கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நடிகர் சிவக்குமார் தமிழகத்தில் நிலவும் சாதி-தீண்டாமைக் கொடுமைகளை உணர்ச்சியுடன் எடுத்துக் கூறி, மொழிப் பெருமைகளில் மூழ்கிக் கிடந்த கூட்டத்தினரை சமூக எதார்த்தத்தின் பக்கம் திருப்பினார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற மாநாட்டின் நோக்கத்தை அவரது உரை, சமரசத்திற்கு இடமின்றி வலியுறுத்தியது.
 
“தஞ்சை பெரிய கோயிலை கட்டிய உழைப்பாளிகளான மேஸ்திரிகளும், சித்தாளும்கூட அந்தக் கோயில் கருவறைக்குள் நுழைய அனுமதி இல்லை; கருவறையில் புனிதம் கெட்டுவிடும் என்று சொன்னால், இது என்ன நியாயம்? பணம் இருப்பவன் குளிக்கக்கூட வேண்டியதில்லை; எந்தத் தூய்மையையும் பின்பற்றாமலே, அவனுக்கு உடனே திருப்பதி தரிசனம் கிடைத்துவிடும். ஆனால் பக்திக்குரிய எல்லா ஒழுங்குகளையும் கடைபிடித்து ஒழுகும் அப்பாவி பக்தன், அவன் இல்லாதவன், ஏழை என்பதால் - இரண்டு நாள் கியூவில் காத்திருந்து சாமி கும்பிடுகிறான்; இதற்குப் பெயர் தர்ம தரிசனமாம். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான்; இந்த அநியாயங்கள் நடப்பதால், நான் கோயிலுக்குப் போவதில்லை” என்றார் சிவக்குமார்.
 
“நம்மை இறைவன்தான் படைக்கிறான். ஆனால், சாமி கும்பிடும்போது மனிதனுக்கு மனிதன் இந்த நாட்டில் சமத்துவம் நிலவுகிறதா? தனது 94 ஆவது வயதில் மூத்திரச் சட்டியை சுமந்துக் கொண்டு இந்த மக்களுக்காக உழைத்தாரே, ஒரு தலைவன், அந்தத் தலைவன் பிறந்த ஈரோட்டு மண்ணிலே இன்றைக்கும் என்ன நிலைமை? இன்னும் டீக்கடைகளிலே இரட்டை டம்ளர்; நம்முடைய மலத்தை நாம் கையால் தொடவே கூசுகிறோம்; மருத்துவப் பரிசோதனைக்கு நம்முடைய மலத்தை ஒரு பாட்டிலில் எடுக்கவே நமக்கு அருவருப்பு; ஆனால், மனிதர்கள் மலத்தை எடுப்பதற்காகவே இந்த நாட்டில் ஒரு சாதியை அனுமதித்துக் கொண்டிருக்கிறோமே, இது என்ன நியாயம்? அவர்கள்தான் கடவுளுக்கு சமமானவர்கள்.
 
இவை எல்லாம் ஒழிக்கப்படாத வரை, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறுவதில் என்ன அர்த்தமிருக்க முடியும்?” என்று நடிகர் சிவக்குமார் கேட்டார். அதேபோல் - இதே கருத்தரங்கில் பேசிய திராவிடர் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் அருள்மொழி, ‘போரைப் புறந்தள்ளி பொருளை பொதுவாக்கவே’ என்ற தலைப்பில் பேசும்போது, “எந்தப் போரைப் புறந்தள்ள முடியும்? ஈழத்தில் எமது தமிழினம் நடத்திய போரையா? இங்கே நடக்கும் சமூகநீதிப் போரையா? அமெரிக்க ஏகாதிபத்தியம் - ஏழை நாடுகள் மீது தொடுக்கும் போரையா? எந்தப் போரைப் புறந்தள்ள முடியும்? உதையப்பர்கள் இருக்கும் வரை ஓடப்பர்கள் எப்படி போரை நிறுத்துவார்கள்” என்ற கேள்வியை எழுப்பினார்.
 
திலிபனின் அறவழி உண்ணாவிரதப் போராட்டத்தையும், பெண் புலிகள் தற்கொலைப் படையாக மாறிய போராட்டத்தையும், அரங்கில் உணர்ச்சியுடன் பதிவு செய்தார்.
 
இதே அரங்கில் பேசிய பேச்சாளர்கள் பலரும், கலைஞர் புகழாரம் - ஆங்கில எதிர்ப்பு என்ற எல்லையோடு தங்களது உரையை பாதுகாப்பாக வரையறுத்துக் கொண்ட நிலையில், நடிகர் சிவக்குமார், வழக்கறிஞர் அருள்மொழி குரல்கள் மட்டும் தனித்துவமாக உண்மைகளை முழங்கியது பாராட்டுக்குரியதாகும்.

Pin It