பாலக்கோடு சர்க்கரை ஆலை குடியிருப்பிலுள்ள அம்மன் கோயிலில் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்து தாலி கொள்ளையடிக்கப்பட்டது.

தன் கழுத்தில் இருந்து திருடப்பட்ட தாலியையே, காப்பாற்றிக் கொள்ளாத அம்மன் மக்களையும், மக்கள் சொத்துக்களையும், எப்படி காப்பாற்ற முடியும்?

ஆனால், ஏழை திருடன் வாழ வேண்டும் என்பதால், திருடனை தடுக்கவில்லை என்பது இன்றைய ஒருசில படித்த ஆன்மீக முட்டாள்களின் வாதம்.

தாலி என்பது ஒரு அடிமை சின்னம். பெண்ணடிமையிலிருந்து மீள வேண்டும் என்ற நோக்கத்துடன்தான், தன் தாலியை பறித்த திருடனை தடுக்கவில்லை என்று கூட இந்த படித்த ஆன்மீகவாதிகள், வாதிட்டாலும், வாதிடுவார்கள்.

(அ. கோகுலகண்ணன், நாயக்கன்பட்டி)

புலிகளின் மனிதாபிமானம்

‘இது வரையில் போடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் விடுதலைப்புலிகள் பின்பற்றியே நடந்து வந்தனர். ஆனால் இலங்கை ராணுவம் அதைத் திட்டமிட்டே மீறி வந்துள்ளது. போர்க்களத்தில்கூட புலிகள் மனிதாபிமான முறையில் நடந்து வந்துள்ளனர். தாங்கள் சிறை பிடித்திருந்த சிங்கள சிப்பாய்களின் பிறந்தநாளின் போது அவர்களின் குடும்பத்தார் வந்து சந்திக்கவும், அவர்களின் மதத்தைச் சார்ந்த மதத் தலைவர்கள் சந்திக்கவும் அனுமதித்தனர்.

யாழ் கோட்டையை விடுதலைப்புலிகள் கைப்பற்றியபோது, உள்ளே மாட்டிக் கொண்ட இலங்கைப் படையினருக்கு மருத்துவ வசதிகள், உணவு போன்றவற்றை அனுமதித்தனர். பின்னர் 4000 சிங்கள ராணுவத்தினர் தாங்களாக வெளியேறவும் துணையாக இருந்தனர். சிங்களக் கைதி ஒருவரின் மனைவியை சிறையிலேயே சில நாட்கள் தங்குவதற்கு அனுமதித்தனர். சில மாதங்கள் கழித்து அந்தப் பெண் விடுதலைப் புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், ‘நீங்கள் என் கணவருடன் சில நாட்கள் சிறையில் தங்க அனுமதித்தீர்கள். நான் தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருக்கிறேன். ஆனால், இது தெரியாத மற்றவர்கள் கணவன் சிறையில் இருக்கும்போது நான் கருவுற்றதாகக் கூறி என்னை பழி தூற்றுகிறார்கள்’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். இதைப் படித்த தம்பி பிரபாகரன் அந்த சிங்களக் கைதியை விடுவித்து, அந்தப் பெண்ணின் மீதான பழியைப் போக்கினார்.

(மேட்டூர் இரங்கல் கூட்டத்தில் தோழர் கொளத்தூர் மணி உரையிலிருந்து)

சியாம் சரண் கூறுவது சரியா?

“இந்திய உள்துறை செயலாளர் சியாம் சரண் - இன்று மூன்று கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். ஒன்று போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது. அமைதி வழியிலும், அற வழியிலும் 1948 ஆம் ஆண்டுகளிலிருந்து தமிழர்கள் முன் வைத்த கோரிக்கைகளை ராணுவத்தால் அரசு ஒடுக்கியதால்தான், போராளிகளும் ஆயுதம் ஏந்திப் போராடும் நிலை வந்தது.

போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது இந்தியாவின் கவலையாக இருந்தால், இலங்கைக்கு தமிழர்களைக் கொன்று குவிக்க இந்தியா ஆயுதம் வழங்கலாமா? முதலில் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துங்கள்! தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் அல்ல; அங்கே தனி நாடு கேட்பதையும் அனுமதிக்க முடியாது என்கிறார் சியாம் சரண்.

தமிழர்கள் ஒன்றுபட்டு புலிகள் பக்கம் நிற்கிறார்கள் என்பது, கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலேயே வெளிப்பட்டுவிட்டது. புலிகள் சொன்னதைத்தான், தமிழர்கள் கேட்டார்கள். நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களும், விடுதலைப் புலிகளுக்கு தங்களது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகும் என்ன சந்தேகம்?

சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திலேயே - விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசம் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. அங்கே விடுதலைப் புலிகளின் தனி ஆட்சியே நடந்து வருகிறது. கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த உண்மைகளை இந்தியா அங்கீகரிக்க மறுப்பதில் எந்த நியாயமும் இல்லை. புலிகள் மட்டுமே தமிழர் பிரதிநிதிகள் அல்ல என்று இந்திய உள்துறை செயலாளர் கூறுவாரானால், அதற்கு எங்களுடைய பதில். சியாம் சரண் அவர்களே, நீங்கள், தமிழர்களாகி எங்களுடைய பிரதிநிதி அல்ல”.

(விடுதலை இராசேந்திரன் சென்னை அஞ்சலி நிகழ்ச்சியில்)

Pin It