'நாத்திகம் பேசும் சூத்திரச்சியே’ எனும் தலைப்பில் சிறு வெளியீடு ஒன்றை வெளியிட்டிருக்கிறார், குத்தூசி குருசாமி. வரலாற்று ஆசிரியர் குருவிக்கரம்பை வேலு தமிழ்க் காப்பியங்களில் ஒன்றான ‘நீலகேசி’யில் அடங்கியுள்ள ‘வேதவாதச் சருக்கம்’ என்ற பகுதியை சுருக்கமாக முன்வைக்கிறது, இந்நூல்.

நீலகேசி, கி.பி. 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என கருதப்படுகிறது. குண்டலகேசி எனும் பவுத்த காப்பியத்துக்கு மறுப்பு சொல்லும் வகையில் எழுதப்பட்ட சமண நெறியைப் பரப்பும் நூல் இது. இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. விவாதங்களை முன் வைத்து எழுதப்பட்ட பல தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டு விட்டன. அப்படி அமிழ்ந்துபோய் கிடைக்கப் பெறாத விவாத நூல்கள் பிங்களம், அஞ்சனம், தத்துவ கரிசனம், காலகேசி போன்றவையாகும். பவுத்த சிந்தனைகளை விவாதங்களோடு முன் வைத்த குண்டலகேசியும் கிடைக்கப் பெறவில்லை. குண்டலகேசிக்கு மறுப்பாக வந்த நீலகேசி மட்டும் தப்பிப் பிழைத்துள்ளது. வேத - வைதீகக் கோட்பாட்டை எதிர்த்த பல நூல்கள் அழிக்கப்பட்டுவிட்டன. நீலகேசியில் 31 பாடல்கள் இருந்திருக்கின்றன. ‘அவற்றில் எட்டுப்பாடல்கள் வரிசையாக மறைந்துவிட்டன’ என நீலகேசியின் உரையாசிரியர் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் குறிப்பிடுகிறார்.

நீலகேசி ஒரு சமண துறவிப் பெண். வேத வைதீக மறுப்பாளர். காகந்தி எனும் நகரத்தில், பூதிகன் என்ற பார்ப்பான் வேத பாட சாலை நடத்தி வருகிறான். பார்ப்பன மாணவர்கள் படித்தனர். அதன் காரணமாக காகந்தி நகரம் கடுமையான காவலுக்கு உட்பட்டிருந்தது. அந்த பாதுகாப்புகளை மீறி நகருக்குள் ஊடுருவிய நீலகேசி, வேத பாடசாலைக்குள்ளும் புகுந்துவிட்டாள். அங்கே மறைந்து நின்று, பூதிகப் பார்ப்பான், வேதத்தின் பெருமைகளைப் பேசுவதைக் கேட்டாள்.“வேதம் ஆதியானது; தானாகத் தோன்றியது; அது மனிதர்களால் பாடப்பட்டது அல்ல” என்று பூதிகன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒளிந்திருந்த நீலகேசி, திடீரென்று, பூதிகன் முன்வந்து நின்றாள்.

பூதிகன் அதிர்ச்சியடைந்தான். “வேதியனே உன்னுடைய வேதத்தின் முடிவான கருத்துகள் என்ன?” என்று வினாக்களை தொடுக்கிறாள் நீலகேசி. வேதத்திலிருந்து தோன்றிய நூல்களைப் பட்டியலிட்டான் பூதிகன். “அப்படியானால் நீ கூறும் வேதத்திலிருந்து தோன்றிய நூல்கள் ஏன் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டுக் கிடக்கின்றன?” என்று எதிர் கேள்வி போட்டாள் நீலகேசி. ஆத்திரமடைந்த பூதிகன் -“அடியேய், சூத்திரச்சியே, நீ வேதங்களை கற்று உணர்ந்து கொள்ளும் தகுதியும், உரிமையும் அற்றவள்; நீ ஒரு சூத்திரச்சி; கீழ் மகள்; ஆகவே நாத்திகம் பேசுகிறாய்” என்று கோபமாகப் பேசுகிறான். நீலகேசி பதிலடி தருகிறாள். “உன்னுடைய வேதப் படியே அசலன் - பசுவுக்குப் பிறந்தவன், சிருங்கி - மானுக்குப் பிறந்தவன், விரிஞ்சி - புலிக்குப் பிறந்தவன், கேச கம்பளன் - நரிக்குப் பிறந்தவன், வசிட்டனும் அவன் தம்பி அகத்தியனும் - அப்பன் பெயர் தெரியாத ஊர்வசிக்குப் பிறந்தவர்கள். உண்மையான தாய் தந்தைக்குப் பிறந்த நானா கீழ்மகள்?” என்று, எதிர்கேள்வி கேட்கிறாள்.

