balambihai murugadossநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தலைவராகத் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் தேர்வு

ஜனநாயகச் செயல்முறையினை வலிமைப்படுத்தும் ஒர் செயற்பாடக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அரசவைத் தலைவராக பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் தேர்வு செய்துள்ளது.

கடந்த (ஜூன்) 19ம் தேதி சனிக்கிழமை இடம்பெற்றிருந்த சிறப்பு அரசவை அமர்வின் போது, பெரும்பான்மை வாக்குகளால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாகத் துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்த இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஒரு செயற்பாட்டளராக இணைத்துக் கொண்டவர்.

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்துள்ளதோடு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதற்தவணைக் காலத் தேர்தலின் போது, பிரித்தானியாவில் முதன்மை விருப்பு வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளால் வெற்றியீட்டி இருந்ததோடு, தொடர்ச்சியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்றி வருபவர்.

பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர், தாயக அபிவிருத்தி அமைச்சர், துணைப் பிரதமர் என பல பொறுப்புகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் வகித்திருந்தவர்.

உண்மைக்கு முன்னால் நடுநிலை என்பது இல்லை என்ற கப்டன் கஜனின் கூற்றுக்கு அமைய, நீதி, உண்மை, நியாயத்தின் பக்கம் நின்று இந்த அரசவை வழிநடத்துவேன் என அரசவைத் தேர்வுக்கு பின்னராக தனது ஏற்புரையில் தெரிவித்திருந்த திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பெரும் இனஅழிப்பின் ஊடாக சிங்கள அரச பயங்கரவாத்தினால் அழிக்கப்பட்ட நடைமுறைத் தமிழீழ அரசின் தொடர்ச்சியாக உருவான நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, ஈழத்தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்ட வடிவமாக இருக்கின்றது.

உலகெங்கும் விடுதலைக்காகப் போராடி வரும் இனங்களுக்கு ஓர் முன்னுதாரணமாகவும், புதியதொரு அரசியல் பரிமாணத்தை உலகஅரசியல் வெளியில் ஏற்படுத்தியுள்ளதொரு புதிய வடிவம்.

நாங்கள் அரசுக்குரிய இனமாக இருந்தாலும், இன்று அரசற்ற ஓர் இனமாக நாங்கள் ஓர் அரசுக்குரிய இனம் என்பதனை உலகிற்குப் பறைசாற்றும் அரசாங்கம் இது.

இதில் கட்சி அரசியலோ, அணி அரசியலோ இல்லை. மாறாக விடுதலை அரசியலைத் தாங்கிய ஜனநாயக இயக்கம்.

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமையாக இன்று இருக்கின்ற வி. உருத்திரகுமாரன் அவர்களைப் பிரதமராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொண்டிருப்பதில் பெருமை மட்டுமல்ல, வலிமையும் கொள்கின்றது.

நீதிக்கும், அரசியல் இறைமைக்குமாக வழிநடத்தும் அவரது போராட்டத்தினை நாம் அனைவரும் பலப்படுத்தி, அதனை மென்மேலும் வலுப்படுத்துவதே இன்றைய கடமையாகவுள்ளது.

அதனை நோக்கி இந்த அவையினை அனைத்து உறுப்பினர்களது ஒத்துழைப்போடும் வழிநடத்துவேன் என உறுதி கொள்கின்றேன்.

அவைத் தலைவருக்கான இன்றைய வாக்கெடுப்பு என்பது நாம் எமது ஜனநாயக செயல்முறையினை வலிமைப்படுத்தும் ஒரு செயற்பாடாகும்.

பதவிக்கான போட்டியல்ல. மாறாக செயற்பாட்டை முன்னின்று முன்னெடுப்பதற்கான முன்கையெடுப்பு இது.

உண்மைக்கு முன்னால் நடுநிலை என்பது இல்லை என்ற கப்டன் கஜனின் கூற்றுக்கு அமைய, நீதி, உண்மை, நியாயத்தின் பக்கம் நின்று இந்த அரசவை வழிநடத்துவேன் என தெரிவித்திருந்தார்.

அவைத்தலைவருக்கான சிறப்பு அரசவை அமர்வினை பேராசிரியர் சந்திரகாந்தன், மேற்சபை உறுப்பினர் இராஜரத்தினம் அவர்கள் ஆகியோர் நடத்தியிருந்தனர்.

- தியாகு

Pin It