பெரியார் கருத்துகளை - யாரும் சிதைத்து விடக்கூடாது என்பதே வீரமணியின் கருத்து” - என்று கலைஞர் சென்னையில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் (10.8.2009) குறிப்பிட்டுள்ளார் (முரசொலி’ 11.8.2009).

பெரியாரின் கருத்துகள் காலவரிசைப்படி முழுமையாக தொகுப்பாக்கப் படும் போதுதான், அவரது கருத்து சிதைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதையே கண்டறிய முடியும். ஆனால், காலவரிசைப்படி தொகுப்பதையே கி.வீரமணி எதிர்க்கிறார். 

பெரியார் கருத்துக்கு தம்மைத் தாமே அத்தாரிட்டியாக நியமித்துக் கொண்டிருக்கிற வீரமணி, பெரியார் கருத்தை சிதைத்து திரித்து எழுதி பேசி வருவதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை முன் வைக்க முடியும். இதோ, உதாரணத்துக்கு சில: 

தனது இறுதி மூச்சு வரை தனித் தமிழ்நாடு லட்சியத்தை வலியுறுத்தியவர் பெரியார். ஆனால், பெரியார் பிரிவினை கோரவில்லை என்று, தமது கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் போட்டு, பெரியாரின் கருத்தை சிதைத்தது யார்? - வீரமணி. 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று இன இழிவுப் போருக்கு அழைப்பு விடுத்து, உச்சநீதிமன்றத்தையும், இந்திய அரசியலமைப்பையும் கடுமையாக சாடி - பெரியார் பேசினார். கோயில் பகிஷ்காரம் ஏன்?” எனும் தலைப்பில் 1972 இல் பெரியார் உயிருடன் இருந்த போது சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் அந்த உரையை நூலாக வெளியிட்டது. அதே நூல் - 1993 இல் மீண்டும் வெளியிடப் பட்டபோது, பெரியாரின் இந்தியஎதிர்ப்புக் கருத்துகளை நீக்கி பெரியார் கருத்துகளை சிதைத்து, நீர்த்துப் போகச் செய்தது யார்? - வீரமணி. 

வடவர் எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, கடவுள் மறுப்பு - ஆகியவை பெரியாருடைய கொள்கைகளே அல்ல. அவை ஒவ்வொரு கட்டத்தில் பெரியார் பின்பற்றிய வழிமுறைகள்தான் என்று தினமணிஏட்டுக்கு 1994 இல் பேட்டி அளித்து, பெரியார் கொள்கையை திரித்தது யார்? - வீரமணி.  

• 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பெரியார் ஆதரிக்காத நிலையில், பெரியார் மறைவுக்குப் பிறகு அந்தப் போராட்டத்தை அங்கீகரித்து, சசிகலா நடராசனை மகிழ்விக்க (அப்போது ஜெயலலிதா புகழாரம் பாடிய காலம்) அவருக்கு விருது வழங்கும் மாநாடு நடத்தி - பெரியார் கருத்தை திரித்தது யார்?- வீரமணி. 

• ‘விடுதலைநாளேட்டில் முகப்பில் வெளிவந்து கொண்டிருந்த தமிழ்நாடு தமிழருக்கேஎன்ற முழக்கம், 1976 இல் அவசர நிலை காலத்தில் - பெரியார் மறைவுக்குப் பிறகுதான் அகற்றப்பட்டது என்ற உண்மையை திரித்து, பெரியார் காலத்திலேயே அது நீக்கப்பட்டதாக பெரியார் மீதே பழிபோட்டு திரித்தது யார்? - வீரமணி.  

பா.ஜ.க. மதவெறி சக்திகளை மகிழ்விக்க ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவந்தபோது, அதை எதிர்த்துப் போராடாமல், பதுங்கிக் கொண்டு, அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக விடுதலையில் கட்டுரைகளை வெளியிட்டு, சட்டத்தை ஆதரித்து, பெரியார் கொள்கைகளை திரித்தது யார்? - வீரமணி. 

முதுகளத்தூரில் 1957 இல் தலித் மக்களுக்கு எதிரான சாதிக் கலவரத்துக்கு வித்திட்ட முத்துராமலிங்க தேவரை கடுமையாக எதிர்த்தவர் பெரியார். பெரியார் பார்வைக்கு மாறாக அந்த சாதித் தலைவரின் படத்தை தி.க. மாநாடுகளில் திறந்து, பெரியார் பார்வையை சிதைத்தது யார்? - வீரமணி. 

