‘நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யம்’ என்ற அமைப்பு சென்னையில் உருவாகியுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் “நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்?” என்ற விளக்கக் கூட்டம், பேராசிரியர் சரசுவதி தலைமையில் பிப்.4 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் மணிவண்ணன், எஸ்.எம். பாக்கர் (இந்திய தவ்ஹீர் ஜமாத்), சி. இராஜன் (கருநாடக தமிழ் மக்கள் இயக்கம்), அய்யநாதன் (இதழாளர்), மருத்துவர் எழிலன், இதழாளர் தெ.சீ.சு. மணி ஆகியோர் உரையாற்றுகின்றனர். நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? என்ற தலைப்பில் தோழமை மய்யம் விடுத்துள்ள அறிக்கை:

தங்கள் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள், குறிப்பாக ஈழத் தமிழர்கள் ஒருங்கிணைந்து, ஜனநயாக முறையில் உருவாக்கியுள்ள அமைப்பு தான் நாடு கடந்த தமிழீழ அரசு. இதன் உறுப்பினர்கள் அந்தந்த நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டு, வாக்குகள் போடப்பட்டு முறையாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள். இது வரை 85 நாடுகளில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 26 நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூடி பிரதமர், துணைப் பிரதமர், பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்களைத் தேர்வு செய்துள்ளனர்.

விடுதலை வேண்டிப் போராடும் மக்கள் தங்கள் போராட்டத்தின் ஒரு அங்கமாக புகலிட அரசாங்கமாக (Government in Exile) செயல்படும் வரலாறு புதிதல்ல. உதாரணம் திபெத்தின் தலாய்லாமா அரசு. ஆனால் புகலிட அரசாங்கத்தை அறிவிக்க ஏதேனும் ஒரு நாட்டின் அங்கீகாரம் அவசியமானது. அந்த நாட்டிலிருந்து புகலிட அரசாங்கத்தை அறிவித்து பின் விடுதலை கிடைத்தவுடன் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புவார்கள். ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசு “புகலிட அரசாங்கம்” அல்ல. இதற்கு எந்த ஒரு நாட்டின் அங்கீகாரமும் தேவையில்லை. இது ஒரு புதிய முயற்சி. ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்காக கடந்த பல ஆண்டுகளாகவே புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் வலிமையான கட்டமைப்புகளோடு தங்களது பங்கை செலுத்தி வந்துள்ளனர். இவர்கள்தான் நாடு கடந்த தமிழீழ அரசின் ஆற்றலாளர்கள்.

தமிழீழ விடுதலைக்கானஆயுதப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ள சூழலில் தமிழீழப் பிரச்சினை சர்வதேச அரசியல் தளத்திற்கு நகர்ந்துள்ளது. இதை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்ல அதற்கான கருத்துருவாக்க சக்தியாக செயல்படுவதே நாடு கடந்த தமிழீழ அரசின் முதன்மைக் குறிக்கோள். ஈழத்தில் சொல்லொணா கடுந்துயரத்தில் வாழும் தமிழர்களின் சமூகம், பண்பாடு, பொருளாதார முன்னேற்றத்திற்கும் இந்த அரசு உதவும்.

ஈழத் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமையை முன்னெடுப்பதற்கு அரசியல் தளத்தில் வெளிப்படையாக அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு ஜனநாயக வழிகளில் நாடு கடந்த தமிழீழ அரசின் செயல்பாடுகள் அமையும். புலம் பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்கள் மட்டுமின்றி இந்திய மரபு வழித் தமிழர்களும் இதில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை குறிப்பிட வேண்டும். புலம் பெயர்ந்த இனங்கள் தங்கள் நாடுகளின் விடுதலைக்கு வழங்கியிருக்கும் பங்களிப்பு குறித்து வரலாறு நெடுகிலும் பல சான்றுகள் உண்டு. வட அயர்லாந்து விடுதலைக்கு அமெரிக்காவிலும், கனடாவிலும் வாழும் ஐரிஷ் இன மக்கள் உதவினர். உலகமெங்கும் சிதறிக் கிடந்த யூதர்கள் தங்களுக்கான இஸ்ரேல் நாட்டை உருவாக்கினர். புலம் பெயர்ந்து வாழும் இத்தாலியர்களுக்காக இத்தாலி அரசு தனது நாடாளு மன்றத்தில் நான்கு இடங்களை ஒதுக்கி வைத்துள்ளது. உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் இரட்டைக் குடியுரிமையை (Dual Citizenship) வழங்கியுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசு புலம் பெயர்ந்து தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழர் மற்றும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் சார்பாக ஐந்து உறுப்பினர்களை நேரடியாக நியமிக்க முடிவு செய்துள்ளது.

•                     1976 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்கள் தமிழீழ விடு தலைக்கு நிறைவேற்றிய வட்டுக்கோட்டைத் தீர்மானம்....

•                     வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஏற்பு வழங்கி 1977 ஆம் ஆண்டு தமிழீழ மக்கள் தேர்தலில் தந்த வாக்களிப்பு...

•                     திம்புவில் போராளிகள் அமைப்புகளுடன் இந்திய அரசின் முயற்சியில் நடந்த பேச்சு வார்த்தைக்கு தயாரிக்கப்பட்ட அடிப்படை ஆவணம்....

•                     அரசியல் தீர்வுக்காக நார்வே சமரசப் பேச்சு வார்த்தையில் தமிழர்களின் சார்பில் 2003 ஆம் ஆண்டு முன் வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி சபைக்கான திட்டம்...

