உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்து முடிந்துவிட்டது. வெளிநாடுகளில் வந்திருந்த ஆய்வறிஞர்களும் விதிவிலக்காக தமிழகத்தைச் சார்ந்த ஒரு சிலரையும் தவிர, வழக்கம்போல் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டுவதில்தான் கடும் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கூட்டிக் கழித்துப் பார்த்தால் - இந்த மாநாடு, என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதுதான் கேள்வி?
 
இனப் படுகொலையை சந்தித்த ஈழத் தமிழினம், அந்தத் துயரம் நிறைந்த அவல வாழ்க்கையிலிருந்து மீளவில்லை. அவர்கள் மறுவாழ்வுக்காக எந்த உறுதியையும் வழங்கிட சிங்களப் பேரினவாத ஆட்சியும் தயாராக இல்லை. அங்கே இந்தியத் தொழிலதிபர்களும் வடநாட்டு திரையுலகமும் இணைந்து திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்தியது. இங்கே உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்து முடிந்துள்ளது. தமிழ் வழிக் கல்வியில் பயில்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற ஒரு நல்ல அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். இதை வரவேற்க வேண்டியதுதான். அறிவிப்புகளோடு அது முடிந்துவிடக் கூடாது - என்பதே நமது கவலை! (அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் சட்டம்,சமூக சீர்திருத்தக் குழு போன்றவற்றைப் போல்)
 
வடமாநிலங்களில் நீதிமன்ற மொழியாக இந்தி இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும், அதற்கு முட்டுக்கட்டை போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்ற கேள்வியை இனி மேலாவது தமிழக முதல்வர் மத்திய அரசிடம் அழுத்தம் தந்து வலியுறுத்துவாரா?
 
செம்மொழியான தமிழ் - தமிழ் நாட்டுக் கோயில்களில் கட்டாயமான வழிபாட்டு மொழியாக மாற்றப்படாமல் செத்துப் போன சமஸ்கிருதத்துக்கு மட்டும் முன்னுரிமை தருவதை மாற்றுவதற்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா?
 
சங்க இலக்கியம் - பக்தி இலக்கியம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதைவிட தமிழை அறிவியல் யுகத்துக்கும், கணினி யுகத்துக்கும் ஏற்ப வளர்ச்சிப் பெறச் செய்வதற்காக மா நாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள் செயல் வடிவம் பெறச் செய்வதே உண்மையான தமிழ் வளர்ச்சியாகும்; அதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்படுமா?
 
தமிழை அறிவியல் ரீதியாக வளர்ப்பதற்கும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் கொள்கையை சமுதாயக் கொள்கையாக செயல்படுத்துவதற்கும் ரூ.400 கோடி செலவில் உலகத் தமிழ் மாநாடு ஒன்றைத்தான் நடத்தியாக வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனாலும், எல்லாமும் நடந்து முடிந்த பிறகாவது,மேற்குறிப்பிட்ட இரண்டு தளங்களிலாவது தமிழக அரசு செயல்பட முன் வருமா? முன்வரவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
 
தமிழ்மொழியைப் பேசிக் கொண்டிருந்த ஒரு தொன்மையான இனம், இராணுவத்தின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் போது, கோவையில் திருவிழா ஒன்று மன்னருக்குரிய புகழாரங்களோடு நடந்து முடிந்துள்ள நிலையில், அந்தப் புகழ்ப் போதைக்குள்ளேயே தமிழினத்தை மூழ்கச் செய்து விடாமல் பாதிக்கப்பட்ட தமிழ் இனத்துக்கும், கிராமங்களில் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கப்பட்ட தமிழர்களுக்கும் கோயில்கள் உட்பட சமூக பண்பாட்டுத் தளங்களில் தீட்டாக்கப்பட்டுக் கிடக்கும் தமிழுக்கும், சமத்துவத்தையும்,அங்கீகாரத்தையும் மீட்டுத் தரும் முயற்சிகளில் இறங்கும்போதுதான்‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சொற்றொடர் அர்த்தம் பெறும். இல்லையேல் - இவை எல்லாமுமே சடங்குகள் தான்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It