19-ஆம் நூற்றாண்டில் உருவான அச்சுப் புரட்சியின் விளைவாக இந்திய அறிவுச் சூழலில் குறிப்பாகத் தமிழ் அறிவுச் சூழலில் ஆகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. காலனியப் பின்புலத்தில் மதம் பரப்புவதற்காகவும் ஆளுகை வேட்கைக்காகவும் பிரித்தானியர்கள் உருவாக்கிய தொழில்நுட்ப வசதிகள் அவர்களுக்குப் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக மாறியது. குறிப்பாக அச்சு ஊடகங்கள் மிகப் பெரும் வீச்சை அறிவுப் பரவலை ஏற்படுத்தின. கால்டுவெல், ஈராஸ், டபுள்யூ.எப். எல்லீஸ், தனிநாயகம் அடிகள் போன்ற ஆளுமைகள் 19-ஆம் நூற்றாண்டில் செய்த பணிகளைத் தொடர்ந்து வையாபுரிப் பிள்ளை, மயிலை சீனி வேங்கடசாமி, மா.இராசமாணிக்கனார் போன்ற பெருமக்கள் 20-ஆம் நூற்றாண்டில் அப்பணிகளைத் தொடர்ந்தனர். இதனால் பல அரிய வகைத் தமிழ்ச் செல்வங்கள் நமக்குக் கிடைத்தன. இந்த வரிசையில் வைத்துப் போற்றத்தக்க பெருமகன்தான் கலைக்களஞ்சியத் தமிழர் ம.ப. பெரியசாமித்தூரன் ஆவார்.
யார் அவர்?
1921இல் பாரதியார் மறைவுக்குப் பின் தேசீயத்தில் பேரெழுச்சி அலை வீசிய காலத்தில் இளந்தலைமுறையினர் பலர் அதன் வீச்சில் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் பெ.தூரன். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சார்ந்த மஞ்சக் காட்டு வலசு என்ற சிற்றூரில் 1908 -ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் நாளில் பிறந்தார். இவரது பெற்றோர் பழனி வேலப்பர் - பாவாத்தாள் ஆவர்.
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பெரியசாமி. மாநிலக் கல்லூரியில் மாணவராக இருந்தபோது ஆங்கிலேயருக்குத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக தன் குலக்குறிப் பெயரான 'தூரன்' என்னும் பெயரைப் புனைப் பெயராக்கிக் கொண்டார். தொலைநோக்குப் பார்வைட்டைய அவருக்குத் 'தூரன்' என்னும் பெயர் பொருத்தம் தானே! 1926 முதல் 1931 வரை மாநிலக் கல்லூரியில் பயின்ற காலம் தூரன், ஒரு தேசபக்தராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் இலக்கியப் படைப்பாளியாகவும் உருவான காலம் ஆகும்.
பாரதரத்னா சி சுப்பிரமணியம், கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு, நீதிபதிகளான அழகிரிசாமி, கைலாசம், அரசியல்வாதிகளான ஓ.வி.அளகேசன், தோழர்கள் ல.கி. முத்துசாமி, கே.என். பெரியசாமி ஆகியோர் திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் இல்லத்தில் இவரோடு உடன் பயின்றவர்கள். இவர்கள் அனைவரும் காந்தியடிகளின் தலைமையில் விடுதலைப் போராட்டத்தில் தீவிரம் கொண்டிருந்தவர்கள். அசேமயத்தில் பகத்சிங், சுகதேவ் ஆகியோர் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர், அதனால் இவர் உள்ளம் வெதும்பி இறுதியாண்டுத் தேர்வை எழுதாமல் புறக்கணித்தார்
1929-இல் தூரனும் அவரது நண்பர்களும் சேர்ந்து 'வனமலர்ச் சங்கம்' என்னும் நண்பர்கள் வட்டத்தை உருவாக்கினர். இசேங்கத்தின் சார்பில் 'பித்தன்' என்னும் இதழ் வெளியிடப்பெற்றது. இவ்விதழ் திரு.வி.க-வின் சாது அச்சுக் கூடத்திலிருந்து வெளியானது. இதழின் ஆசிரியர் பொறுப்பைத் தூரன் ஏற்றுக் கொண்டார்.பட்ட வகுப்பை முடிக்காத இவருக்கு இசேமயத்தில் கோபிசெட்டிப்பாளையம் வைரவிழாப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. இக்கால கட்டத்தில் 1930-இல் காளியம்மாள் என்பவருடன் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. பின் 1933-இல் சி. சுப்பிரமணியம் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுத் தி.சு அவினாசிலிங்கம் அவர்கள் தொடங்கிய இராமகிருஷ்ணா வித்யாலயத்தில் ஆசிரியப்பணியில் சேர்ந்தார்.
