கன்னியாகுமரி முனையிலுள்ள திருவள்ளுவர் சிலை போல் கருங்கல்லால் ஆன சிலை உலகில் எங்குமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடல்நீர் மட்டத்திலிருந்து 30 அடி பாறை மீதான இச்சிலையின் மொத்த எடை 7,000 டன் ஆகும். பீடத்தோடு சேர்த்து இச்சிலையின் உயரம் 133 அடியாகும்.thiruvalluvar statue 700பீடத்தின் உயரம் அறத்துப்பால் அதிகாரங்களை மனதிற்கொண்டு 38 அடியும், பொருட்பால் மற்றும் இன்பத்துப்பால் ஆகிய இரண்டு அதிகாரங்களின் அடிப்படையில் 95 அடி உயரமும் என, மொத்தம் 133 அதிகாரங்களைக் குறிக்கும் வண்ணம் 133 அடி உயரத்தில் சிற்பி கணபதி அவர்களால் கம்பீரமாக இச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது. உப்புக் காற்று இச்சிலையை அரிக்காமல் இருக்க அவ்வப்போது வேதியியல் கலவைப் பூச்சுப் பூசிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிலையின் 130 அடி உள்ளீடற்று அமைக்கப்பட்டு இருப்பதால், கடுமையான கடற்காற்றும் சிலையைப் பாதிக்காதபடி உரிய தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 2004-ஆம் ஆண்டில் மிகக் கடுமையான சுனாமி அலைகள் தாக்கிய பொழுதும் திருவள்ளுவர் சிலையை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது மிக மிக முக்கியமான செய்தியாகும்.

2000-ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்ட குமரிமுனை திருவள்ளுவர் சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலைக்கு இணையான முக்கியத்துவம் உடையதாகப் பலராலும் கருதப்படுகிறது. இதனால் கன்னியாகுமரியிலுள்ள ஆர்.எஸ்.எஸ். சார்பு விவேகானந்தா கேந்திரத்தின் முக்கியத்துவம் குறைவதாக ஒரு சிலர் எண்ணி, அதற்கேற்பக் காய்களை நகர்த்தி வருவதாகக் கன்னியாகுமரி மக்கள் தெரிவிக்கின்றனர். அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே நகர்வுகள் தொடர்வதையும் உணர முடிகிறது. இதனால் திருவள்ளுவர் சிலை புறக்கணிப்புக்கு உள்ளாகிவருகிறது.

எடுத்துக்காட்டாக, திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டவுடன், கரையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு நேரடியாகப் படகுப் போக்குவரத்து தேவை எனத் தமிழ் ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஒரு சில ஆண்டுகளே தமிழ்நாட்டு அரசின் பூம்புகார் போக்குவரத்துக் கழகத்தினால் இயக்கப்படும் படகுகள் திருவள்ளுவர் சிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. பிறகு சிலைக்குப் படகு போகச் சரியான வகையில் சூழல் இல்லை, நீரின் அளவு குறைவாக இருக்கிறது, காற்று கடுமையாக இருக்கிறது என்கிற வகையில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் திருவள்ளுவர் சிலைக்குப் படகுப் போக்குவரத்தை நிறுத்திவிட்டார்கள்.

பின்னர் முதலமைச்சராக வந்த ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் அந்தச் சிலையைத் தூய்மைப்படுத்தாமலும், வேதியியல் பூச்சுப் பூசிப் பேணிப் பாதுகாக்காமலும் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். அதன் பிறகு ஏறத்தாழப் பத்து-பினைந்து ஆண்டுகள் அளவில் திருவள்ளுவர் சிலைக்கான போக்குவரத்து முற்றிலும் இல்லாமலேயே போய்விட்டது.

இறுதியாக, திருவள்ளுவர் சிலையைப் போய்ப் பார்ப்பதற்கான கோரிக்கை வலுப்படவே, விவேகானந்தர் மண்டபம் உள்ள பாறைக்கும், திருவள்ளுவர் சிலைப் பாறைக்கும் இடையில் கண்ணாடிப் பாலம் ஒன்று முந்தைய ஆட்சியில் அமைக்கப்பட்டது. கண்ணாடிப் பாலத்தின் பணிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே திருக்குறள் பேரவையின் ஒருங்கிணைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட திருக்குறள் அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, கண்ணாடிப் பாலத்தைக் கடற்கரையிலிருந்து நேராகத் திருவள்ளுவர் சிலை நோக்கி அமைக்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தினர்.

