“எந்த தேசத்தில் சூத்திரர் தெய்வத்தை நிந்திக்கிறவர்கள் இவர்கள் அதிகமாயும் துஜாதிகளில்லாமலும் (இரு பிறப்பாளர்கள்) இருக்கிறார்களோ அத்தேசம் முழுவதும் வறுமை நோய் இவைகளால் துன்பப்பட்டுச் சீக்கிரத்தில் அழிந்து விடும்.” - மனு அத்.8 சுலோகம் 22 –

கீழ்சாதிக்காரர்கள் மற்றும் ‘பிராமண’ தெய்வங்களை ஏற்காதவர்கள் வாழும் பகுதி, துன்பத்தில் மூழ்கி, அழிந்தே போய்விடும் என்ற பார்ப்பன மனுவின் புத்தியை அப்படியே மண்டையில் ஏற்றிக் கொண்டுதான் இந்திய ஆட்சியும் செயல்படுகிறது என்பதற்கு போபாலில் நடக்கும் சம்பவங்களே சான்று.

போபாலில் யூனியன் கார்பைடு எனும் அமெரிக்க நிறுவனத்திலிருந்து நச்சு வாயு கழிவு கசிந்ததால் பல்லாயிரம் பேர் இறந்தனர். பெரும்பாலானவர்கள் ஏழை முஸ்லீம்கள், மனுதர்மப்படி புறக்கணிக்கப் பட்டவர்கள். வறுமையில் வாடி அழியப்பட வேண்டியவர்கள். நச்சு வாயுக் கசிவு நடந்து 28 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், அந்த ஆலையைச் சுற்றி படிந்து கிடக்கும் ரசாயனக் கழிவுகள், இன்றும் அகற்றப்படாமல் 28 ஆண்டுகளாக அப்படியே அப்பகுதியில் பதிந்து கிடக்கின்றன. இந்த நச்சு வாயுவை அகற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காத இந்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தரையில் 27 ஆயிரம் டன் நச்சக் கழிவு புதைந்து கிடக்கிறது என்றும், பூமிக்கு மேல் 350 மெட்ரிக் டன் கொட்டிக் கிடக்கிறது என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் கருணாநந்தி, உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கழிவுகளை யார் அகற்றுவது? மாநில அரசா? அல்லது யூனியன் கார்பைடு நிறுவனமா? என்று 28 ஆண்டுகளாக பட்டிமன்றம் நடக்கிறது. மத்திய அரசோ எந்த முடிவுக்கும் வரவில்லை. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்புக்கு உள்ளாகி, மேலும் பல்லாயிரக்கணக்கில் ஊனமுற்றுப்போன ஏழை ஒடுக்கப்பட்டோரும், ஏழை முஸ்லீம்களும் அதே பகுதியில் இந்த நச்சுக் கழிவுகளுடன் உழன்று கொண்டிருக்கிறார்கள். ஏன்? மனுதர்மப்படி இவர்கள் ‘பாவிகள்’, ‘சூத்திரர்கள்’, ‘பிராமண’க் கடவுளை ஏற்காதவர்கள், வறுமை நோயால் துன்பப்பட்டு, அழிய வேண்டிவர்கள். ஆம், ‘மனுதர்மத்தின்’ உத்தரவையே இந்திய ஆட்சியும், செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

Pin It