கொளுத்தும் கோடை வெய்யிலில் சாதி, தீண்டாமைக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகசெயல் வீரர்கள் ஒரு மாத காலம் திட்டமிட்டு ஏப்.14 இல் தொடங்கிய பரப்புரைப் பயணம் தொடர்ந்து சிறப்புடன் நடைபெற்று வருகிறது. சமூகத் தின் உண்மையான ஒரு பிரச்சினையில் மக்களின் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு கழகம் மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்துக்கு கட்சிகளைக் கடந்து ஆதரவு கிடைத்து வருகிறது. ம.தி.மு.க., தி.மு.க., விடுதலை சிறுத்தைகள்,தே.மு.தி.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சார்ந்த தோழர்களே கழகத் தோழர்களை வரவேற்றும், உணவு அளித்தும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருவது, இப்பயணத்துக்கு கிடைத்த வெற்றியாகும். கிராமங்களில் தீண்டாமைக்கு எதிராக பிற்படுத்தப் பட்ட சாதியைச் சார்ந்தவர்களே கழக மேடைகளில் பேச முன்வருவது பயணத்தின் நோக்கத்துக்கு கிடைத்த மற்றொரு வெற்றி என்று கூறலாம்.

தேவையான, சரியான ஒரு கொள்கையை சமுதாயத்தில் பரப்பும் மன நிறைவோடு பெரியாரின் கொள்கைப் பரப்பும் பணியில் பங்கேற்றுள்ள தோழர்கள் கட்சிகளை கடந்து, ஆதரவுக் காட்டி அளித்து வரும் வரவேற்பால் சோர்வுகளை மறந்து பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். தோழர் இராவணன் தலைமையில் நடக்கும் இந்தப் பயணத்தை தோழர் தாமரைக் கண்ணன் ஒருங்கிணைத்து வழி நடத்தி வருகிறார். பயணத்தில் வழி நெடுக பரப்புரை செய்து வருவதோடு பயண நிகழ்வுகளையும் பதிவு செய்து வரும் கோகுல கண்ணன் பயணத்திலிருந்து அனுப்பியுள்ள இரண்டாவது செய்தித் தொகுப்பு.

17.4.2010 முதல் 24.4.2010 வரை திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு, செம்பட்டி, திண்டுக்கல், பொன் நகர், கொசவப்பட்டி,சானார் பட்டி, ஒத்தக்கடை நத்தம், கோபால்பட்டி, வி.எஸ். கோட்டை,அதிகாரிப்பட்டி, கம்பிளியாம்பட்டி, செங்குறிச்சி, ஆலம்பட்டி, வடமதுரை அனைப் பட்டி, ரெட்டியார் சத்திரம், புதுச்சத்திரம், கன்னி வாடி,ஸ்ரீராமபுரம், ஒட்டன் சத்திரம், கள்ளி மந்தையம், பொருளூர்,தொப்பம்பட்டி, கீரனூர், மானூர், பழனி, கே.வேலூர், காவலப்பட்டி,அய்யம்பாளையம், குப்பம்பாளையம், வேலாயுதம் பாளையம்,பாப்பம்பட்டி, வண்டிவாய்க்கால், ராஜாபுரம், கரிக்காரன்புதூர்,கனக்கன்பட்டி, பச்சளநாய்க்கன்பட்டி, ஆயக்குடி, நெய்க்காரப் பட்டி,வேடசந்தூர், எரியோடு, அய்யலூர் ஆகிய பகுதிகளில் பரப்புரை நடைபெற்றது.

