அக்.10 - ‘தூக்குத் தண்டனைக்கு எதிரான சர்வதேச நாள்’. உலகம் முழுதும் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட வேண்டும் என்ற இயக்கத்துக்கு இங்கி லாந்து தலைமை ஏற்று வழி நடத்தத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சகம், உலகம் முழுதும் உள்ள அதன் தூதரகங்கள் வழியாக தூக்கு தண்டனை எதிர்ப்பு நாளையொட்டி அந்தத் தண்டனையை நிறுத்தக் கோரும் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது. 2015 ஆம் ஆண்டில் உலகம் முழுதும் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டுவிட்டது என்று பிரகடனப்படுத்துவதே இங்கிலாந்தின் இலக்கு.

உலக நாடுகளில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து குடி உரிமை பெற்றவர்களை அதிலிருந்து காப்பாற்றும் முயற்சியாக தூக்குத் தண்டனை அமுலில் இல்லாத நாடுகளுக்கு, அவர்களை திருப்பி அனுப்பக் கோரும் முயற்சிகளில் இங்கிலாந்து தூதரகங்கள் இறங்கியுள்ளன. தூக்குத் தண்டனைக்கு மாற்றாக வேறு தண்டனைகளை வழங்குவதற்கு செல்வாக்குள்ள சக்திகளின் வழியாக தொடர்புடைய நாடுகளை நிர்ப்பந்திக்கும் முயற்சி களிலும், இங்கிலாந்து தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன. அத்துடன், அய்.நா. பொதுச் சபை, தூக்குத் தண்டனையை உலகம் முழுதும் முடிவுக்குக் கொண்டு வர வலியுறத்தும் தீர்மானத்தையும் மீண்டும் நிறை வேற்ற இங்கிலாந்து அய்.நா.வை வலியுறுத்தியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 22 நாடுகள் தூக்குத் தண்டனையை தங்கள் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கி விட்டன. இப்போது 95 நாடுகளில் தூக்குத் தண்டனை சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. அய்ரோப்பிய ஒன்றியம் முழுதும் (பெலாரஸ் என்ற நாட்டைத் தவிர) தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் நாடுகளின் எண்ணிக்கையும் 58 ஆக குறைந்துள்ளது. இந்த நாடுகளிலும்கூட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ன. தூக்குத் தண்டனை அமுலில் உள்ள சீனாவில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தவிர்க்கவே முடியாத வழக்குளில் மட்டும் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை விதிக்கும் முறையை மாற்றி, விஷ ஊசியைப் பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் சில மாநிலங் களில் தூக்குத் தண்டனை அமுலில் உள்ளது. அமெரிக்காவின் சட்டத்தில் 8வது திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி இனி விஷ ஊசி போடும் முறையையே பயன்படுத்த வேண்டும். ரஷ்யா நாட்டில் தூக்குத் தண்டனை சட்டத்தில் இருந்தாலும் 2009 ஆம் ஆண்டு வரை அமுல்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தியாவும் உலக நாடுகளின் மாற்றத்தை ஏற்று, தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து அகற்ற முன் வருமா?

(தகவல்: ‘இந்து’ தலையங்கம், அக்.26)

Pin It