ஆகியவற்றில் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் அய்.நா.விலும், அய்ரோப்பிய நாடுகளிலும் விவாதங்களுக்கு வந்துள்ளன. உலகப் புகழ் பெற்ற “டப்ளின் மக்கள் நிரந்தர தீர்ப்பாயம்” இலங்கை அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது. சர்வதேச அரசியல் தளத்தில் இந்த பிரச்சினைகளை நகர்த்திச் செல்ல நாடு கடந்த தமிழீழ அரசு தளம் அமைத்துத் தரும்.

அண்மையில் சுதந்திரம் பெற்றுள்ள தெற்கு சூடான் நாடு முதன்முதலாக நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஏற்பு வழங்கியுள்ளது. அதன் பிரதமருக்கு தெற்கு சூடான் நாட்டின் சுதந்திர விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருப்பதும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனை யாகும். இந்தச் சூழலில் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம். இந்த அரசியல் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் அதன் குறிக்கோள்களுக்கு உறுதிதுணையாகவும் தனது பங்களிப்பை வழங்க முன் வந்திருக்கிறது.

தமிழினத்தின் பல்துறைச் சான்றோர் பெருமக்கள் தமிழின உணர்வாளர்கள் இந்த மையத்தின் பார்வை யாளர்களாக இல்லாமல் பங்கேற்பாளர்களாக கடமையாற்ற தோழமை மையம் உரிமையுடன் அழைக்கிறது.

தமிழக மீனவர்களுக்காக ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ குரல் கொடுக்கிறது

இந்தியா மீதான தனது நீண்டநாள் வெறுப்பை தமிழர்களைத் தாக்குவதன் மூலம் தீர்த்துக் கொள்கிறது இலங்கை அரசு. இதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் கட்டவிழ்த்து விட்டு வரும் கொலை வன்முறையின் தொடர்ச்சியாக ஜெயக்குமார் எனும் நமது சகோதரன் இலங்கை கடற்படையினரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனும் செய்தி நம்மை யெல்லாம் கடும் கோபத்திலும் பெருந்துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை படையினரின் இக்காட்டு மிராண்டித் தனத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டனம் செய்வதுடன், கொலை செய்யப்பட்ட சகோதரனின் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பான சுதந்திரத் தமிழீழ நாட்டை தமிழீழத் தாயகத்தில் அமைத்துக் கொள்வதனை முதன்மை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகில் எந்தப் பாகத்திலும் தமிழர்கள் மீது எவரால் இன்னல் இழைக்கப்பட்டாலும், கொடுமைகள் நிகழ்த்தப்பட்டாலும் அவற்றை எதிர்த்து அனைத்துலக ரீதியாகக் குரல் கொடுக்கும்.

உலகில் தமிழர்களுக்கென்றொரு அரசும், அதற்கான அரசாங்கமும் இதுவரை அமையாத சூழலில், உலகத் தமிழ் மக்களின் நலன்களுக்காகவும் தன்னால் இயன்றவரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போராடும். இந்த வகையில் தமிழ்நாட்டு மீனவர்களுக்கெதிராக இலங்கை அரசு மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை அனைத் துலகின் கவனத்துக்கு கொண்டு வரும் வழிவகைகள் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது.

இன்று தமிழக மீனவர்களுக்கு எதிராக சிங்களம் நடத்தும் போரும்கூட உண்மையில் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் எதிராக சிங்களம் நடத்தும் போரின் ஓரங்கமே. இலங்கைத் தீவில் இந்திய ஆதிக்கத்தை குறியீட்டு வடிவில் எதிர்ப்பதும் இப்போரின் ஒரு நோக்கம்.

இந்தியாவுக்கு எதிராக சீனாவை அரவணைத்து வைத்துக் கொண்டு இந்திய ஆட்சியாளர்களுடன் சதுரங்க விளையாட்டைத் தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறது சிங்களம்.

சிங்களத்துக்கு உதவி செய்வதன் மூலம் இலங்கைத் தீவில் தமது செல்வாக்கினை நிலைநிறுத்த முடியும் என இந்திய ஆட்சியாளர்கள் நினைக் கின்றனர். ஆனால், இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கைத் தீவினை எவ்வாறு விடுவிப்பது என்பது குறித்து சிங்களம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதற்காகத் திட்டமிட்டுச் செயலாற்றுகிறது. இலங்கைத் தீவில் ஈழத் தமிழரை இனக் கபளீகரம் செய்யும் முயற்சியில் சிங்களம் இறங்கியிருப்பதும் இத் திட்டத்திற்குட்பட்டுத்தான் நிகழ்கிறது.

ஆனால், இவையெல்லாவற்றையும் தமிழக ஆட்சியாளர்களோ, இந்திய ஆட்சியாளர்களோ சரிவரப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. சிறிய நாடான இலங்கையை எப்படியும் தம்மால் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என இந்திய ஆட்சியாளர்கள் எண்ணக் கூடும்.

இலங்கை சிறிய நாடுதான். ஆனால் சீனாவுடன் சேரும் போது இலங்கையைச் சிறிய நாடாகப் பார்க்க முடியாது. இந்தியாவினை விட சீனாதான் சிங்கள மக்களின் இயல்பான தேர்வாக இருக்கும். காலம் தாழ்த்தி உண்மையினை இந்தியா உணரும்போது அது இந்தியாவுக்கு ஆபத்தானதாகவே அமையும்.

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளி யுறவுக் கொள்கை மாற்றத்துக்குள்ளாக்கப்படுவது ஈழத் தமிழர் தேசத்துக்கு மட்டுமல்ல - தமிழக, இந்திய மக்களின் நலனுக்கும் அவசியமானது. இதனை இந்திய கொள்கை வகுப்பாளர்களது கவனத்துக்கு கொண்டு வருவற்கு ஆவன செய்யுமாறு தமிழக, இந்திய மக்களி டம் இத்தருணத்தில் வேண்டுகோள் விடுக்கிறோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Pin It