உயர் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கினால், மருத்துவத் துறையில் தரம் சீரழிந்து,நோயாளிகள் மரணமடைந்துவிடுவார்கள் என்று ஓங்கி ஓங்கி கூக்குரலிட்டார்கள் பார்ப்பனர்கள். அப்போது மருத்துவத் துறை பொறுப்பில் இருந்த அமைச்சர் அன்புமணி, இடஒதுக்கீட்டை வலியுறுத்தியதற்காக வேணு கோபாலப் பார்ப்பனர்கள் (இவர் எய்ம்ஸ் உயர் மருத்துவக் கல்வி நிறுவனத்தின் இயக்குனராக இருந்தவர்) அமைச்சருக்கு எதிரான அத்தனை தொல்லைகளையும் உருவாக்கினார்கள். இப்போது கேதான் தேசாய் என்ற குஜராத் பார்ப்பனரின் மகாமகா ஊழல், இப்போது அம்பலமாகியிருக்கிறது. ரூ.1800 கோடி பணமும், 1500 கிலோ தங்கமும் அவரிடமிருந்து மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. பஞ்சாப் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.2 கோடி லஞ்சம் பெற்றபோது, அவர் பிடி பட்டுள்ளார். மருத்துவக் கல்லூரிக்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும் “கவனிக்க வேண்டிய முறையில் கவனித் தால்”,அங்கீகாரம் கிடைத்து விடும்; முழுமையான கட்டமைப்பு வசதிகளோடு உள்ள கல்லூரி என்றாலும்கூட - ‘கவனிக்கா விட்டால்’ அங்கீகாரம் கிடைக்காது. இதுதான் மருத்துவத் துறையில் இடஒதுக்கீடு வந்துவிட்டால் தகுதி திறமை போய் விடும் என்று கூப்பாடு போட்ட இவர்களின் யோக்கியதை! இந்த ஊழலுக்கு கவுன்சில் உறுப்பினர்கள் அனைவருமே உடந்தையாக இருந்திருக்கிறார்கள். ஊழல் - இவருக்கு புதியது அல்ல. 2000 ஆம் ஆண்டில் இவர், இதே மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்தபோது, வருமான வரித்துறையினர் இவர் வீட்டில் சோதனையிட்டு, கணக்கில் வராத ரூ.65 லட்சத் துக்கான, அவர் பெயரில் இருந்த வரைவோலையைக் கைப் பற்றினர். அதிகாரத்தை முறைக்கேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டை உறுதி செய்ததால், தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதே பேர்வழி, 2009 ஆம் ஆண்டில் மீண்டும் அதே தலைவர் பதவியைக் கைப்பற்றி யுள்ளார்.

இன்னும் வேடிக்கை என்னவென்றால், இரண்டாம் முறை தலைவரானபோது, இவருக்கு போட்டியே இல்லை. டாக்டர் ராணி பாஸ்கரன், டாக்டர் வேத்பிரகாஷ் மிஸ்ரா என்ற இரண்டு பேர் அவரது பெயரை முன்மொழிய, வேறு போட்டி யாளர்கள் எவருமில்லாததால், தேசாய் தேர்வு செய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்டார். இந்தப் பதவிக்கு இந்தியா விலேயே - இந்த ஊழல் பேர்வழியைவிட்டால் வேறு தகுதி யானவர்களே கிடையாதா?தேர்வு செய்யப்பட்ட பிறகும், அவரது முறைகேடுகள் தொடர்ந்தன. இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரான பிறகு பல மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக போர்டுகளிலும் உறுப்பினராக இருந்தார். அதிலே ஒன்று சென்னையில் உள்ள இராமச்சந்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம்தான் சட்ட விரோதமாக நன்கொடை கட்டணமாக ரூ.40 லட்சம் கேட்டதை கேமிராவில் படம் பிடித்து, ஆங்கில நாளேடு ஒன்று அம்பலப்படுத்தியது.

அப்போது-அவர்இதே கல்லூரியின் போர்டு உறுப்பினர். இதற்குப் பிறகு தான் இதே ஆண்டில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் , இந்த தேசாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி,இந்த ‘நேர்மையின் அவதாரத்தை’ பாராட்டியது. இந்தியா முழுதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொன்றிலும் இவருக்கு 5இடங்கள் ஒதுக்கப்படும். அதையும் விற்பனை செய்து வந்தார். இப்போது 3 ஆண்டு களுக்கான குறுகிய கால மருத்துவப் பட்டப்படிப்புகளைத் தொடங்கும் திட்டத்தை உருவாக்கி, அதற்கு,மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலையும் பெற்றிருந்தார். இத்திட்டம் அமுலுக்கு வந்தால், பல்லாயிரம் கோடி ரூபாயை ‘அங்கீகாரம்’ வழங்குவதற்காக சுருட்டியிருந்திருப்பார். இவ்வளவு ஊழல் பெருச்சாளியாக இருந்தும்கூட மத்திய சுகா தாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார் என்றும், அமைச்சக அதிகாரிகள் தேசாயின் தீவிர ஆதரவாளர்களாக செயல்பட்டனர் என்றும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’நாளேடு கூறுகிறது. மேலும் சோதனை களில்,அவரிடமிருந்து கைப்பற்றப்படும் பணத்தின் மதிப்பு ரூ.2500 கோடியாக உயரும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் இப்படி,ஒரு தனி மனிதரிடம் குவிந்து கிடப்பது தான், அதிர்ச்சி யளிப்பதாகும். கல்விதனியார் மயமாகி வருவதால், அது வணிக மயமாகி, ஊழல் கொள்ளைக்கும் வித்திடுகிறது. டெல்லி சாம்ராஜ்யத்தில் இத்தகைய “பார்ப்பன பீடாதிபதிகள்” அதிகார மய்யங்களைப் பிடித்துக் கொண்டு, நாட்டையே கூறு போட்டு,கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அய்.பி.எல். கிரிக்கெட் மோசடியைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிவந்திருக்கிறது. இன்னும் வெளிவராமல் இருப்பவை எத்தனையோ! இது ஜனநாயகமா? பார்ப்பன நாயகமா? மக்களாட்சியா? மகாராசாக்கள் ஆட்சியா?

.
-விடுதலை இராசேந்திரன்
Pin It