23.4.10 காலை 11 மணிக்கு சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆட்டுகிடா வெட்டி பூஜை செய்ததைக் கண்டித்து கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக மாவட்டத் தலைவர் செ.மார்ட்டின் தலைமை தாங்கினார்.

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் பில்லி சூனியம் இருப்பதாக கருதிய அலுவலக ஊழியர்கள் 18.4.2010 அன்று இரவு 12 மணிக்கு ஒரு ஆட்டுகிடாவை வெட்டி, மாநகராட்சி அலுவலகத்தைச் சுற்றி வந்து, அலுவலக அறைகளில் அதன் இரத்தத்தை தெளித்துள்ளனர். மாநகராட்சி வளாகத்தில் திறக்கப்படாத மூடிய நிலையில் அண்ணாசிலை ஒன்று உள்ளது. அந்த சிலைக்கும் இரத்தம் தெளித்ததாகவும், பத்து பதினைந்து நாட்களாக மாநகராட்சி அலுவலகத்திற்கு வராத சேலம் மேயர் இந்த பூஜையை நடத்திய பின்னரே அலுவலகத்திற்கு வந்ததாகவும் செய்தித் தாள்களில் செய்தி வந்ததைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் இந்த மூடநம்பிக்கை செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சியின் இச்செயலை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. தோழர்கள் டைகர் பாலன், கோவிந்தராசு, பூமொழி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தோழர் டைகர் பாலன் பேசுகையில், பெரியாரின் கைத்தடியைப் பிடித்து வந்தவர்கள் நாங்கள் அண்ணாவின் தம்பிகள் என்று கூறிக் கொள்ளும் தி.மு.க. ஆட்சியில் தான் அரசு அலுவலகங்களில் மத மூடநம்பிக்கைகள் தலைவிரித்தாடுகின்றன. தி.மு.க.வில் உள்ள வெகு சில பகுத்தறிவாளர்களில் ஒருவரான சேலம் மாவட்ட அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் அலுவலகத்தில் இதுபோன்ற மூடநம்பிக்கை செயல்களை செய்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அறிவியல் மனப்பான்iயை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் கூறும்போது அரசு அலுவலகங்களில் இது போன்ற மூட நம்பிக்கை செயல்கள் நடைபெறுகின்றன. அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளர்கள் படங்களை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையெனில் அரசு பேருந்துகள், அலுவலகங்களில் உள்ள கடவுள் படங்களை நீக்கும் பணியில் எங்கள் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஈடுபடுவார்கள் என்றும் எச்சரித்தார். ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பொது மக்களுக்கு துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது. தோழர் சேலம் பாலு நன்றி கூற ஆர்ப்பாட்டம் முடிந்தது.

Pin It