கூடங்குளம் அணுஉலை தொடர்பாக நான்காம் கட்டப் பேச்சுவார்த்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ஏற்று அதில் கலந்து கொள்ளச் சென்ற போராட்டக்குழுவின் தலைவர் சுப.உதயக்குமார், புஷ்பராயன், மைபா ஆகியோர் மற்றும் மகளிர் உள்ளிட்ட போராட்டக்குழுவினரை இந்து முன்னணி, காங்கிரஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே கடுமையாகத் தாக்கியுள்ளனர். போராட்டக் குழுவினரின் வாகனமும் தாக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நேரத்திலேயே, பேச்சுவார்த்தைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இடத்திலேயே, ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே போராட்டக்குழுவினர்தாக்கப்பட்டிருப்பதும், தாக்குதல் நடந்து முடிந்த பின்னரே காவல்துறை வந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதும் தற்செயலாக நடந்தவைகள் அல்ல. போராட்டத்தைச் சீர்குலைக்க சாதி ரீதியாகவும், மதரீதியாகவும் போராட்டக் குழுவைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டது ஆளும் வர்க்கம். அதன் பிறகு தனிமனித தாக்குதல்களை நடத்தி போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் பரப்புரைகளை மேற்கொண்டது. அடுத்த கட்டமாக போராடும் மக்கள் மீது வன்முறையை ஏவுகிறது.

இந்தத் தாக்குதலின் நோக்கம் வெறும் தாக்குதலாக மட்டும் இருக்காது. தாக்கப்பட்ட மக்கள் தாக்கியவர்கள் மீது எதிர்வினை ஆற்றுவார்கள்; அதன்பிறகு வன்முறையைக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்றபெயரில் காவல்துறையை வைத்து அணுஉலைக்கு எதிராகப் போராடும் மக்களை முடக்கிவிடலாம் என்ற நோக்கில் நடத்தப்பட்ட முயற்சி என்றே கருத வேண்டியுள்ளது.

அணுஉலைக்கு ஆதரவாக போராட விரும்புபவர்கள் அறவழியில் போராடலாம்; அல்லது அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் கேட்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் அளிக்க முயற்சிக்கலாம். அதை விட்டு விட்டு அமைதியாகப் போராடும் மக்கள் மீது பேச்சுவார்த்தைக்குச் சென்ற இடத்தில் தாக்குதலை நடத்தும் காங்கிரஸ் மற்றும் இந்துமுன்னணி அமைப்புகளை வன்மையாகக்கண்டிக்கிறோம். அறவழியில் போராடும் மக்களுக்கும் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழுவினருக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

Pin It