1946-இல் தி.சு.அவினாசிலிங்கம் கல்வியமைசேராக இருந்தபோது அவர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தை ஏற்படுத்தினார். அதன் மூலம் வெளியிட முடிவுசெய்யப்பட்ட கலைக் களஞ்சியப் பணிக்கு பெரியசாமித் தூரன் பொறுப்பேற்றார்.
10 தொகுதிகளாகக் கலைக் களஞ்சியம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1975-இல் தூரன் குழந்தைகள் கலைக் களஞ்சியப் பணியில் ஈடுபட்டு, அதனையும் வெளியிட்டார். கலைக் களஞ்சியப் பணி தூரன் அவர்களின் பெயர் தமிழ்மொழி உள்ளவரை நிலை பெற்றிருக்கும் அரும்பணியாகும்.
இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சாகித்திய அகாடெமி, திரைப்படத் தணிக்கைக் குழு, அனைத்திந்திய எழுத்தாளர் மன்றம் எனப் பல அமைப்புகளிலும் உறுப்பினராக இருந்து ஆலோசனைகள் வழங்கி வந்தார். அவரது பணிகளுக்கு அரசும் நிறுவனங்களும் ஏராளமான விருதுகளை வழங்கிச் சிறப்பித்தன.
1968-இல் கலைக் களஞ்சியப் பணி நிறைவுற்ற நிலையில் இந்திய அரசு அவருக்குப் பத்மபூஷன் விருது வழங்கிச் சிறப்பித்தது. தமிழக அரசு கலைமாமணி விருதும், தமிழிசைச் சங்கம் இசைப்பேரறிஞர் விருதும் வழங்கிச் சிறப்பித்தன. உடல்நலிவைப் பொருட்படுத்தாமல் தனது இறுதிக் காலங்களில் கூடப் பாரதியார் குறித்த பத்து நூல்களை உருவாக்கித் தந்தார், தூரன்.
படைப்புத்தன்மை:
தூரனின் எழுத்தோவியங்களில் முதன்மை இடம் பெறுவது கவிதையாகும். இலக்கியத்திலே கவிதை முதல் இடம் பெறுவது,
சொற்செறிவிலா? சந்த இனிமையிலா? யாப்பு வடிவத்திலா? அணி அலங்காரத்திலா? கற்பனைத் திறத்திலா? கவிஞனுடைய உள்ள ஒளியிலா? இவை எல்லாம் சேர்த்த பாகுக்கலப்பிலா? என அறுதியிட்டுக் கூற இயலாத ஒரு மாய விசை கவிதைக்கு உண்டு. அவரது எழுத்து, கவிதை பற்றிய அவருடைய ஆழ்ந்த நம்பிக்கையைப் புலப்படுத்தும்.
“வில்லினும் சிறைக் கட்டினை - நீங்கி
வேகம் கொண்டு பாய் அம்பு போல்
சொல்லையும் கடந்தேகும் ஓர்-உள்ளத்
துடிப்பிலே கவி சொல்லுவேன்"
என்று சொல்லையும் கடந்து நிற்கும் உணர்வினைக் கவிதை ஆக்கியவர் தூரன்.
தூரனின் புகழ் பெற்ற மற்றொரு சிறந்த இலக்கிய வகை சிறுகதை "உள்ளத்தில் எத்தனையோ கிளர்ச்சிகள் குமுறுகின்றன அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு அதிலே குறிப்பிட்ட மின்னல் போன்ற பகுதியை விளக்கினால் அதுவும் சிறுகதைதான்." என்று சிறுகதைக்கு இலக்கணம் காண்கிறார் அவர்.
சின்னச் சின்ன சிந்தனை அழகும் கலை நேர்த்தியும் கொண்ட கட்டுரை இலக்கியத்தையும் படைத்தவர், தூரன். ஆங்கில இலக்கியக் கட்டுரை பாணியில் அமைந்தவை அவரது கட்டுரைகளாகும்.
நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தவர், தூரன் ப்புதிய தமிழ் இலக்கியத்தில் வலிமை குறைவோடு இருக்கும் நாடகத்துறைக்கு அவர் ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது" என்கிறார், கவிஞர் சிற்பி.
எழுத்தாளர்கள் எல்லோரும் குழந்தைகளுக்காக எழுதியவர்கள் என்று சொல்வதற்கில்லை, ஆனால் வளரும் தலைமுறைக்கு வளம் சேர்ப்பது தம் கடமையே என்று தம் படைப்புகளை வெளிப்படுத்தியவர்கள் பாரதி, தாகூர் போன்றோர் ஆவர். அவ்வரிசையில் பெரியசாமித் தூரனும் இணைந்துள்ளார் என்பதைப் பெருமைடேன் குறிப்பிடலாம் சிறுவர் இலக்கியங்களுக்கான நாவல், சிறுகதை, கவிதை, எனப் பல்வகைப் படைப்புகளைக் கண்டுள்ளார் அவர்.
பாரதி பற்றிய ஆய்வு தூரனின் படைப்பாற்றலுக்குச் சிகரம் போன்றது. 'பாரதி தமிழ்' நூல், பாரதி ஆய்வில் ஒரு மணிமகுடம் எனலாம்.
இசைக் கலையில் ஈடுபாடு கொண்ட தூரன் மனதை உருக்கும் கீர்த்தனைகள் பலவற்றை இனம் கண்டுள்ளார்.
இன்னும் இவரது அரும்பணி அறிவியல் துறை, மொழிபெயர்ப்புகள், நாட்டுப்புறவியல், பதிப்புத் துறை என்று பல கிளைகளாய்ப் பரந்து விரிகிறது. எல்லாவற்றிலும் மிஞ்சிய ஒளிவிட்டுப் பளிச்சிடுவது மலையளவு உயர்ந்து நிற்கும் கலைக்களஞ்சியப் பெருவிளக்கே! இது அவரது தலைமைக்கு வளம் சேர்ப்பது.
இனி அவர் பணியாற்றிய துறைகளில் கட்டுரைச்செல்வம், சிறுவர் இலக்கியம், அறிவியல் எனும் மூன்றைப் பற்றி மேலும் சிறிது உற்று நோக்கலாம்.
எளிமை, அழகு என்னும் அணிகள் பூண்டு இவரது நான்கு கட்டுரைத் தொகுப்புகள் வந்துள்ளன. பூவின் சிரிப்பு (1951), காட்டு வழிதனிலே (1952), தேன்சிட்டு (1963), காற்றில் வந்த கவிதை (1958) எனும் தலைப்பில் ஆனவை அவை.
ஆங்கிலக் கட்டுரை ஆசிரியர் ஏ.ஜி கார்டினர் அற்பம் எனக் கருதக்கூடிய பொருட்களைக் கொண்டு கட்டுரைகள் கண்டவர். அவரை மனதில் நிறுத்தித் தன் கட்டுரைகளை அற்பப் பொருள்களையும் கடவுளாகக் கொண்டு படைக்கிறார். இவரது கட்டுரைகளில் இயற்கை கற்றுக் கொடுக்கும் பாடங்கள் முதன்மை பெறுகின்றன. "ஆட்டுக்குட்டிக்கு என்ன சாமி தெரியும்? பாவம்! நானும் 50 வருஷமாக ஆடு மேய்க்கிறேன். 20 தலைமுறைக்கு மேலே ஆடுகளைப் பார்த்தாச்சு. ஒரு நரிக் குட்டியை எதிர்த்து நிற்க இதுகளுக்கு முடியவில்லை" என்று ஆடு மேய்ப்பவன் சொல்வதாக அவர் எழுதுவதை ஓர் எடுத்துக்காட்டாக்கலாம்.
தூரனின் கட்டுரைகளில் அண்ணல் காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் சிறப்பிடம் பெறுகின்றன அன்பே வழி, காந்தி அடிப்படை, அரசுகளின் தோற்றம் என்பன சில கட்டுரைகளின் தலைப்புகள்.
