பிரிட்டிஷ் ஆட்சி காட்டிய கவலையைக்கூட இந்திய “சுதந்திர” ஆட்சி தூக்குத் தண்டனைக் கைதிகளிடம் காட்ட முன்வரவில்லை. கிரிமினல் குற்றங்களில் தூக்குத் தண்டனைக்குள்ளாவோர் பெரும்பாலும் பார்ப்பனரல்லாத ‘சூத்திரர்களும்’, ‘பஞ்சமர்களும்’ தான் என்பதால் மனுதர்மப் பார்வையுடனே  இந்திய பார்ப்பன ஆட்சி செயல்பட்டு வருகிறது.

பிரிட்டிஷ் ஆட்சி காலமான 1937 ஆம் ஆண்டில் நடந்த ஒரு வழக்கைக் குறிப்பிட வேண்டும். அப்போது கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. ‘அத்தப்பா கவுண்டன்’ என்பவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்துக்கு அப்பீல் விசாரணை வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு தூக்குத் தண்டனை வழங்கலாம் என்று கீழ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்க முடியாது என்று மற்றொரு  நீதிமன்றம், விளக்கம் கூறி, தூக்குத் தண்டனையை நிறுத்தியது. ஒப்புதல் வாக்கு மூலத்தையே சாட்சியமாக ஏற்றுக் கொண்டால், அது, குற்றவாளிக்கு தண்டனையை உறுதிப்படுத்திவிடும். ஏற்க மறுத்தால், குற்றவாளிக்கு சாதகமாக அமையும். இந்த நிலையில், வழக்கை சென்னை மாகாண உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகள் விசாரிக்கக்கூடிய மேல் அமர்வு விசாரணைக்கு அனுப்பியது. ‘மேல் அமர்வு’ ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்கலாம் என்று தீர்ப்பளித்தது.  இத் தீர்ப்பு பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி முழுதும் அமுலாக்கப்பட்டு, பல குற்றவாளி களில் தூக்கிலிடப்பட்டனர்.

1945 ஆம் ஆண்டு இதே போன்ற பிரச்சினை மீண்டும் சென்னை மாகாண உயர்நீதிமன்றத்தின் முன் வந்தது. இது புலுக்கரி கோட்டயா உள்ளிட்ட 7 பேருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்காகும். மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை உயர்நீதிமன்றம் ‘அத்தப்பா கவுண்டன்’ வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் உறுதி செய்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் வழக்கை லண்டனில் உள்ள ‘பிரிவிக் கவுன்சிலுக்கு’ மேல் முறையீடு செய்தனர். பிரிவி கவுன்சிலில் இடம் பெற்றிருந்த பிரிட்டிஷ் நீதிபதிகள், ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்பது தவறு; சாட்சிகள் சட்டத்தின் 27 பிரிவுக்கு இது எதிரானது என்று அறிவித்தனர்.

பிரச்சினை இத்துடன் முடியவில்லை. ஏற்கனவே ‘கவுண்டன்’ வழக்கு அடிப்படையில் பலர் தூக்கி லிடப்பட்டு விட்டனர். இன்னும் ஏராளமானோர், தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில் சென்னை மாகாண ஆட்சி நிர்வாகம், ஆணையம் ஒன்றை அமைத்து, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் பரிசீலித்தது. அதனடிப்படையில் ‘அத்தப்பா கவுண்டன்’ தீர்ப்பு அடிப்படையில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த அனைவருமே பிரிவி கவுன்சில் உத்தரவின்படி நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டனர்.

இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வழங்கப் பட்ட நீதியாகும். ஆனால், இந்திய பார்ப்பன ஆட்சியில் என்ன நடக்கிறது? ‘ராவ்ஜி’ குழுவினர் தவறான தீர்ப்பால் தூக்கிலிடப்பட்டும்கூட உச்சநீதி மன்றம் இந்த தவறான தீர்ப்பை முன்னுதாரணமாக 9 ஆண்டுகளாக பின்பற்றியுள்ளது. இதை உச்சநீதி மன்றமே ஒப்புக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவர்களுக்கும் ஏராளமான முறையீட்டுக் கடிதங்கள் எழுதப்பட்டன. ஆனால், எவரும் இது குறித்து கவலைப்படவே இல்லை. “தூக்கில் போடு; தூக்கில் போடு” என்ற வெறிக் கூச்சல்களே உரத்துக் கிளப்பிக் கொண்டிருந்தன.

தவறான தீர்ப்பின் அடிப்படையில் தூக்கில் போட்டுவிடக் கூடாது என்று இந்தியர்கள் மீது கவலை எடுத்துச் செயல்பட்டது 72 ஆண்டுக்கு முந் தைய பிரிட்டிஷ் ஆட்சி. ஆனால், சுதந்திர இந்தியா....?

தவறான தீர்ப்புகளுக்குப் பிறகும், ‘குடிமக்களை’ தூக்கிலிட்டுக் கொண்டே இருந்தது.

Pin It