ஆனால், அக்கோரிக்கை ஏற்கப்படாமல், அந்த இரண்டு பாறைகளுக்கும் இடையே கண்ணாடிப் பாலத்தைக் கட்டமைத்துவிட்டனர். இந்தக் கண்ணாடிப் பாலத்தைக் கட்டியமைக்கத் தமிழக அரசு 50 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். சார்பு விவேகானந்தா கேந்திராவிற்குச் சென்ற பிறகுதான் கண்ணாடிப் பாலத்தைக் காண முடியும் என்ற நிலை இப்பொழுது உருவாகிவிட்டது. அதன்பிறகே மக்கள் கண்ணாடிப் பாலம் வழியாகப் போய் திருவள்ளுவர் சிலையைக் காணும் வண்ணம் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதற்கிடையில் தேர்தல் பரபரப்பில் யாரும் கவனிக்க மாட்டார்கள் என எண்ணி, மிகவும் இரகசியமாகத் திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கான படகுத்துறை சிதிலமடைந்துவிட்டது எனும் காரணத்தைக் காட்டி அதையும் இடித்துத் தள்ளிவிட்டனர். இத்தகைய நடவடிக்கைகள் தற்செயலானவை அல்ல! திருவள்ளுவர் சிலைக்கு இருக்கும் முக்கியத்துவத்தை முற்றிலும் குறைக்கும் செயலாக இது இருக்கிறது என நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது.

எனவே, முன்பிருந்தபடியே கடற்கரையிலிருந்து நேரடியாகத் திருவள்ளுவர் சிலைக்குப் படகுப் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும். திருவள்ளுவர் சிலைக்கு வருபவர்கள் கண்ணாடிப் பாலத்தைக் காண்பதற்கு அது ஏதுவாக இருக்கும். பிறகு விருப்பமுள்ளவர்கள் விவேகானந்தா கேந்திரா செல்லலாம். "திருவள்ளுவர் பாறைக்குப் படகுப் போக்குவரத்து செலுத்துவது சாத்தியமல்ல" என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல! அறிவியலும் தொழில்நுட்பமும் உயர்ந்தோங்கி உள்ள இக்காலகட்டத்தில் இந்தச் சிறிய பிரச்சினையை மாற்றி அமைப்பது பெரிய செயலல்ல!

இந்தச் சமயத்தில் திருவள்ளுவர் சிலையின் அவல நிலையையும் சற்றே எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. விவேகானந்தா கேந்திரம் இரவில் லேசர் ஒளியில் கண்ணைப் பறிக்கும் வகையில் பளபளப்பாக மின்னிக்கொண்டிருக்கும்போது, திருவள்ளுவர் சிலை அனாதையாக இருண்டு கிடக்கும் கேவலமான நிலையைத் தமிழக அரசு மாற்றி அமைக்க வேண்டும்.

அதேபோல், திருவள்ளுவர் சிலையைக் காண வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும், பிற மாநிலப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் திருவள்ளுவர் குறித்த செய்திகளை விரிவாக அறிந்துகொள்ள இலவசமான கையேடுகளைத் தமிழக அரசு வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவள்ளுவர் சிலையைக் கடற்காற்று அரித்துச் சேதப்படுத்தாமல் இருக்க அதை முறைப்படி பாதுகாக்க வேண்டும். தற்பொழுது கடந்த நான்கு மாதங்களாக வேதியியல் பூச்சுப் பூசப்படாமல் வள்ளுவர் சிலை கேட்பாரற்றுக் கிடக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு உடனடியாக இரசாயனப் பூச்சைத் தொடங்க வேண்டும்.

இத்தகைய பின்னணிகளைக் கருத்தில்கொண்டு, தற்பொழுது புதிதாக ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும் நீண்டகாலமாக வலியுறுத்திவரும் மேற்காண் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்துத் திருவள்ளுவரின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்தும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் மேலோங்கி உள்ளது.

- புதுமலர் ஆசிரியர் குழு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.