கமுதி அருகே மண்டல மாணிக்கம் பஞ்சாயத்தைச் சேர்ந்த பேச்சேரி (பள்ளப்பச்சேரி) கிராமத்தைச் சார்ந்த பழனிக்குமார் என்ற 16 வயது பள்ளி மாணவன், சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக் கிராம மக்கள் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணித்ததாக செய்திகள் வந்தன. சாதி ஆதிக்கவாதிகள் வாழும் மண்டல மாணிக்கத்திலிருந்து பேச்சேரிக்கு நேரடியாக சாலை வசதி கிடையாது. தாழ்த்தப்பட்ட மக்கள் போக்குவரத்தைத் தடை செய்வதே இதன் நோக்கம். கமுதி பஞ்சாயத்துக்கான தலைவரை இவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ‘ரிசர்வ்’ தொகுதி. இதற்கு சாதி ஆதிக்கவாதி யினருக்கு தலையாட்டக்கூடிய ஒரு தலித் வேட்பாளரை ஆதிக்கசாதியினரே தேர்ந்தெடுத்து, வேறு எவரும் போட்டியிட விடாமல் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பதவிக்கு ரூ.15 லட்சம் விலை நிர்ணயித்து, ஏலம் விட்டு, பணத்தை பங்கு போட்டுக் கொண்டு விட்டார்களாம்.

இந்த நிலையில் பேச்சேரி வாக்காளர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க விரும்பியதாகவும் அவர்கள் தேர்தலைப் புறக்கணிக்க விரும்பவில்லை என்றும், ஆதிக்க சாதியினரே வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும் அதே கிராமத்தைச் சார்ந்த அர்ஜூனன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவை நீதிபதி வி.இராமசுப்ரமணியன் விசாரணைக்கு ஏற்று மாவட்டத் தலைவர் மற்றும் காவல்துறை அதிகாரிக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளார்.

இதுவே முதல் ஓட்டு

நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களுக்கு எல்லாம் வாக்களிக்க இவர்களுக்கு தடை இல்லை. ஆனால் பஞ்சாயத்து தேர்தலில் மட்டும் “பள்ளர்கள்” என்ற ஒடுக்கப்பட்ட மக்கள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு வந்தது. இந்தத் தடையை 40 ஆண்டுகளாக பார்ப்பனீயத்தில் மூழ்கிக் கிடக்கும் ஆதிக்கசாதியினர் கிராமப்பட்டி என்ற கிராமத்தில் நடைமுறைப்படுத்தி வந்தனர். மதுரை மாவட்டம் செல்லம்மாப்பட்டி ஒன்றியம் கோவிலங்குளம் ஊராட்சியின் கீழ் வரும் கிராமப்பட்டி கிராமத்தில் 40 ஆண்டுகாலத் தடை இந்தத் தேர்தலில் முதன்முதலாக தகர்ந்தது. அப்பகுதி ஆதிக்கசாதியினரான பிறன்மலை கள்ளர் என்ற பிரிவினரே இந்த ‘பள்ளர்’ மக்களின் வாக்குகளைப் போடுவது வழக்கமாக இருந்தது. இம்முறை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயத்திடம் தங்களது உரிமை பறிக்கப்படுவதை கிராம மக்கள் புகாராகக் கூறியதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தலையீட்டால் வாக்களிக்கும் உரிமை முதன்முதலாக அம்மக்களுக்கு கிடைத்துள்ளது.

Pin It