வேதம் - “ஆதியும் - அந்தமும் இல்லாதது என்பது உண்மையானால், அது ஏன், ஒழுக்கக் கேடுகளை ஆதரிக்கிறது?வேதம், கொலை செய்வதை, மது குடிப்பதை, திருடுவதை, வன்முறையில் பெண்களுடன் புணருவதைத் தவறு இல்லை என்று கூறுகிறதே” என்று கூறி, அதற்கான வேதப் பாடல்களையும் ஆதாரத்துடன் முன் வைக்கிறாள் நீலகேசி.

வேதம் சுயம்புவாக - தானாகத் தோன்றியது என்ற வாதத்தை, ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டி மறுக்கின்றாள். ஒருவன் ஒரு ஊரின் நடுவில் உள்ள வீட்டின் முன்புறத்தில் எவரும் இல்லாத நேரத்தில் மலம் கழித்துவிட்டு போய் விடுகிறான். மலத்துக்கு சொந்தக்காரன் அங்கு இல்லை. மலம் மட்டும் இருக்கிறது. எனவே மலம் தானாகத் தோன்றியது என்று கூற முடியுமா? வேதமும், அந்த மலம் போன்றதே. மருத்துவர்கள், அந்த மலத்தைச் சோதித்து, மலம் கழித்தவன், நோயற்றவனா? நோய்வாய்ப்பட்டவனா என்று கூறி விடுவார்கள். ஆனால், அந்த மலத்துக்கு சொந்தக்காரன் பிரம்மாவின் வாயில் பிறந்தவனா? தோளில் பிறந்தவனா? தொடையில் பிறந்தவனா? காலில் பிறந்தவனா? என்று கூற முடியாது. ஆனால் அவர்கள் அறிஞர்களா? அறிவீலிகளா? என்பதை நன்கு ஆராய்ந்து அலசிச் சொல்லிவிட முடியும் என்று அறிவார்ந்த வாதங்களை அடுக்குகிறாள் நீலகேசி.

பிரம்மாவின் நான்கு உறுப்புகளிலிருந்து, நான்கு வகையான வருணத்தவரும் பிறந்ததாகக் கூறுவதைக் கேள்வி கேட்கிறாள் நீலகேசி. பிரம்மாவின் உறுப்புகளிலேயே ஏன் இந்த வேறுபாடு? பலா மரத்தில் வெவ்வேறு பகுதிகளான வேர், அடிமரம், கிளை, நுனிக்கொம்பு ஆகியவற்றில் காய்த்துக் கனிந்த பலாச்சுளையில் இனிப்பு ஒரே அளவாக உள்ளதே! பலாச்சுளையை சுவைத்துப் பார்த்துள்ளாயா? உன் பிரம்மா, பலா மரத்துக்கு உரிய தகுதிகூட அற்றவனா?” என்று கிடுக்கிப் பிடி போடுகிறாள் நீலகேசி.

நீங்கள் பலி கொடுக்கும் உயிர்களை தேவர்கள் ஏற்கிறார்கள் என்றால், அவர்களும் கயவர்களே. அப்படிப்பட்ட கயவர்கள், உங்களுடைய தீவினையை கேடு களை எப்படிப் போக்குவார்கள்?தேவர்களே, தங்களுக்குத் தேவையான உயிரினங்களைக் கொன்று சாப்பிடுவதை யார் தடுத்தார்கள்? நீண்ட தொலைவில் இருந்து கொண்டு, உணவுக்காக உங்களிடம் தேவர்கள் கையேந்துவது இழிவு அல்லவா? உங்களுடைய சுயநலத்துக்காக நீங்கள் தேவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள்” என்று நீலகேசி வாதிடுகிறாள். வேதத்தை எதிர்த்தால் ‘நாத்திகர், சூத்திரர்’ என்று பார்ப்பனர்கள் இழிவுபடுத்தும் போக்குக்கு இலக்கியச் சான்றாக நீலகேசி விளங்குகிறது. பூதிகன் எனும் பார்ப்பான் கூறுவதாக அமைந்துள்ள பாடல் இது.

“நாத்திகம் அல்லது சொல்லலை யாயின் முன் நான் பயந்த

சாத்திரமாவது வேதம் அன்றோஅதுதான் சுயம்பு

சூத்திரி நீயது வல்லைய லாமையின் சொல்லுகிலாப்

போத்தந்தி யோஅதன் தீமைஎன் றான் பொங்கிப் பூதகனே.

வேதத்தைக் கற்க தகுதியும் உரிமையும் இல்லாத சூத்திரச்சி, நாத்திகம் பேசி, வேதத்தைக் குறைகூறும் தகுதி இல்லை. உரிமையற்றவர் வேதத்தைப் படித்த தாலேயே அதில் குறை காணத் தொடங்கிவிட்டான் என்ற கருத்துப்பட மேற்கண்ட பாடல் அமைந்துள்ளது.

-நூல் வெளியீடு: குத்தூசியார் பதிப்பகம், 26 விநோத் அவென்யூ, வி.ஜி.பி. லே அவுட், பாகம் 2, உத்தண்டி. பக்:40, விலை: ரூ.20. 

Pin It