15.1.2011 சனிக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு, பெங்களூர் வசந்த நகர், அம்பேத்கர் பவனில், பெரியார் திராவிடர் கழகம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் நலச் சங்கம் இணைந்து, “சாதி எதிர்ப்பு, ஈழ ஆதரவு” மக்கள் விழிப்பணுர்வு மாநாடு நடைபெற்றது. பெங்களூர் கழகத் தலைவர் மா. இராவணன் வரவேற்றுப் பேசினார். பெங்களூர் கழக பொதுச் செயலாளர் இல. பழனி முன்னிலை வகித்தார். சிங்கள அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறைச் சென்ற தோழர்களுக்கு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பாராட்டு விழாவும் நடைபெற்றது. கர்நாடக மக்கள் இயக்கத் தலைவர் சி. ராசன், அம்பேத்கர் சட்டக் கல்லூரி தலைவர் பேராசிரியர் இராமமூர்த்தி, தமிழர் சங்கங் களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பக்தவசலம், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி. செல்வம் ஆகியோரின் உரைகளை தொடர்ந்து, பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி. வேல் முருகன் (பா.ம.க.) பேசினார்.

விழுப்புரம்

20.1.2011 வியாழன் அன்று மாலை 6 மணிக்கு கள்ளக்குறிச்சியில், விழுப்புரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். சுமார் நாற்பது தோழர்கள் கலந்து கொண்டு, தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அரசு செலவில் கட்டப்பட்ட இரட்டை சுடுகாடுகளின் பட்டியலை எடுத்தல், கழக ஏட்டிற்கு சந்தா சேர்த்தல், தொடர் கூட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  மாவட்ட கழகம் கலைக்கப்பட்டு, ஓராண்டிற்கு சோதனை முயற்சியாக எட்டு பேர் கொண்ட “மாவட்ட அமைப்புக் குழு” ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்கள் திருமால் (கருங்குழி)), வெற்றிவேல் (கருங்குழி), பிரபு (தொழுவந்தாங்கல்), சாக்ரடீஸ் (செஞ்சி), கணேசன் (விழுப்புரம்), இளையராஜா (நெடுமானூர்), சாமிதுரை (கடுவனூர்), வெங்கடேசன் (கடுவனூர்).

ஏற்காடு

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 2011 ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்களில், ஏற்காட்டின் சுற்றுச் சூழலை பாதுகாப் பதற்கான பயிலரங்கம் நடைபெற்றது. வன உரிமை பாதுகாப்புச் சட்டம் - 2006, மால்கோ நிறுவனம் மண் எடுப்பதால் ஏற்படும் பாதிப்பு ஆகிய தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்றது. நித்தியானந்த் ஜெயராம், பிஜாய், பாபிகுன்னு ஆகியோர் வகுப்பெடுத்தனர். முதல் நாள் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டார். மால்கோ என்ற தனியார் நிறுவனம், 2003 ஆம் ஆண்டோடு ஒப்பந்தம் முடிந்ததும் இன்னும் கனிமம் வெட்டி செல்கிறார்கள். ஒப்பந்தபடி மரங்கள் நட வேண்டும் என்ற நிலையில், இன்னும் அவர்கள் மரங்களை நடவில்லை. சட்டரீதியாகவும், மக்களை திரட்டி போராடுவது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது. பெரியார் திராவிடர் கழகம், சேலமே குரல் கொடு, ஏற்காடு மலைவாழ் மக்கள் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

கோவை

25.12.2010 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு கோவை புதுசித்தாபுதூர் வி.கே.கே. சாலையில் (ஜெயா பேக்ஸ் அருகில்) கோவை கழகம் சார்பாக, பெரியார் - அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், சுயமரியாதை தலித் சக்தி அமைப்பைச் சார்ந்த கோலார் சிவலிங்கம், ஆதித் தமிழர் பேரவை நீலவேந்தன், தமிழ்நாடு மாணவர் கழகம் ந. பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர். உள்நாட்டு அகதிகள் - மறுக்கப்படும் உரிமைகள், அருந்ததியர் உள் இடஒதுக்கீடு-சட்டப் பாதுகாப்பு ஆகியவைகள் குறித்து பேசப்பட்டது.

