கள் ராணுவத்தையும் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்ததால், பேச்சு வார்த்தை முடங்கியது. தொடர்ந்து அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளும் அமெரிக்காவைப் பின்பற்றி பயங்கரவாத அமைப்பாக அறிவித்தன.

முன்னணி அமைப்பான தேசிய ஜனநாயக முன்னணியின் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத் தோடு பேராசிரியர் சிசன் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர் என்று அமெரிக்கா 2002 இல் முத்திரை குத்தியது. அதைத் தொடர்ந்து நெதர்லாந்தில் அய்ரோப்பிய ஒன்றியத்துக்கான நீதிமன்றத்தில் பேராசிரியர் சிசனுக்கு எதிராக அமெரிக்காவின் தூண்டுதலில் பிலிப்பைன்சு சர்வாதிகார ஆட்சி வழக்குப் போட்டது. 2007 ஆம் ஆண்டில் இதற்காக பேராசிரியர் சிசன் கைது செய்யப்பட்டு இரண்டு வாரம் சிறையில் அடைக்கப்பட்டார். ஏழாண்டு காலம் வழக்கு நடந்தது. பேராசிரியர் சிசன் வலிமையான வாதங்களோடு வழக்கை எதிர் கொண் டார். இறுதி வெற்றி சிசனுக்குத்தான். 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அய் ரோப்பிய ஒன்றியங்களுக்கான நெதர்லாந்து நீதி மன்றம், பேராசிரியர் சிசன், பயங்கரவாதி அல்ல என்ற தீர்ப்பை வழங்கியது. தொடர்ந்து பயங்கர வாதி கள் பட்டியலிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது.

“அய்ரோப்பிய நீதிமன்றம் வழங்கிய ‘செப்.30’ ஆம் தேதி தீர்ப்பு - வரலாற்றில் இடம்பெறத் தக்க தாகும். பேராசிரியர் சிசன் இதை எதிர்கொண்ட முறை மிகவும் நுட்பமான அறிவுத் திறனின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும். அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் விருப்பம்போல் எந்தத்தனி மனிதரையும் பயங்கரவாதியாக சித்தரிக்கும் எதேச் சாதிகார போக்கிற்கு எதிரான மனித உரிமைக்குக் கிடைத்த வெற்றி” - என்று இத் தீர்ப்பு குறித்து மனித உரிமை அமைப்பான ‘டிஃபெண்ட்’ அறிக்கை வெளியிட்டது.

பேராசிரியர் சைசன் ‘தமிழ்நெட்’ இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் : பிலிப்பைன்ஸ் மக்கள் நடத்தும் போராட்டத்துக்கும், ஈழத் தமிழர்கள் நடத்தும் போராட்டத்துக்குமிடையே ஒற்றுமைகள் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டு போராட்டங்களும் தேசிய விடுதலையை யும்  ஜனநாயகத்தையும் இலக்குகளாகக் கொண் டுள்ளன. தங்களின் தேசிய இறையாண்மையை உறுதி செய்து கொள்வதற்காக சுதந்திரம், ஜன நாயகம், வளர்ச்சி, சமூகநீதி என்ற குறிக்கோளுக்காகப் போராடுகிறார்கள். நாங்கள் எங்கள் மக்களை ஒடுக்கி வரும் பெரும் முதலாளிகள், நிலப் பிரபுக்களுக்கு சாதகமான ஆட்சியை எதிர்த்துப் போராடுகிறோம். ஈழத் தமிழர்கள் சிங்கள காலணியத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். ஈழத் தமிழர்களை தங்களின் நிரந்தர அடிமை களாக்கிக் கொள்வதற்கு சிங்கள காலனி ஆட்சி, ஒற்றை ஆட்சியைத் திணிக்கிறது” என்றார் பேராசிரியர் சிசன்.

சர்வதேச நாடுகள் இது தொடர்பாக மேற் கொள்ளும் ‘பேச்சு வார்த்தைகள்’ பற்றி கருத்து கூறுகையில், “இத்தகைய முயற்சிகளை சரியான அணுகுமுறையில் பயன்படுத்தினால், பயன் கிடைக்கும் என்றே கருதுகிறேன். சமரசப் பேச்சு வார்த்தை முயற்சிகளிலிருந்து; ஒதுங்கி நிற்பதை நான் ஏற்கவில்லை. புரட்சிகர சக்திகள் இத்தகைய சர்வதேச பேச்சுவார்த்தைகளில் பங்கேற்குமபோது தான் தங்கள் போராட்டத்துக்கான நியாயங்களை யும் போராட்டத் திட்டங்களையும உலகத்தின் பார்வைக்குக் கொண்டுச்செல்லும்வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை விடுதலைப் புலிகள் இயக்கம் சரியாக பயன்படுத்திக் கொண்டது என்பதே என் கருத்து. போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறியது சிறீலங்கா தான் என்பதும், எந்த சமரசத் தீர்வுக்கும் அவர்கள் முட்டுக்கட்டையாகவே இருந்தார்கள் என்பதும் நார்வே பேச்சுவார்த்தை முயற்சிகளின் வழியாகவே வெளிப்பட்டது. இது அவர்களின் தேசிய சுய நிர்ணய உரிமைப் போராட்டத்துக்கான நியாயங்களை மேலும் வலிமைப்படுத்தியது” என்றார் சிசன்.

மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ள இடதுசாரி அமைப்புகள், தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இடதுசாரி கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறும் சில நாடுகள், சிறீலங்காவுக்கு ஆதரவு தெரிவிப்பது - தங்களது நாடுகளுக்கான ‘ராஜதந்திர’ அணுகுமுறைகளைச் சார்ந்திருக்கிறதே தவிர, அவர்கள் ஏற்றுக் கொண்ட கொள்கையைச் சார்ந்ததல்ல என்றார் பேராசிரியர் சிசன்.

சில குறிப்பிட்ட பிரச்னைகளில் சிறீலங்கா ஆட்சி ஏகாதிபத்திய காலனிய எதிர்ப்பு ஆட்சியாக இடதுசாரி கொள்கைகளை ஏற்றுக்கொண்ட நாடுகளுக்கு தோன்றலாம். அந்தப் பிரச்சினைகளில் மட்டும் சிறீலங்காவை அவர்கள் பாராட்டட்டும். அதற்காக தேசிய விடுதலைப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு துணைப் போகக் கூடாது. இப்போது நாடுகள் - அவை  எந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவையாக இருந்தாலும் தங்கள் நாட்டுக்கான ‘ராஜதந்திர’த்துக்குள் மூழ்கிக் கொள்ளவே விரும்பும் நிலை வந்துவிட்டது. எனவே புரட்சிகர அமைப்புகளுக்கு தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்க்கவே முடியாது” என்றார்.

தமிழர் பகுதியில் நடக்கும் ராணுவ ஆக்கிரமிப்புப் பற்றி கூறுகையில், “சிறீலங்கா - தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தத்தையே நடத்தியது. இதற்காக அவர்கள் மேற்கொண்ட அணுகுமுறை காட்டுமிராண்டித்தனமானது; வார்த்தைகளால் கூற முடியாத கொடூரம் நிறைந்தது”. விடுதலைப் புலிகள் நடத்திய விடுதலைப் போரிலிருந்து மக்களைத் தனிமைப்படுத்த சிறீலங்கா மேற்கொண்ட நட வடிக்கைகள் மிகக் கொடூரமான வன்முறையாகும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்காக அவர்களை அழிப்பதற்காக மக்களை பிரித்தெடுத்து, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் குவித்து வைத்து, அவர்களை அச்சத்தின் பிடிக்குள் உறைய வைத்தார்கள். குளத்திலுள்ள மீன்களை சாகடிப்பதற்கு அநத மீன்கள் மூழ்கி மூச்சுவிட்டு நிற்கும் தண்ணீரையே வற்ற வைப்பதுபோல் மக்கள் ராணுவமான விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு குளத்திலிருநத தண்ணீரையே வெளியேற்றியது போல் மக்களைப் பிரித்தெடுத்தார்கள். மேற்கத்திய நாடுகளின் நவீன ராணுவ உதவிகள், சிறீலங்காவின் இனப் படுகொலை நடவடிக்கையை ஊக்கப்படுத்தின. ரசாயன குண்டுகளை பயன்படுத்தியது ராணுவம். ஈழத் தமிழின அடையாளத்தை முற்றாக ஒழிப்பதற்கான இனப்படுகொலை யுத்தம் இது” என்றார் பேராசிரியர் சிசன்.

இனப்படுகொலை யுத்தத்தை மனித உரிமை மீறல் என்ற சிமிழுக்குள் அடக்க முயற்சிப்பதை சிசன் கடுமையாக எதிர்த்தார்.

சிறீலங்கா அரசின் கொடூரமான பாசிச முகத்தை மறைக்கவே “மனித உரிமை மீறல்கள் - தவறை சரி செய்வதற்கான திட்டங்கள்” என்ற சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கான ஒரே தீர்வு சுதந்திர நாடு என்ற இறையாண்மைதான். அதுவே அவர்களுக்கான சரியான மனித உரிமையும் ஆகும்.

“தவறுகளை சரி செய்தல்” என்ற சொல்லாடல்கள், போர்க்குற்றங்களிலிருந்து சிறீலங்காவைக் காப்பாற்றும் முயற்சிகளே. போர்க் குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து தப்பிக்கவும், அதே நேரத்தில் ஈழத் தமிழர்கள் மீதான தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்திடவும், சிறீலங்கா மேற்கொள்ளும் தந்திர நடவடிக்கைகளே இவை என்றார் பேராசிரியர். மாவீரர் நாளில் ஈழத் தமிழ் இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட ‘பாதிப்புகளுக்கு நீதி கேட்கும் இறையாண்மை’ (சுநஅநனயைட ளுடிஎநசபைiniலே) என்ற பிரகடனத்தை வரவேற்பதாகக் கூறிய அவர், “தங்களுக்கான தாயகத்தை உருவாக்கிக் கொள்ளும் ஈழத் தமிழர்களின் விருப்பத்தை ஒதுக்கிவிட முடியாது. மே 2009 இல் நடந்தது. ஒரு தற்காலிக பின்னடைவு தான். ஈழத் தமிழர்கள் தங்களுக்கான விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து முன் நகர்த்திச் செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார் பேராசிரியர் சிசன். “ஒரு விடுதலைப் போராளி என்பவன் கவிஞனைப் போன்றவன்” என்று  1968 ஆம் ஆண்டு அவர் எழுதிய கவிதையை ஈழத் தமிழர்களுக்காக   பேட்டியின் போது உருக்கத்துடன் படித்துக் காட்டினார். 

Pin It