காற்றில் மிதந்த கவிதை என்னும் தொகுப்பு வாய்மொழி இலக்கியத்தைப் பொருண்மையாகக் கொண்டது இலக்கியச் சுவையின் இன்பத்தைச் சேரி விளையாட்டு, காற்றாடி, நந்தா ஒலி, தைப்பொங்கல், தேன் சிட்டு, குழலோசை, மௌனம் பேசும் பேச்சு ஆகிய கட்டுரைகளில் பெற்றுச் சுவைக்கலாம்.
அடுத்து குழந்தை இலக்கியம் பற்றி எழுதத் தொடங்கினால் அங்கே குழந்தையாகி விடுவதை உணர முடிகிறது. பச்சைக் குழந்தை என்றால் மனதில் பாசம் பிறக்குதம்மா! என்று பாடி மகிழ்கிறார் தூரன் க்குழந்தைகளுக்குக் கொஞ்சிக் கொஞ்சி துள்ளித்துள்ளி ஆடுவதற்கும் பாடுவதற்கும் அழகான பாட்டு வேண்டும். கதை என்றால் அவைகளுக்கு உயிர், மேலும் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டு தம் அறிவை வளர்த்துக் கொள்கின்றன இப்படி அவைகளுக்கு அறிவுப்பசி அடங்காப் பசியாக இருக்கிறது." என்று குழந்தைமை உளவியல் பேசுகிறார் கவிஞர்.
குழந்தைக் கதைகளாக அவர் எழுதிய நூல்கள் ஓலைக்கிளி, தம்பியின் திறம், நாட்டிய ராணி, மஞ்சள் முட்டை, நிலாப் பாட்டி என்பன, உயிர்களிடத்தில் அன்பு வேணும், ஊனம் ஒரு குறை அல்ல, தீண்டாமை எதிர்த்துப் போராடு, திருட்டுப் புத்தி இழிவு போன்ற நற்செய்திகள் சொல்லப்படுகின்றன. அறிவியல் முயற்சியும் அவர்களுக்கு வேண்டும் என்பதை அவர் உணர்த்த தவறவில்லை.
“மலை மேலே மஞ்சு
மல்லிகைப்பூம் பிஞ்சு
மாலை வெயில் கொஞ்சம்
வந்து விளையாடும்”
என்று குழந்தைகள் விரும்பும் ஓசை அழகும்,
சின்னச் சின்னத் துளிகள் சேர்ந்தால்
பெரிய பெரிய ஆறே ஆகும்
சின்னச் சின்னச் செங்கல் சேர்ந்தால்
பெரிய பெரிய வீடே ஆகும்.
என்னும் அறிவுரையும்,
ஜாதி பேதச் சிறுமைகள்
சமயவாதப் பிரிவுகள்
எதுவும் இந்த நாட்டிலே
இல்லை என்று போக்குவோம்."
என்னும் சமூகப் பார்வையும் அவர் குழந்தைகளிடம் விதைக்கும் விதைகள் ஆகின்றன.
அவருடைய அறிவியல் நூல்களை மரபியல் நூல்கள், உளவியல் நூல்கள் என்று இரண்டு பிரிவுகளாக வகுக்க முடியும்.
கருவில் வளரும் குழந்தை என்பது மரபியல் சார்ந்த அறிவியல் நூலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. தனது உளவியல் சார்ந்த நூல்களில் சிக்மண்டு பிராய்டை உள்வாங்கி உளவியல் செய்திகளைக் கூறுகிறார். மொழிபெயர்ப்பு நூல்கள் பதிப்பித்தல் என்று இவரது பணி விரிந்து கொண்டே செல்கிறது.
பாரதி இயல்:
பாரதி கவிதை பற்றித் தூரன் எழுதிய வரிகளைப் பின்வருமாறு கூறலாம்
"ஒரே சங்க நாதம்
வேதங்களின் மூச்சு
அவன் பாடலில் வீசிற்று
அமுதத்தின் தெளிவு கலந்திருந்தது
நிலவின் தீஞ்சாறு மிதந்தது வீரக்கனல் வழிந்தது
புதிய உயிர் பெற்றுக் கவிதை பொங்கிற்று»
இது பாரதியைப் பற்றிய பழைய பிரதிகள் பலவற்றையும்
தேடித்தேடி எடுத்து நம் மகாகவியின் கவிதைகளையும் கட்டுரைகளையும் தன் நெஞ்சில் நிறுத்தினார், தூரன். அதனால் பாரதி பற்றி விரிவாக எழுத ஆழ்ந்த எண்ணம் கொண்டார்.
