நண்பர்களே, முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ளுகிறேன். அதாவது சாப்பாட்டு ஜாகைக்குப் போகும் வழியில் என்னைப் பற்றியும், என் மனைவியைப் பற்றியும் சுவர்களில் கண்டபடியெல்லாம் எழுதியிருந்தது. மற்றும் சிலரைப் பற்றியெல்லாம் எழுதி இருந்தது.

நண்பர்களே என்னைப் பொறுத்தவரை நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதுவும் என் மனப்பூர்த்தியாய்ச் சொல்லுகிறேன். என்னவென்றால், என்னை ஒருவர் மகாத்மா என்றோ, தெய்வத் தன்மைப் பொருந்தியவர் என்றோ, சித்தர் என்றோ, புத்தர் என்றோ, ஞானி என்றோ கூப்பிடுவதைவிட, கருதுவதைவிட என்னை அயோக்கியன் என்றும், திருடன் என்றும், முட்டாள் என்றும் சுயநலக்காரன் என்றும், பணம் சம்பாதிப்பவன் என்றும் மற்றும் இழிவான வேலை செய்கின்றவன் என்றும் சொல்லுவதில் எனக்கு லாபம் இருக்கின்றது என்று கருதுகிறேன்.

ஏனெனில், எனது வேலையானது இராமசாமி என்று ஒரு மகாத்மாவோ, மற்றும் தெய்வத் தன்மை பொருந்திய ஒரு ஒப்பற்ற மனிதர் இருந்தார் என்று மூட ஜனங்கள் சொல்லிக் கொள்ளவோ, எனது படத்தைப் பூஜையில் வைத்துப் பூஜிக்கவோ, தேரில் வைத்து இழுக்கவோ, கோவிலில் என் பேரில் விக்கிரகம் செய்து பூஜை, உற்சவம் செய்யவோ நான் கருதவில்லை. அந்தக் குணத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று கருதி வெளிப்பட்டவன். ஆகவே என்னை அக்கதிக்கு ஆளாக்காதவர்களே எனது நண்பர்கள் ஆவார்கள். எனது கொள்கைக்கும் துணை புரிந்தவர்களாவார்கள்.

ஏனெனில், வண்ணான், நாவிதன், பறையன், பள்ளன், செட்டி, நாயக்கன், நாடார் என்று சொல்லப்பட்ட இழிகுல மக்கள் என்பவர்கள் எல்லாம் இன்று ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியும், பூஜித்தும், உற்சவம் செய்யப்பட்டும் நாட்டுக்கோ அச்சமூகங்களுக்கோ ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கிறேன். அதன் பேரால் அவர்கள் கதைகளைச் சொல்லி சிலர் வயிறு வளர்க்கின்றார்கள். சிலர் சோம்பேறிகளாய் வாழ்கிறார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அதுபோலவே இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்த சுவாமிகள்; இராமலிங்க வள்ளலார் என்கிற சமீபகால மக்களால் நாட்டுக்கு ஏற்பட்ட பயன் என்ன? இவர்கள் படம் பூஜிக்கப்படுவது எனக்குத் தெரியும். 100க்கு 75 மக்களுக்கும் தெரியும். ஆனால் 100க்கு ஒருவருக்கு நடந்த நன்மை என்ன? அதுபோலவே இன்று பிரத்தியட்சத்தில்  இருக்கும் காந்தி மகாத்மாவும், திருப்பாலக்குடி மஸ்தான் வணங்கப்படுவதும், அவதாரமாகவும் நபியாகவும் கருதப்படுவதும், அதோடு மாத்திரமல்லாமல் அவர்களது மலம் முதல் சுவாசக்காற்று வரை மதிக்கப்படுவதும் எனக்குத் தெரியும்.

திரு.காந்தியைவிட மஸ்தான் சாயுபுக்கு உண்மையிலேயே மதிப்பு அதிகம் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், அனேகர் திரு.காந்தியை மனிதராகக் கருத வேண்டுமென்றே தங்கள் சுயநலத்திற்கும், ஆதிக்கத்திற்கும், வயிற்று வளர்ப்புக்கும் திரு.காந்தியை ஏமாற்றுவதற்கும் அவரை மகாத்மா என்று சொல்லுகிறவர்கள், திருப்பாலக்குடி சாயபுவை உண்மையிலேயே தெய்வத் தன்மை பொருந்தியவராக மதித்துப் பூஜித்து வருகிறார்கள். எங்கள் ஊரிலிருந்து அநேக பி.ஏ., பி.எல்., எம்.ஏ., முதலியவர்களும், உயர்ந்த சாதியார் பிராமணர் என்று தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுமே போய் அவரது எச்சிலை சாப்பிட்டுவிட்டும் வந்தார்கள். எச்சில் கலந்த தண்ணீரே பழனி பஞ்சாமிர்தம் போல் டின்னில் அடைத்துக் கொண்டு வந்து இருக்கின்றார்கள். ஆனால், இவர்களால் நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கிறேன்.

