என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காகப் பொது நன்மைக்காகப் பயன்படுத்துகிறேனே தவிர, எந்தச் சிறு அளவுக்கும் எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு சிறு கடுகளவாவது சொந்த நன்மைக்காகவோ, பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். 

ஒருவர் தம் மறைவுக் காலத்தில் எந்த நிலையில் இருக்கிறாரோ அதைப் பொறுத்துத்தான் அவருடைய மறைவுக்குத் துக்கப்படுபவர்களும் சந்தோசப்படு பவர்களும் அமைவார்கள். உதாரணமாக நான், காங்கிரசு இராமசாமியாக ஒரு காலத்திலும், சுய மரியாதை இராமசாமியாக ஒரு காலத்திலும், திராவிடர் கழக இராமசாமியாகத் தற்காலத்திலும் இருந்து வருகிறேன். காங்கிரசு இராமசாமியாக இருந்த காலத்தில் இறந்திருந்தால் சுதேசமித்திரன் ஆசிரியர், இந்து ஆசிரியர் உள்பட பல காங்கிரசுக்காரர்களும், அய்யர், அய்யங்கார்களும் துக்கம் கொண் டாடியிருப்பார்கள். சுயமரியாதை இராமசாமியாக இருந்த காலத்தில் இறந் திருந்தால் ஒரு சுயமரியாதைக்காரப் பார்ப்பனர் தவிர்த்த மற்ற பார்ப்பனர்கள், வைதீகர்கள் எல்லாரும் சந்தோசப்பட்டபடி இருப்பார்கள். ஆனால், இன்று மறைய நேர்ந்தாலோ திராவிடர்கள் அனைவரும் துக்கம் கொண்டாடலாம் என்று கருதுகிறேன்.  

- பெரியார் சிந்தனைகள், தொகுதி -2 பக்கம் 796

எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது; என்னுடைய கொள்கை களும் கருத்துக்களும்தான் வாரிசு; வாரிசு என்பது தானாகவே ஏற்பட வேண்டும்.  

- பெரியார் சிந்தனைகள், தொகுதி -2 பக்கம் 1230

Pin It