அவருடைய பாரதி தமிழ் நூல் 134 தலைப்புகள் கொண்டது அவற்றுள் பாதிக்கும் மேற்பட்டவை முதல் முறையாகக் கண்டெடுக்கப்பட்டு அச்சேறியவை.
தூரனின் பாரதி தமிழ் ஆய்வாளர்களுக்கு இன்று ஓர் அமுத சுரபியாகத் திகழ்கிறது பாரதியின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாரதி தமிழ் தனிச்சிறப்புகள் பத்திரிகைப் பணி ஆகியன விரிவான தகவல்களைக் கொண்டவை. ஒவ்வொரு கட்டுரை அல்லது கவிதைக்கும் தூரன் சிறு குறிப்பும் வரைந்து உள்ளார் பாரதியின் சிந்தனை மலர்கள் எதுவும் உதிர்ந்து விடாமல் சேர்த்துக் கட்டி ஆய்வாளர்களுக்குத் தந்துள்ளார், தூரன்.
ரா.ஆ.பத்மநாபன், சீனி விஸ்வநாதன், தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோர் வரிசையில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார் தூரன்.
"ஒரு சிறந்த கலைஞருடைய பெருமையை மற்றொரு சிறந்த கலைஞனைப் போல் வேறு ஒருவர் அறிந்து கொள்ள இயலாது" என்று தம் பதிப்புரையில் கூறும் தூரன் தாகூரோடு பாரதியார் கொண்டிருந்த ஈடுபாட்டை மிக அழகாக எடுத்துக்காட்டுகிறார். வாழ்நாள் எல்லாம் பாரதியோடு இரண்டறக் கலந்து போன தூரன் உடல் நலிவுற்றுப் படுக்கையில் இருந்த காலத்தில் அவருடைய நெருங்கிய நண்பராக விளங்கிய நா. மகாலிங்கம் பாரதி வரிசையில் நூல்கள் எழுதுவதற்குப் பேருதவி புரிந்தார், அவரது உதவியால் பத்து நூல்கள் வெளியிட்டார்.
பாரதியும் பாட்டும், பாரதியும் பாப்பாவும், பாரதியும் பாரத தேசமும், பாரதியும் பெண்மையும், பாரதியும் தமிழகமும், பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும், பாரதியும் உலகமும், பாரதியும் கடவுளும், பாரதியும் சமூகமும், பாரதி நூல்கள்-ஒரு திறனாய்வு என்பன பத்து நூல்களின் தலைப்புகள் ஆகும்.
இவை அத்தனையும் பாரதி பற்றிய ஆய்வுக்கு மூல நூல்களாகத் திகழும் பெருமை பெற்றவை.
கலைக்களஞ்சியப் பணி:
இப்பணி பற்றி முன்பே குறிப்பிட்டு இருந்தாலும் இங்கு சற்று விரிவாகக் காணலாம்.
கலைக்களஞ்சியப் பணிக்கு முதன்மை ஆசிரியரைக் கண்டுபிடிக்கும் வரை அப்பொறுப்பில் இருக்குமாறு தூரன் கேட்டுக் கொள்ளப்பட்டார். பெ. திரிகூட சுந்தரம் பிள்ளை, தொ.மு.பாஸ்கார தொண்டைமான் ஆகியோர் பெயர்கள் நியமனம் பெறாமல் இருந்து வந்தன. பின்னர் பல்வேறு பரிசீலனைக்குப் பிறகு தூரன் 1948 இல் அப்பணிக்குத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றார்.
அரிய பெரிய நூலான அபிதான சிந்தாமணியில் இலக்கியம் மற்றும் புராணச் செய்திகள் இடம் பெற்றிருந்தன. அறிவியல் வரலாற்றுத் தகவல்கள் இல்லை. எனவே இதற்கு மாற்றாக என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா போன்ற மேல்நாட்டுக் கலைக் களஞ்சியங்களுக்கு இணையாகத் தமிழில் உருவாக்கும் முயற்சியே கலைக்களஞ்சியப் பணியாகும்.
