"பழங்காலத்திய மகா புருசர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ" என்றார் மாசேதுங். "புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே" என்றார் லெனின். இவ்வகை சிறப்புக் குணங்கள் கொண்ட நூலகமும் புத்தகமும் உருவாகுவதற்கு முக்கிய மூலக்கூறாக விளங்குவது காகிதமேயாகும். அக்காகிதம் பிறந்து வளர்ந்து ஆளான கதையை இரத்தின சுருக்கமாக இக்கட்டுரையில் காண்போம்.
ஆதி மனிதன் கற்களின் மீதும், பாறைகளின் மீதும் வரைந்து வைத்துள்ள ஒழுங்கற்றக் கோடுகளிலிருந்துதான் மனிதகுலத்தின் பதியப்பட்ட வரலாறு துவங்குகிறது என்பர் வரலாற்றாசிரிய பெருமக்கள். ஆம், காட்டுமிராண்டி காலத்து மனிதன் தன் சிந்தனையை / எண்ணங்களை கற்களின் மீதும் பாறைகளின் மீதும் பல்வேறு வடிவங்களில் பொறித்து வைத்ததன் மூலம் அவற்றை அடுத்தத் தலைமுறையின் வாசிப்புக்கு வழங்கிவிட்டுப் போனான். எனில் அந்த ஆதி மனிதனிலிருந்து உருவான உலகத்தின் முதல் எழுத்தாளன் அல்லது கலைஞன் எழுதுவதற்கானக் காகிதங்களாக கற்கள் மற்றும் பாறைகளைப் பயன்படுத்தினான் எனலாம்.
கற்களைத் தொடர்ந்து விலங்குகளின் எலும்புகள், மூங்கில் தடிகள் ஆகிய வற்றைப் பயன்படுத்தி எழுதலான மனிதன் அவ்வகைப்பட்ட பதிவேடுகளை / எழுத்துகளைக் கையாள்வதிலும், பாதுகாப்பதிலும் மிகுந்திருந்த சிரமத்திலிருந்து விடுபடும்பொருட்டு விடாது சிந்தித்தவாறே இருந்தான். மூங்கில் தடிகளையும், விலங்கின் எலும்புகளையும் எழுதுவதற்குப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து பிற் காலங்களில் பட்டுத் துணிகளை உபயோகப்படுத்தியவர்களுள் சீனர்கள் முதன்மை இடம் வகித்தனர். சுமேரியர்களோ சுட்ட களிமண் தட்டுகளில் எழுதி, அவற்றை நீண்ட காலத்துக்கு அழியாது பாதுகாப்பதிலும், எளிமையாகக் கையாள்வதிலும் கைத்தேர்ந்தவர்களாய் இருந்து வந்துள்ளனர்.
இவ்விசயத்தில் நமது பழந்தமிழ் எழுத்தாளர்கள் கற்களையும், நறுக்கி உலர்த்திப் பதப்படுத்தப்பட்ட பனை ஓலைகளையும் எழுதப் பயன்படுத்தியுள்ளனர். அவை இன்றளவும் நமக்கு முறையே கல்வெட்டு சாசனங்களாகவும், ஓலைச் சுவடிகளாகவும் காணக்கிடைக்கின்றன. இவ்வாறாக தமது எழுத்துகளைப் பொறிப்பதற்கும், இலக்கியப் பிரதிகளை உருவாக்குவதற்கும் உகந்த ஒரு எளிமையான சாதனத்தைக் கண்டடைவதில் விடாது முயற்சித்த மனிதனின் விசேசமான ஆராய்ச்சி மனப்பான்மை இறுதியாக காகிதம் என்னும் எளிய சாதனத்தை கண்டுபிடித்தது.
