அயோத்தியில் ‘ராமன்’ பிரச்சினையை முன் வைத்து அரசியல் நடத்தியவர்கள் - தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்து, மக்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க. பரிவாரங்கள் முடங்கிப் போய்க் கிடந்தன. அக்கட்சிக்குள்ளே குழப்பங்கள் பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கின. ‘அயோத்தி’ அரசியலுக்குப் பிறகு முடங்கிப் போனவர்கள், அடுத்து ‘இராமனை’ சேது சமுத்திரத் திட்டத்துக்குள் தேடிப் பிடித்து, அதை அரசியலாக்கி, கரை சேர முடியுமா என்று புறப்பட்டிருக்கிறார்கள். ‘ராமன்’ அரசியலுக்கு தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்திருப்பது இவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

தமிழ்நாட்டில் - ‘இந்து’வாகக் கருதிக் கொண்டு, பக்தி, சடங்குகளில் மூழ்கியிருப்பவர்கள்கூட, ‘இராமனை’ ஏற்கத் தயாராக இல்லை என்ற கருத்தை முன்னிறுத்தி, சமூக ஆய்வாளர் முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஆங்கில நாளேடு ஒன்றில் எழுதிய கட்டுரையை இதே இதழில் வெளியிட்டிருக்கிறோம்.

1971 இல் சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ‘ராமன்’ செருப்பால் அடிக்கப்பட்டதை - தேர்தல் களத்தில் முன்னிறுத்தப்பட்ட போதும், பெரும்பான்மை மக்கள், ‘ராமனை’ புறக்கணித்து தி.மு.க.வையே வெற்றி பெறச் செய்த வரலாற்று நிகழ்வை கட்டுரையாளர் சுட்டிக் காட்டியிருக்கிறார். இது மிகச் சரியான படப்பிடிப்பு என்பதில் இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை.

அதே நேரத்தில் - இந்து மதத்தை பழக்கத்தால் ஏற்றுக் கொண்டு வாழ்வோரும்கூட, பார்ப்பனரல்லாத ‘இந்து’ என்ற உணர்வோடு வாழ்வதற்கும், இந்து மதத்தின் ‘பார்ப்பனக் கூறுகளை’ உதறித் தள்ளுவதற்கும், அடிப்படையான காரணம் - பெரியார் இயக்கமும், அதன் வழிவந்த திராவிடர் இயக்கமும் தான். இந்த இயக்கம் பகுத்தறிவையும், சுயமரியாதையையும், வகுப்புரிமையையும், மூட நம்பிக்கை எதிர்ப்பையும், பார்ப்பன எதிர்ப்பையும், விதைத்ததினால், கிடைத்த விளைச்சல் தான் இந்த உணர்வு.

தமிழ் மண்ணின் - இந்த தனித்துவமான உளவியல் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டுமானால், பார்ப்பன எதிர்ப்பும், ராமாயண புராண எதிர்ப்பும், பகுத்தறிவுக் கருத்தும் தொடர்ந்து மக்களிடையே பரப்பப்பட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

பகுத்தறிவு, சுயமரியாதைப் பிரச்சாரம் செய்வது, ஏதோ பெரியார் இயக்கங்களுக்கு மட்டுமே உள்ள கடமை என்ற நிலை வந்துவிட்டது. தொடக்கக் காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம், சுயமரியாதை, பகுத்தறிவு கருத்துப் பரப்பல்களில் காட்டிய தீவிரமும், ஆர்வமும் படிப்படியாக மங்கி, இப்போது தேர்தல் அரசியல் என்ற ஒற்றை இலக்கு நோக்கியே செயல்பட்டு வருவது வேதனைக்குரியது. முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் சுட்டிக் காட்டிய தமிழ்நாட்டின் ‘தனித்துவம்’ இத்தகையப் பிரச்சாரம், தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியதன் விளைவுதான் என்பதை மறந்துவிடக் கூடாது.

1971 ஆம் ஆண்டு - தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாத பார்ப்பன மதவாத சக்திகள், இப்போது தமிழகத்தில் தலைதூக்கி நிற்கும் ‘எதார்த்தத்தை’ கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு திராவிட அரசியல் கட்சிகளிலேயே திராவிடர் இயக்கக் கொள்கைகளோடு, ஓரளவு நெருக்கமாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே 40 வயதுக்கு உட்பட்ட பெரும்பாலான இளைஞர்கள் பகுத்தறிவு சிந்தனையுடனோ, சுயமரியாதை இயக்கக் கொள்கையுடனோ இருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். இது கசப்பான உண்மை.

இந்த நிலை தொடர்ந்தால், ‘பார்ப்பனரல்லாத இந்துக்களை’ - பார்ப்பனிய ஆதரவு இந்துக்களாக மாற்றக் கூடிய ரசாயன மாற்றம், வெகு எளிதில் நடந்து முடிந்துவிடும் என்பதில் அய்யமில்லை.

அத்தகைய மாற்றம் நேர்ந்து விடும்போது - திராவிடர் இயக்கத்தின் அடித்தளமே தகர்ந்து தரை மட்டமாகிவிடும் ஆபத்துகள் வரக் கூடும். தமிழக அரசியலில் ஆட்சி அதிகாரத்தைக் குறி வைத்து - சில நடிகர்களால் தொடங்கப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சிகள்கூட - ‘இந்து’த்துவா வாடையுடன், பகிரங்கமாக வெளிவந்து கொண்டிருப்பதை, ஆபத்தின் அறிகுறிகளாகவே பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் இடதுசாரி கட்சிகளுக்கும், தலித் அமைப்புகளுக்கும் அவர்கள் மதவாத சக்தியை எதிர்க்கிறவர்கள் என்ற முறையில் இதில் பொறுப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டில் மீண்டும் - ராமாயண, புராண எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரம் என்ற செயல்தளத்துக்கு முற்போக்கு சக்திகள் வந்தாக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்தக் கருத்துப் பரப்பல் தி.மு.க.வையோ, இடதுசாரி கட்சிகளையோ, முற்போக்கு இயக்கங்களையோ பலவீனப்படுத்தி விடாது. மாறாக அவர்களின் இயங்குதளத்தை உறுதிபடுத்தவே செய்யும். தமிழ்நாட்டின் தனித்துவத்தை இளைய தலைமுறையிடம் நிலைநிறுத்தும்.

முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியனின் கட்டுரையை ஆழமாகப் பரிசீலித்தால் - அதில் இந்த எச்சரிக்கையும் அடங்கியிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.!

Pin It