தூரனின் தலைமைப் பணி மகத்தானது என்று அ.ச. ஞானசம்பந்தன் தூரனைப் பற்றி 'நான் கண்ட கர்மயோகி' எனும் தலைப்பில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
கேலைக்களஞ்சியம் என்பது இதற்கு முன்னர் தமிழ் மொழியில் செய்யப்படாத புது முயற்சி ஆகும் ஆயிரக்கணக்கானவர்களை எழுதுமாறு வேண்டி-மன்றாடி அவர்கள் எழுதியதை ஓரளவு செப்பம் செய்து பெருவாரியாகப் பிரித்து அச்சிடும் பணியைச் செய்வதற்கு ஆசிரியருக்கு பல்வேறு துறைகளில் ஓரளவு அறிவும் விஷய ஞானமும் ஆற்றலும் தேவை என்பதை யாவரும் அறிய முடியும். இவை அனைத்தையும் விட அதிகமாகத் தேவைப்படுவது கடல் போன்ற பொறுமை. எத்தனை பண்பாடு உடையவர்களும் இம்மாதிரியான பணிகளில் ஈடுபடும் போது பொறுமை இழந்து விடுவார்கள். ஆனால் கலைக்களஞ்சிய ஆசிரியர் தூரன் அவர்களிடம் பொறுமையே நிரம்ப இருந்தது என்று கூறுவது தவறாகும். அவர் பொறுமையே வடிவமாக இருந்தார் என்று கூறுவதுதான் உண்மை. எந்த நிலையிலும் பொறுமைடேன் இருப்பவனை ஸ்திதப் பிரஞங்ன் என்று கீதை பேசுகிறது. பிறரை வேண்டி எழுதுமாறு தூண்டி எழுதப்பெற்றதை வாங்கிச் செப்பம் செய்து சேர்க்க வேண்டிய பணியில் மற்றொரு வகையான பிரசேனை தோன்றும். எழுதுகிறவர் அத்துறையில் வல்லவராக இருக்கலாம் அதிலும் சாதாரண மக்களுக்கு புரிய வைக்கின்ற முறையில் கலைச்சொற்களை அதிகம் பயன்படுத்தாமல் எழுதத் தெரியாமல் இருக்கலாம் ஆனால் தமக்கு இவற்றில் வழக்கம் இல்லை என்பதை எழுதும் அறிஞர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.
எனவே தாம் எழுதியதை அப்படியே போட வேண்டும் என்று கூறுவார் இத்தகைய மனிதர்களிடம் ஊடாடி அவர்களிடம் எழுதி வாங்கும் போது ஒருவர் பொறுமையின் எல்லைக்கே செல்ல வேண்டி இருக்கும் ஆசிரியர் பொறுமையை இழந்தால் கலைக்களஞ்சிய பணி நிறைவேறாமல் நின்றுவிடும் இத்தகைய நேரங்களில் பெரியசாமித் தூரன் என்கிற அறிஞர் மறைந்து விடுவார். எப்படியாவது. கலைக்களஞ்சிய பணி நடைபெற வேண்டும் என்று குறிக்கோளில் தம்மைக் கரைத்துக் கொண்டு பொறுமையின் எல்லையில் இருந்து பணியை நிறைவேற்றும் குறிக்கோள் வீரர்தான் அங்கு இருப்பார். மனித நிலைக்கு அப்பாற்பட்ட இத்தகைய ஒரு பொறுமையை விருப்பு வெறுப்பற்ற சம திருஷ்டியை தூரன் என்ற மனிதர் எவ்வாறு பெற முடிந்தது.? அனைத்தையும் பொறுத்துப் பிறர் மேல் பகை காழ்ப்பு சினம் முதலிய எதுவும் கொள்ளாமல் தம் பணியை முடித்தமைக்கு நம்மிடையே வாழ்ந்து மறைந்த தூரன் ஒருவரே இலக்கணமாக வாழ்ந்தார்» என்று எழுதுகிறார் அ.ச.ஞா.
