6.6.2010 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சி எனும் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கிராமத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்பு சாதி கலவரம் ஏற்பட்டு, இதுவரை எந்த கட்சியின் கூட்டமும் நடைபெறவில்லை. சென்னையில் பணிபுரியும் தோழர் அமிர்தலிங்கம் சொந்த ஊரான இப்பகுதியில் பெரியார் திராவிடர் கழகத்தை துவக்கும் முயற்சியாக இப் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இவருடன் பணிபுரியும் உடுமலை தமிழ்ச்செல்வன், ஒருநாள் முன்னதாக வந்திருந்து நிகழ்ச்சிக்கான பணிகளை செய்தார். 

திருச்சி குமார் பாடல்களோடு துவங்கிய இப்பொதுக்கூட்டத்தில் சிற்பி இராசன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகளை செய்து காட்டி, மூடப் பழக்கங்களையும், சாமியார் மோசடிகளையும் விளக்கிப் பேசினார். கழகத் தலைவருக்கும், கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கும் கைக்குறிச்சி தோழர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர். காரல் மார்க்ஸ் வரவேற்புரையாற்றினார். அமிர்தலிங்கம், ரகுபதி, வழக்கறிஞர் நாகமுத்து, தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் செந்தாமரை, ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் பாபு ராசேந்திரன் ஆகியோரை அடுத்து மருத்துவர் ஜெயராமன் சிறப்புரை ஆற்றினார். 

அமிர்தலிங்கம், பழனிவேல் ஆகிய தோழர்கள் பெரியார் தி.க.வில் தங்களை கழகத் தலைவர் முன் இணைத்துக் கொண்டனர். கூட்டத்திற்கு உறுதுணையாக இருந்த தோழர்கள் காரல் மார்க்ஸ்,நெப்போலியன், கணபதி, சங்கர், ராசன், மணிமாறன், வீரசேகர சோலை, முத்து, மனோகரன், ரகு, சேகரன், பத்மநாபன் ஆகியோருக்கு கழகத் தலைவர் சால்வை அணிவித்து பாராட்டினார். 

தோழர் கொளத்தூர் மணி உரையில் குறிப்பிட்டதாவது: 

“ சமுதாய விடுதலைக்கு போராட்டங்களை தொடங்க வேண்டிய அடித்தளத்தில் இருந்து தொடங்கிய இரண்டு புரட்சியாளர்கள் அம்பேத்கர் மற்றும் பெரியார் அப்படிப்பட்ட தலைவர்களுக்குதான் நாம் பிறந்த நாள் எடுக்கிறோம். பிறப்பு இறப்பு இல்லை என்று சொல்லப்படுகிற கடவுளுக்கு பிறந்த நாள் விழா எடுப்பதில் எந்த பயனும் இல்லை. இந்த தலைவர்களுக்கு முன் எத்தனையோ தலைவர்கள் பிறப்பிற்கு முன்பும், இறப்பிற்கு பின்பும் அடைய கூடிய மோட்சம் நரகம் பற்றித் தான் பேசினர். பல தலைவர்களுக்கு சரியான எண்ணம் இருந்தும்கூட அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை சரியானதாக இல்லை. 

அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் சில கருத்து முரண்பாடுகள் இருந்த போதிலும், சமுதாய சிந்தனையில் நோக்கம் ஒன்றாகத் தான் இருந்தது. அம்பேத்கர், பெரியார் பற்றி நம் மக்களுக்கு முழுமையாக தெரியப்படுத்தாமல் விட்டுவிட்டனர். காந்தியை மகாத்மா என்று சொல்லாத மூன்றே தவைலர்கள்தான் இருந்தனர். அவர்கள்தான் பெரியார், அம்பேத்கர், ஜின்னா. காந்தியடிகள் வர்ணாசிரமத்தை ஆதரித்தவர். வெகுஜன மக்களுக்கு எதிராக இருந்தார். காந்தியும்,காங்கிரசும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்தது என்ன? என்ற நூலில், “காந்தியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். நடைமுறையில் இல்லாவிட்டால் தத்துவத்தால் அனைத்து மதங்களும் ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்று கூறுகிறது.

ஆனால், இந்துமதம் மட்டும் ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் இல்லை என்று எழுதி வைத்திருக்கிறது. பல சாதிகளாக பிரித்து வைப்பதோடு, ஒருவர் மேல் ஒருவர் என அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி கேள்வி கேட்டவர்கள் தான் இந்த இரண்டு தலைவர்களும். இரண்டு பேரும் இந்தியா வின் சுதந்திரத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தனர். இருவரும் மனுதர்மத்தை எதிர்த்தனர். இந்து என்று ஒப்புக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தனர். எனவே இப்படிப்பட்ட தலைவர்களுக்கு பிறந்தநாள் என்பது வழிபாடாக இருக்கக் கூடாது. அவர்கள் நமது வழிகாட்டிகள். எனவே இவர்களை முழுமையாக தெரிந்துகொண்டு,இவர்கள் வழியில் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு,மற்றவர்களுக்கும் கற்பித்து போராடி ஒன்றிணைவதுதான். நமது கடமையாக இருக்க வேண்டும் என்று பேசினார். தோழர் பழனி நன்றி கூறினார்.

Pin It