காகிதம் பிறந்தது :
முதன் முதலாக காகிதம் போன்ற தோற்றத்தை ஒத்த பொருட்களை எழுதப் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள். அவர்கள்தான் கி.மு.ஏழாம் நூற்றாண்டில் பாப்பிரஸ் (Cyperus Papyrus) என்னும் தாவரத்தின் தண்டுப் பகுதியை எழுதும் காகிதமாக பயன்படுத்தினர். பாப்பிரஸ் என்னும் அத்தாவரத்தின் பெயராலேயே இன்றளவும் காகிதமானது பேப்பர் என்றழைக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப் படுகிறது. ஆனாலும் அசலான காகிதத்தைக் கண்டுபிடித்தப் பெருமை கி.பி. 105 இல் வாழ்ந்த சீன தேசத்து விஞ்ஞானி கைய் லூன் (Cai Lun) என்பவரையே சாரும். அவர்தான் மரநார்கள், தாவர இலைகள், மீன்பிடி வலைகள், துணிக் கழிவுகள் கொண்டு காகிதம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்தவர். அத்துடன் ஒருநாள் குளவி (Wasp) யொன்று மரத்தைத் துளைத்து அதிலிருந்து பெறும் மரத்துகள்களைக் கொண்டு தனது வலிமையானக் கூட்டைக் கட்டிக்கொள்வதை கூர்ந்து கவனித்தாராம் கைய் லூன். அக்குளவியின் திட்டத் ( Idea) திலிருந்து தூண்டுதல் பெற்ற அவர் மரத்துகளைக் கூழாக்கி தான் விரும்பும் வடிவத்தில் காகிதத்தைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்து நவீன சமுதாயத்துக்கு கையளித்துவிட்டு சென்றார்.
சீனர்கள் காகிதம் தயாரிக்கும் தொழில் நுட்பத் திறனை வெளியுலகுக்குக் காட்டாமல் பல நூறு ஆண்டுகாலம் இரகசியமாக பாதுகாத்து வந்தனர். கி.பி. 751 இல் அரேபியர்கள் சீனா மீது போர்த்தொடுத்து வென்ற பின்புதான் அந்த குட்டு உடைந்து இரகசியம் வெளிப்பட்டுள்ளது. தாலஸ் போர் எனப்படும் அப்போரில் சீனாவை வென்ற அரேபியா, காகித தயாரிப்பு தொழில் நுட்பம் அறிந்த இரண்டு கைவினைஞர் களை போர்க்கைதிகளாக தம் நாட்டுக்குக் கொண்டு சென்றது. அவ்விரு கைதிகள் மூலம் காகித தயாரிப்பு தொழில் நுட்பம் அரேபியாவில் காலூன்றிய பின்பு உஸ்பெகிஸ்தானிலுள்ள சமர்கண்ட் என்னும் நகரில் உலகத்தின் முதல் காகித தயாரிப்பு தொழிற்சாலை நிறுவப்பட்டது. அங்கிருந்து ஈரான், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் காகித தயாரிப்பு தொழில் நுட்பம் பரவியது.
18 ஆம் நூற்றாண்டு வரைக்கும் கால்நடையின் சாண நிறத்தில் தான் காகிதம் இருந்து வந்துள்ளது. 1844 ஆண்டு சார்லஸ் ஃபெனர்ட்டி (Charles Fenerty) மற்றும் ஃபிரெட்ரிக் கெல்லர் (Friedrich Gottlob Keller) என்னும் இரு விஞ்ஞானிகள் இணைந்து இன்று நாம் பயன்படுத்தும் வெள்ளைக் காகிதம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்தனர்.
இன்று வீடு, கடை, தெரு, பள்ளிக்கூடம், அலுவலகம் என எங்கெங்கும் இறைந்து கிடக்கும் காகிதம், மனித இனத்தின் வாழ்வியல் அம்சகளுடன் தவிர்க்கவியலாத ஒன்றாக மாறிவிட்ட காகிதம் பிறந்து ஆளான கதையின் சுருக்கம் கண்டீர். அதே சமயம் நாம் அன்றாடம் பயன்படுத்தி சர்வ சாதாரணமாகக் கிழித்துப் போடும் ஒவ்வொரு காகிதமும் ஒரு தாவரத்தின் உயிர் மூச்சினாலானது என்ற உணர்வுடனும் அதனை கையாள்வீராக.
- வெ.வெங்கடாசலம்