அறிவியல் துறை பற்றித் தமிழிலே, எழுதக்கூடியவர்கள் வெகு சிலரே என்ற நிலையில் உருவாக்கப்படும் கலைக்களஞ் சியம் ஒரு மூன்றாம் தரமான நூலாகத் தான் இருக்க முடியும் என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர். மேலும் பல அறிஞர்கள் அதில் எழுத மறுத்தனர். இதற்கு பெ தூரன். ம்மூன்றாம் தரமோ நான்காம் தரமோ இப்பொழுது அதைப் பற்றி உங்களுக்கு எதுவும் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக கூற முடியும் எந்த ஒரு பொருளைப் பற்றியும் தெரிந்து கொள்ள இந்த கலைக்களஞ்சியத்தைத் தான் எல்லோரும் தேடி வர வேண்டி இருக்கும். முன்பே புகழ்பெற்ற வேறு எந்த கலைக்களஞ்சியத்திலும் இந்த பொருள்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள முடியாது அது மட்டும் திண்ணம்" என்ற உறுதியைத் தெரிவித்தார்.
கலைக்களஞ்சியப் பணிக்கு ஏ.எல். முதலியார் அவர்களது ஒத்துழைப்பை நன்றி மறவாத தூரன் குறிப்பிட்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகமே இப்பணி ஏற்று நடத்துவது போன்ற உணர்வை அளித்ததாகத் தூரன் குறிப்பிட்டுள்ளார். இக்கலைக்களஞ்சியத்தில் அநேகமாக உலகின் முக்கியமான எல்லா நாடுகளிலிருந்தும் கட்டுரைகள் பெறப்பட்டுள்ளன. பல நாடுகளில் இருந்தும் பல்வேறு துறைகளுக்கான நிழற்படங்கள் பெறவும் பெரு முயற்சி எடுக்கப்பட்டு அதில் வெற்றியும் காணப்பட்டுள்ளது.
பல்வேறு துறையைச் சார்ந்த கட்டுரைகள் கலைக் களஞ்சியத்தில் 10 தொகுதிகளையும் வனப்புறக் கட்டமைத்திருக்கிறது. குறிப்பாக மொழி மற்றும் அது சார்ந்த ஆளுமைகள் குறித்து 2170 கட்டுரைகள் இதில் அடங்கிளே்ளன. எழுத்துக்களின் வடிவம், இலக்கிய இலக்கணத்துறை ஆளுமைகள், திராவிட இந்திய மற்றும் பிற அயல் மொழிக் குடும்பங்களைப் பற்றிய கட்டுரைகள் 75க்கும் மேற்பட்ட உலக மொழிக் குடும்பங்கள் பற்றிய கட்டுரைகள் ஆகியவை இவ்வளவு தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்நாளிலும் யாருக்கும் கிடைக்காத அரிய செல்வங்கள்.
பல்வேறு நூல்கள் குறித்து ஏறத்தாழ 430 கட்டுரைகள் பிற்கால ஆய்வுகளுக்குக் கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளன.
நிறைவாக:
கட்டுக்கோப்பான நிர்வாகத் திட்டம், அயர்வறியாத உழைப்பு, அதற்கேற்ற ஆளுமைகள் தெரிவு என 1963 முதல் 1989 வரை செயல்பட்ட இந்த அறிவார்ந்த நிகழ்வு தமிழ்ச் சமூகத்தின் கூட்டுழைப்புக்குக் கிடைத்த பரிசு. இந்த உழைப்பை நெறிப்படுத்தி முறைப்படுத்தி -ஆடும் மாட்டை -ஆடியும் பாடும் மாட்டைப் பாடியும் கறந்து தந்து வேலை வாங்கிய தூரன் ஓர் இலக்கியவாதியாகவும் நிர்வாகியாகவும் உசேம் தொட்டு நிற்கிறார்.
கலைக்களஞ்சியப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அது மறுபதிப்புச் செய்யப்படும் என்று நடுவண் அரசு அறிவித்து சுமார் 20 ஆண்டுகள் ஆகின்றன. பல அறிவிப்புகள் ஆழ் கிணற்றின் கீழே கூழாங்கற்களாய் கிடப்பது நாம் அறிந்த ஒன்றே. ஆனால் பெ. தூரனும் தமிழ்க் கலைக்களஞ்சியமும் கூழாங்கற்கள் அல்ல. வைரக்கற்கள். அவற்றைக் கண்டெடுத்துக் கரை சேர்க்காவிட்டால் இழப்பு தூரனுக்கு அல்ல, தமிழ்ச் சமூகத்துக்கு என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் உணர்தல் நலம்.
- செ.சதீஸ்குமார்