தோழர்கள் புதியவன், கோகுலகண்ணன், நல்லதம்பி (பழனி) ஆகியோர் உரையாற்றினர். தோழர் சிற்பி இராசன் அவர்கள் மந்திரமா, தந்திரமா?நடத்தினார். தோழர்கள் தியாகு, முத்துக்குமார் ஆகியோர் பாடல்கள் பாடினர். இந்தப் பயணத்தில் மூன்று பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது. இதில் கழகத்தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

திண்டுக்கல் தோழர்கள் சிவசங்கர், சேது இராசேந்திரன், மோகன்,விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த கணபதி, நரசிம்ம பல்லவன், தி.மு.க. பாப்பம்பட்டி மற்றும் நெய்க்காரப்பட்டி தோழர்கள்,கீசகன் ஆகியோர் பயணக்குழுவினருக்கு உணவு வழங்கினர். தாராபுரம் வழக்கறிஞர் குமார் ரூ.1000 நன்கொடை வழங்கினார்.

செம்பட்டி ஆல்பர்ட், தொப்பம்பட்டி ராசேந்திரன், (ம.தி.மு.க.) பழனி,என்.டி.ராசேந்திரன், (தே.மு.தி.க.) தங்க மங்கை ஏட்டின் செய்தியாளர் கே. கதிர்வேல், பச்சளநாயக்கன், பட்டி கந்தசாமி, பெரியசாமி ஆகியோர் குழுவினருக்கு தேனீர் வழங்கினர். துரை சம்பத்,புதுசத்திரம் மூர்த்தி, (தி.மு.க.) மோகன், மானூர் செல்லத்துரை ஆகியோர் திண்டுக்கல் மாவட்டப் பயணத்தில் தோழர்கள் தங்குவதற்கான இடங்களை ஏற்பாடு செய்தனர். பயணம் பற்றிய விரிவான செய்திகள்:

18.4.2010 - 5 ஆவது நாள் : பயணக் குழு தேனி மாவட்டத்தை முடித்து திண்டுக்கல்லில் துவங்கியது. திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தோழர் இரவனா இல்லத்தில் உணவு வழங்கினார். பொன் நகர், கொசவப்பட்டி, சானார்பட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்து ஒத்தக்கடை சென்றவுடன் மின்னாக்கியில் பழுது ஏற்பட்டது, மின்னாக்கியை சரி செய்யும் வரை தோழர் சிற்பி இராசன் ஒலிபெருக்கி இல்லாமலேயே மந்திரமா, தந்திரமா? நிகழ்ச்சியின் மூலம் கூட்டத்தை கூட்டினார். அடுத்து நத்தம் பகுதியில் பிரச்சாரம் முடிவடைந்தவுடன், தோழர் சிவசங்கர் மதிய உணவிற்கு ரூ.400வழங்கினார். கோபால்பட்டியில் பரப்புரையை முடித்து பயணக்குழு வி.எஸ்.கோட்டை சென்றடைந்தது. வி.எஸ். கோட்டையில் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்பொதுக் கூட்டத்திற்கு துரை சம்பத் தலைமை தாங்கினார். தோழர் சிற்பி இராசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியும், திண்டுக்கல் சக்தி கலைக் குழுவின் மகளிர் பறையாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மழை பெய்து கொண்டு இருந்தபோதும், மழையில் நனைந்தபடியும், குடை பிடித்துக் கொண்டும் மக்கள் இறுதி வரை கருத்துக்களை கேட்டனர். தோழர் இரவனா நன்றி கூற கூட்டம் முடிவடைந்தது.

6 ஆவது நாள் : அதிகாரிப்பட்டி, கம்பிளியாம்பட்டி, செங்குறிச்சி,ஆலம்பட்டி ஆகிய பகுதிகளில் பரப்புரை நடந்தது. ம.தி.மு.க.வை சார்ந்த சேது ராசேந்திரன் மதிய உணவு வழங்கினார். அடுத்து வட மதுரையில், பேருந்திற்காக காத்திருந்த தவில் இசை கலைஞர் நாகராஜ், தாமாக முன்வந்து தோழர்கள் பாடலுக்கு தவில் வாசித்தார். அனைப்பட்டி, ரெட்டியார் சத்திரம் ஆகிய பகுதிகளில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, புதுச் சத்திரம் பயணியர் விடுதியில் பயணக் குழு தங்கியது.