• 1925 ‘குடிஅரசுவார இதழில் மோட்சம்எனும் மோசடியை விளக்குவதற்காக புரோகிதருடன் நடந்த ஒரு உரையாடலை கதையாக எழுதினார், பெரியார். வெகு தூரத்திலுள்ள ஒரு தோட்டத்துக்கு கை யால் ஆற்று நீரை வாரி இறைத்துக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து வெகுதூரம் உள்ள ஆற்றுக்கு இந்தத் தண்ணீர் எப்படிப் போகும் என்று கேட்கிறார், புரோகிதர். அதற்கு அந்தப் பெரியவர், மேல் உலகத்தி லுள்ள பிதுர்களுக்கு நீங்கள் மந்திரம் ஓதி அனுப்பும் பொருள்கள் எப்படி போய்ச் சேரும் என்று திருப்பி கேட்கிறார். பெரியார் சுட்டிக் காட்டிய கதையை பெரியாரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியாகவே மாற்றி பெரியார்படத்தில் காட்சி வைத்து, பெரியார் வரலாற்றில் தவறான தகவல்களைப் புகுத்தியது யார்? - வீரமணி. 

திருவாரூர் விடயபுரத்தில் பெரியார் உருவாக்கிய கடவுள் மறுப்புதத்துவத்தை, கடலூரில் தம் மீது செருப்பு வீசப்பட்டபோது உருவாக்கியது போல், தாம் தயாரித்த பெரியார்திரைப்படத்தில் வரலாற்றைத் திரித்தது யார்? - வீரமணி. 

• ‘பகுத்தறிவும் - நாஸ்திகமும்என்று சில மாதங்களுக்கு முன்பு சுயமரியாதை பிரச்சார நிறுவனம் பெரியார் குடிஅரசுஏட்டில் எழுதிய சில கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டிருந்தது. அதில் - குடிஅரசில்பெரியாரே தந்திருந்த தலைப்புகளை எல்லாம் மாற்றி திருத்தியது யார்? - வீரமணி. 

இயக்கத் தோழர்கள், இனி தோழர்என்றே அழைக்கப்பட வேண்டும் என்று 1932-லேயே பெரியார் எழுதினார். ஆனால், நாம் அப்படி எல்லாம் அழைக்க வேண்டாம். கம்யூனிஸ்டுகளைப் பார்த்து காப்பி அடிப்பது நமது வேலை அல்ல என எழுதி பெரியார் கருத்தையே திரித்துக் கூறியது யார்? - வீரமணி. 

ஒற்றுமையும், கட்டுப்பாடும் கொள்கைகளுக்காகத்தான். காந்தி கொள்கையை பலி கொடுத்து ஒற்றுமை கட்டுப்பாடுகளைப் பேசியதால் காந்தி மடாதிபதி போல் ஆகிவிட்டார் என்று பெரியார் கூறியிருக்கும் போது - கொள்கையைத் தட்டிக் கேட்டவர்களையெல்லாம் கட்டுப்பாடு மீறிய துரோகிகள் என்று பட்டம் சுமத்தி, கொள்கையை விட கட்டுப்பாடே முக்கியம் என்று கூறி பெரியார் கொள்கைப் பார்வையை திரிப்பது யார்? - வீரமணி. 

• 1925 இல் காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார், தீண்டாதோர் என்ற மூன்று பிரிவினருக்கும் அரசியல் தொடர்பான அனைத்து பதவிகளிலும் மக்கள் தொகைக் கேற்ப பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற வகுப்புவாரி கோரிக்கையை முன்வைத்த நிலையில், காஞ்சிபுரம் மாநாட்டில் பெரியார் 50 சதவீத இடஒதுக்கீடு கேட்டார் என்று விடுதலையில் திரித்து எழுதியது யார்? - வீரமணி. 

சமுதாயப் புரட்சிக்காக அரசியலமைப்பையே கேள்விக்குள்ளாக்கிய பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகத்தைபெரியார் பதிவு கூட செய்ய விரும்பாதபோது, பெரியாரின் திராவிடர் கழகத்தையே இந்திய டிரஸ்ட் சட்டப்படியும், வருமான வரிச் சட்டத்தின் கீழும் அறக் கட்டளையாகப் பதிவு செய்து, “திராவிடர் கழகத்தையே ஒரு பொது அறக்கட்டளையாக மத்திய அரசு அங்கீகரித்துவிட்டதுஎன்று மகிழ்ச்சியோடு அறிவிப்பு தந்து, பெரியார் இயக்கம் தொடங்கிய நோக்கத்தையே சிதைத்தது யார்? - வீரமணி. 