ஆத்தூர்


26.12.2010 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு சேலம் ஆத்தூரில் பெரியார்-அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, ஆதித் தமிழர் பேரவை சார்பாக சாதி இருப்பை தகர்க்கும், சமூக இழிவு ஒழிப்பு பிரகடன மாநாடு, இரா. அதியமான் தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார்.

திருச்சி

30.12.2010 வியாழன் மாலை 6 மணிக்கு திருச்சி மாவட்டம் திருவரங்கம் தேவி தியேட்டர் அருகில் கழக கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட கழகத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ். முத்து தலைமையில் நடைபெற்ற இப் பொதுக் கூட்டத்தில், முதல் நிகழ்வாக சிற்பி இராசனின் ‘மந்திரமா தந்திரமா?’ நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செய லாளர் குமார் வரவேற்றுப் பேசினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் பாசறை சீனி. விடுதலை அரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முத்தூர்

31.12.2010 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேருந்து நிலையம் அருகில் ஆதிக்க சாதி வெறி எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பாக நேர்மையான தலித் அதிகாரி சாமிதுரை மீது கொலைவெறித் தாக்குதல் மற்றும் பணி இடை நீக்கம் ஆகியவற்றைக் கண் டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் இரா. அதியமான், ஆதித் தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர் கோவை ரவிக் குமார், மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செய லாளர் வினாயகமூர்த்தி, புரட்சிகர இளைஞர் முன்னணி அகிலன், ஆதித் தமிழர் ஜனநாயக பேரவை ஆ.சூ. பவுத்தன் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். ஈரோடு ப. ரத்தினசாமி, ஒருங் கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சி, தலித் விடுதலை கட்சி, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி, தமிழ் தேசிய விடுதலை இயக்கம், புரட்சிப் புலிகள், வீர அருந்ததியர் பேரவை, தமிழர் விடுதலை இயக்கம், தமிழக மக்கள் விடுதலை முன்னணி, சாதி ஒழிப்புப் பொதுவுடைமை முன்னணி, தமிழக தொழிலாளர் முன்னணி, நாம் தமிழர் கட்சி, மக்கள் சிவில் உரிமை கழகம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் வாழ்வுரிமை போராட்ட இயக்கம் ஆகிய அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

சாமிதுரை மீதான பொய் வழக்கைத் திரும்பப் பெறு! பணி இடை நீக்கத்தை ரத்து செய்! மின் வாரிய அலுவலகமா? ஆதிக்கசாதி வெறியர்களின் கூடாரமா? கொலைவெறி தாக்குதலை மின்வாரிய அலுவலகத்திற்குள்ளேயே அரங்கேற்றிய சாதிவெறி பிடித்த ஊழல் அதிகாரிகளை கைது செய் - பணி நீக்கம் செய். நேர்மை யான தலித் அதிகாரி சாமிதுரைக்கு துணை நிற்போம்! சாதி வெறி பிடித்த ஊழல் - திருட்டுக் கும்பலுக்கு முடிவு கட்ட அணி திரள்வோம் ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

புதுவை


2.1.2011 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு (இராகு காலத்தில்) புதுவை மாநில கழக இளைஞரணி செயலாளர் சுரேஷ், ஆ. சுகந்தி ஆகியோரது வாழ்க்கை துணை ஏற்பு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.

7.1.2010 வெள்ளி மாலை 6 மணிக்கு புதுவை அரியாங்குப்பம் பெரியார் திடலில், தேசிய பாதுகாப்புச் சட்டமும், தமிழர் உரிமையும் விளக்கப் பொதுக் கூட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தகர்த்த மூத்த வழக்கறிஞர் துரைசாமிக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

Pin It