7 ஆவது நாள் : புதுச் சத்திரம் பகுதியில் தி.மு.க. கிளைச் செயலாளர்மூர்த்தி, பயணக் குழுவை வரவேற்று காலை உணவு வழங்கினார். கன்னிவாடி, ஸ்ரீராமபுரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் முடிந்தவுடன் தி.மு.க. தோழர் மூர்த்தி மதிய உணவை வழங்கினார். மாலையில் ஒட்டன்சத்திரம் பகுதியை சுற்றிலும் இரவு பொதுக் கூட்டம் நடப்பதைப் பற்றி அறிவிப்பு (சுமார் 3 மணிநேரம்) செய்யப்பட்டது.

ஒட்டன்சத்திரத்தில் ஆசிரியர் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் தோழர் சிற்பி இராசன் முதலில் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்தினார். அடுத்து ஒரு பேச்சாளர் உரை,சிறிது நேரம் மந்திரமா தந்திரமா என மாறி மாறி நிகழ்ச்சி நடைபெற்றது. கழக தோழியர் மதி, சேலம் கோகுலகண்ணன்,திண்டுக்கல் மாவட்ட செயலாளர் இரவனா, மாவட்ட தலைவர் துரை சம்பத் ஆகியோரது உரைக்குப் பின் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். பெரியார் நம்பி நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது. இரவு உணவும், தங்குவதற்கான இடமும் தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர் தி. மோகன் அவரது செலவில் ஏற்பாடு செய்தார்.

8 ஆவது நாள் : பழனி தோழர்கள் 20 பேரும், மானூர் தோழர்கள் 10பேரும் தனி வாகனங்களில் வந்து பயணத்தில் இணைந்தனர். கள்ளி மந்தையம் என்ற ஊரில், தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் ச. கருப்பு சாமி, பயணக் குழுவை வரவேற்று காலை உணவு வழங்கினார். கழகத் தலைவர் பயணக்குழுவுடன் உடன் சென்றார். பொருளூரில் ம.தி.மு.க.வினர் பயணக் குழுவை வரவேற்று அனைவருக்கும் குளிர்பானம் வழங்கி, கழகத் தலைவருக்கு சால்வை அணிவித்தனர். தொப்பம்பட்டி, கீரனூர் ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து மாவட்ட கவுன்சிலரும், தொப்பம்பட்டி ஒன்றிய ம.தி.மு.க. செயலாளருமான துரை ராசேந்திரன் அவருடைய இல்லத்திற்கு அழைத்து இளநீர் வழங்கினார். விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாவட்ட பொருப்பாளர் திருவளவன், அவருடைய தோட்டத்தில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார். அ.தி.மு.க.வை சார்ந்த ஆறுசாமி உறுதுணையாக இருந்தார். மானூரில் பிரசாரத்தை முடித்து, பழனி பொதுக் கூட்டத்திற்கு பயணக் குழுச் சென்றது. பழனியில் மிகச் சிறப்பாக பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

தோழர் சிற்பி இராசனின் மந்திரமா, தந்திரமா? நிகழ்ச்சிக்குப் பிறகு மாவட்ட அமைப்பாளர் நல்லதம்பி தலைமை உரையாற்றினார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளர் உ. தனியரசு கலந்து கொண்டு சாதி தீண்டாமைக்கு எதிரான கருத்துரையும், கழகத்தின் இம்முயற்சியை வாழ்த்தியும் பேசினார். (உரை பின்னர்) கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். முருகன் நன்றி கூறினார். பயணக்குழுவினர்,வழக்கறிஞர் செல்லத்துரை இல்லத்தில் தங்கினர்.