இனி கல்வி நிறுவனங்களை நடத்துவதில்லை என முடிவெடுத்து, திருச்சியில் கல்லூரி தொடங்குவதற்கு தனது சொந்த நிலத்தையும் ரூ.5 லட்சம் நன்கொடையும் அன்றைய தமிழக முதல்வர் பக்தவச்சலத் திடமே தந்து, அரசே கல்லூரியை நடத்தட்டும் என்றார் பெரியார். பெரியார் கருத்துக்கு மாறாக, அறக்கட்டளை சார்பாக சுயநிதிக் கல்லூரிகளை நடத்தி, அதற்கே முன்னுரிமை தருவது யார்? - வீரமணி. 

இலவசக் கல்வி வழங்கிய காமராசரை கல்வி வள்ளல் என்று அழைத்து, பாராட்டி ஆதரித்தார் பெரியார். கல்வியை இலவசமாக்கி, அனைத்து மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்ற பெரியார் கொள்கைக்கு எதிராக, சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்கிக் கொண்டு, கல்லூரிகள் நடத்தும் கல்விக் கொள்ளைகளைப் பற்றி கண்டனம் கூடத் தெரிவிக்கா மல், பெரியார் கருத்துக்கு எதிர்திசையில் நடைபோடுவது யார்? - வீரமணி.  

• ‘லேவாதேவிஎதிர்ப்பு மாநாடு நடத்தியது பெரியார் இயக்கம், அக்கொள்கையை குழிதோண்டி புதைத்து, வட்டிக்கடைகளை, நிதிநிறுவனங்களை நடத்துவது யார்? - வீரமணி. 

• ‘எனக்கென்று வாரிசு எவருமில்லை; எனது கருத்துகளும் சிந்தனை களும் தான்என்று மறைவதற்கு சில வாரங்கள் முன்புகூட பேட்டி அளித்தார் பெரியார். இப்போது மகனை வாரிசாக்கும் முயற்சிகளில் இறங்கி, பெரியார் நூல்களையும் நாட்டுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து, பெரியாரியத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருப்பது யார்? - வீரமணி. 

இப்படி எத்தனையோ ஆதாரங்களை பட்டியல் போட முடியும். 

பெரியாரை சிதைப்பவர்களே - திரிப்பவர்களே, தங்களது வசதிக் கேற்பசுருக்குகிறவர்களே பெரியாரியத்தின் முழுமையான காப்பாளர்களாக பாசாங்கு காட்டுகிறார்கள்.  

பெண் வீட்டை விட்டு வெளியே போனாலே பெண்களின் புனிதம்கெட்டுவிடும் என்று வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்த பழமையாளர் களுக்கும் பெரியார் சிந்தனைகள் தங்கள் அறக்கட்டளைஎனும் படியைத்தாண்டி விட்டால், “கற்புகெட்டுப் போய்விடும் என்று நியாயம்பேசுகிறவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

ஒளிவு மறைவு இல்லாத திறந்த புத்தகமான பெரியாரின் பக்கங்களை வெட்டி, ஒட்டி, சிதைத்து கொண்டிருப்பதே இவர்கள் தானே?

பெரியார் குடிஅரசையும், ‘விடுதலையும் முழுமையாகப் பாதுகாக்கா மல், பல ஆண்டுகாலத்துக்கான இதழ்களைத் தொலைத்துவிட்டு, அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத வீரமணியின் நிறுவனம் - தோழர்களிடம் இருந்தால் அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் அவலத்தில் பெரியாரை நிறுத்தி வைத்திருக்கிறது. 

இவர்கள் தான் மரபுரிமையாளர்களா? இவர்கள்தான் பெரியாரின் உண்மையான வாரிசுகளா? இவர்கள்தான் பெரியாரை சிதைக்காமல் காப்பாற்றுகிறவர்களா?

பெரியார் தொண்டால் தலை நிமிர்ந்தோம் என்ற நன்றி உணர்வு கொண்ட தமிழர்களின் சிந்தனைக்கு இந்த கேள்விகளை சமர்ப்பிக்கிறோம்! 

Pin It