பேரறிவாளன், முருகன், சாந்தன் - மூன்று தமிழர்களின் கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்யலாம் என்று குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது, மத்திய அமைச்சரவையின் முடிவு அல்ல; அது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தன்னிச்சையாகவே எடுத்த முடிவு என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியிலுள்ள திருச்சி வேலுசாமி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ்  விளக்கம் கேட்டிருந்தார். முதலில் பதிலளிக்காமல், உள்துறை அமைச்சகம் காலம் தாழ்த்தியது. நீதிமன்றம் போகப்போவதாக வேலுசாமி மீண்டும் எழுதினார். அதன் பிறகு கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உள்துறை அமைச்சகம் தந்த பதிலில் பலவிதமான ஆலோசனைகளுக்குப் பிறகு உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் எவரிடமும் கலந்து பேசியதாகக் குறிப்பிடப் படவில்லை. மத்திய அமைச்சரவை கூடி விவாதித்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதே சட்ட நடைமுறையாகும்.

தூக்கு’ப் போட மனிதர்கள் இல்லை

தூக்குத் தண்டனை என்ற காட்டுமிராண்டி தண்டனையை இந்தியப் பார்ப்பன ஆட்சி கைவிட மறுத்தாலும், அந்தத் தண்டனையை நிறைவேற்றக் கூடிய மனிதர்கள் நாட்டில் இல்லை. கடைசியாக 2004 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொலை செய்த

தனஞ்செய் சட்டர்ஜி என்பவர் கல்கத்தாவில் தூக்கிலிடப்பட்டார். அவரைத் தூக்கில் ஏற்றியவர் பெயர் நாட்டா மல்லிக்.

25 ஆண்டுகாலமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தூக்கில் போட்டவர் மல்லிக். கடந்த 2009 டிசம்பர் 14 அன்று மல்லிக் மரணமடைந்துவிட்டார். மல்லிக்கின் தந்தை ஷிப்லால் என்பவரும் தூக்கில் போடும் “வேலை”யைத் தான் செய்து வந்தார். தூக்கிலிட்டு சாகடிக்கும் சட்டத்தின் ஆணையை நிறைவேற்றிய இவர்கள், அரசு ஊழியர்கள் அல்ல. அரசு எந்த உதவியையும் தனது தந்தைக்கு செய்ததில்லை என்கிறார், மல்லிக்கின் மகன் மகாதேவ்.

பிரிட்டிஷ் ஆட்சியில் தான், தூக்கில் ஏற்றுவதற்காக ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். ‘சுதந்திரத்துக்குப்’ பிறகு இந்தப் பணி முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்றாலும், தூக்குத் தண்டனை மட்டும், சட்டத்தில் ‘உயிரோடு’ இருக்கிறது. ஜோகி  ஜோசப் என்ற ஆவணப்பட இயக்குனர், “தூக்கிலிடுபவரின் வாழ்க்கையில் ஓர் நாள்” என்ற ஆவணப்படம் ஒன்றை தயாரித்தார்.  அந்த ஆவணப்படம் மூலம் கிடைத்த வருவாயை தூக்கு ‘வேலை’ செய்த மாலிக் குடும்பத்தினருக்கு வழங்கினார். அந்த  வருவாய் மட்டுமே பலரின் ‘வாழ்க்கையை’ முடித்து வைத்த மாலிக் குடும்பத்துக்கு ‘வாழ்க்கை’ தந்தது. இப்போது இந்தியாவில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடிய - அதில் அனுபவம் கொண்டவர்கள்  எவரும் இல்லை.  ஆந்திராவிலே தூக்குத் தண்டனைக்கு எதிரான ஒரு வழக்கில் தூக்கில் போடக்கூடிய முறையான பயிற்சிப் பெற்றவர்கள் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில், ஆந்திர உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது. பாழடைந்து கிடக்கும் வேலூர் சிறைக் கொட்டடியை புதுப்பிக்க சிறை அதிகாரிகள் வேலூர் பகுதி தொழிலாளர்களை அழைத்த போது அவர்கள் ‘இந்த வேலைக்கு நாங்கள் தயாரில்லை’ என்று மறுத்துவிட்டனர்.  மனித நேய  மிக்க இத் தொழிலாளர்களைப் பாராட்ட வேண்டும்.

Pin It