9 ஆவது நாள்: கே. வேலூர், காவலப்பட்டி ஆகிய பகுதிகளில் பரப்புரை செய்துவிட்டு, ஐவர் மலை அருகே பயணக் குழுவினர் ஓய்வெடுத்தனர். பாப்பம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் நரசிம்ம பல்லவன் (தி.மு.க.) மதிய உணவு வழங்கினார். அய்யம்பாளையம்,குப்பம்பாளையம், வேலாயுதம் பாளையம் ஆகிய பகுதிகளில் பரப்புரை நடைபெற்றது. பழனி ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் என்.டி.ராமச்சந்திரன் தேனீர் வழங்கினார். இரவு பாப்பம்பட்டியில் பரப்புரை நிறைவடைந்தது. தி.மு.க. நரசிம்ம பல்லவன் இல்லத்தில் உணவை முடித்துக் கொண்டு, மானூர் செல்லத்துரை இல்லத்தில் இரவு தங்கினர்.

10 ஆவது நாள் : மானூர் தோழர்கள் வழங்கிய காலை உணவிற்கு பிறகு, வண்டிவாய்க்கால், ராஜாபுரம், கரிக்காரன் புதூர் ஆகிய இடங்களில் பரப்புரை நடைபெற்றது. நெய்க்காரப்பட்டி தோழர்கள் பயணக் குழுவிற்கு மதிய உணவாக மாட்டிறைச்சி பிரியாணி வழங்கினர். மாலை கணக்கன்பட்டியில் தங்க மங்கை நிருபர் கதிர்வேல் அனைவருக்கும் தேனீர் வழங்கி வரவேற்று பேசினார். பச்சளநாய்க்கன்பட்டியில் கழகத் தோழர்கள் கந்தசாமி, பெரியசாமி ஆகியோர் சாலையின் இருபுறங்களிலும் கொடி நட்டிருந்தனர். இங்கு ம.தி.மு.க. தோழர் பி.வைகோ அனந்தகிருட்டிணன் பயணக் குழுவை வாழ்த்திப் பேசினார். இரவு ஆயக்குடி, நெய்க்காரப்பட்டியில் பிரச்சாரம் நடைபெற்றது. சில புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர். தோழர் சிற்பி இராசன் இப்பகுதியில் கொடியேற்றி வைத்தார். பிறகு பயணக்குழு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றது.

11 ஆவது நாள் : வேடசந்தூரில் இரண்டு இடங்களிலும், எரியோடு பகுதியிலும் பரப்புரை செய்து, சென்னை கழகத் தோழர் மதிவாணனின் பெற்றோர் சரஸ்வதி-மாறன் ஆகியோர் இல்லத்தில் பயணக்குழுவினருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் இறுதியாக அய்யலூரில் பரப்புரை செய்து விட்டு பயணக்குழுவினர் திருச்சி மாவட்டம் வந்தனர். வையம்பட்டி,மணப்பாறையில் பரப்புரை செய்துவிட்டு, திருவரங்கம் பொதுக் கூட்டத்திற்கு பயணக் குழு புறப்பட்டது. மணப்பாறையில் தமிழ்ச்செல்வன் ஆசிரியர் தேனீர் வழங்கி வழி அனுப்பி வைத்தார்.

திருவரங்கம் பொதுக் கூட்டம்

மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவும், திருச்சி பெரியார் இசைக் குழுவும் இணைந்து கொள்கைப் பாடல்களைப் பாடினர். தொடர்ந்து சிற்பி இராசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்தினார். தோழர் ஆறுமுகம் வரவேற்புரையாற்ற, திருவரங்கம் நகரத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.முத்து தலைமையுரையாற்றினார். மாவட்ட தலைவர் செ.த.ராசேந்திரன் மற்றும் மாவட்ட பொருளாளர் புதியவன் ஆகியோர் உரையை அடுத்து, கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார். நகரத் தலைவர் த. அசோக் நன்றி கூறினார். தோழர் எஸ்.எஸ். முத்து இல்லத்தில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. பயணங்களில் மேட்டூர் முத்துக்குமார், திருப்பூர் தியாகு பாடல்களை பாடினர். சேலம் கோகுல கண்ணன், திருச்சி புதியவன், பழனி நல்லதம்பி ஆகியோர் உரை நிகழ்த்தினர். பயணம் தொடருகிறது.

-கோகுல் கண்ணன்

Pin It