திருப்பாலக்குடி சாயுபை ஒரு சாதாரண மனிதன் என்று எண்ணாத காரணத்தால் அவரது எச்சில் கலந்த தண்ணீரைக் குடித்து லாபம் பெறலாம் என்று கருதி மக்கள் மூடர்களாக வேண்டியதாயிற்று. அதுபோலவே திரு.காந்தியை மகாத்மா என்று கருதியதால், அவரது காரியத்தால் ஏற்படும் தீமைகளும், நஷ்டங்களும், இழிவுகளும் எல்லாம் அதற்கு மாறாகக் கருப்பட வேண்டியதாயிற்று. ஆனால், என்னுடைய காரியங்களுக்கு அப்படிப்பட்ட விபரீதப் பலன் ஏற்பட வேண்டாம் என்றே கருதுகிறேன். எனக்காக எந்த மனிதனும் எவ்வித நஷ்டமும் அடைய வேண்டாம். எதையும் நம்ப வேண்டாம். நான் கூறுபவைகளை வெகுஜாக்கிரதையாய் அலசிப் பார்க்க வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். ஆகையால் நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால், மக்கள் என் வார்த்தையை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். நான் அயோக்கியன் என்று சொல்லப்பட்டால் என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்கப்படும். உதாரணமாக இன்றைய கீதை என்பதை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் அக்கிரமம், தந்திரம், முன்னுக்குப் பின் முரண், மக்களை மக்கள் இழிவுபடுத்துவது என்பவைகள் யாருடைய புத்திக்காவது விளங்குகின்றதா? ஏன் விளங்கவில்லை? அதைச் சொன்ன மனிதனை இன்னான் என்றோ எதற்காகச் சொன்னான் என்றோ உணர முடியாமல், பகவான் சொன்னார் என்று சொல்லப்பட்டதால் இன்றைய உலக மக்கள் எல்லோருக்குமே அது பொருந்துவதாகும் என்று சொல்லக்கூடிய அளவுக்குப் புகழப்படுகின்றது. அதுபோலவேதான் புராணங்கள், சாத்திரங்கள், வேதங்கள் என்கின்ற ஆபாசக் களஞ்சியங்கள் எல்லாம் மதிக்கப்படுகின்றன.

ஆகவே, அந்தப்படி மதிக்கப்படாமல் எனது வார்த்தைகள், அபிப்பிராயங்கள் அதற்குண்டான சரியான மதிப்புப் பெற வேண்டுமானால், நான் அயோக்கி யனாகவும், பணம் சம்பாதிப்பவனாகவும், திருடனாகவும் கருதும்படியாகப் பிரச்சாரம் செய்பவர்கள். உதவி செய்தவர்களாகவே ஆவார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்த குணத்தையும் என் மீது சுமத்திவிடாதீர்கள்.

தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் ‘இராமசாமிக் கழுதைக்கு செருப்படி’ என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழுகவில்லை. இங்கும் ‘இராமசாமி கழுதை செத்துப் போய்விட்டது’ என்றும், ‘இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி’ என்றும் எழுதி இருந்தது.

இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே இராமசாமி மனைவி கற்புக்கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து மாதம் மும்மாரி மழை வரச் செய்து பயன்பெற்று இருந்தால், இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்பட வேண்டும். ஆகவே அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், இவைகளிலிருந்து ஒரு அளவுக்கு நான் வெற்றிப் பெற்றுவிட்டேன் என்பதை மாத்திரம் உணருகிறேன். என்னை அறியாமலே நான் ஏதாவது மதிப்புப் பெற வேண்டுமென்று கருதி இருந்தாலும் நானே எனக்குத் தீங்கு தேடிக் கொண்டவனேயாவேன்.

- பெரியார், ‘குடிஅரசு’ 11.10.931

Pin It