1. சித்திர வரிக்குதிரை

கோடுபோட்ட நோட்டுப்புத்தகம்
நின்று பெய்யும் மழை
கருப்புக் குடைபிடித்து
மிதிவண்டியில் ஆசிரியர்
வாசலைக் கடக்கும்
வரிக்குதிரைச் சித்திரம்

முந்தானை உதறி முடிந்து
கரும்பலகையில்
அவர் வரைந்த அ
ஒரு தலைமுறை உயிரெழுதும்.

2. தோணி

ஊரில்
பாதையில்
பள்ளியில்
நீரில்
உணவில்
உட்காரும் இருக்கையில்
விளையாடும் திடலில்
சொல்லில்
சாதி நீலகண்டம்
வழியில் கல்லெறியும்
காலிப்பயல்கள்
முந்தானை தலைப்பை
இறுக சொருகியிருக்கும்
ஆசிரியருக்கு
தெருவில் கால்கள் இறக்கை
வகுப்புக்கு வந்ததும் எங்களுக்கு
அணிவார்
சமைத்து முடித்து
‘லேடிஸ் சைக்கிளில்’
கட்டுச்சோறு முன்தொங்க
தன் குழந்தை பின்தொங்க
பள்ளிக்கு வரும் ஆசிரியர்
மாணவரின் ஒழுகும்
மூக்குத்துடைத்து
தலைதடவி ஆசிர்வதிக்கும்
ஆனை

சாலை தீ பிடிக்க
‘பைக்கில்’ வந்திறங்கி
கனவின்
பேரண்டப் பூட்டைத் திறக்கும்
சாவித்திரியாய் எள்ளுப்பேத்தி

தாயுமானவர் சிலர்
கரைசேர்க்கும் தோணி.

3. கடலின் சதை

பத்துத்தலை கனவு
இருபது கைகள்
இருபது கால்கள்
உலகளந்து
சமுத்திரத்தைத் தலையில்
சுமந்தலையும்
தெய்வங்கள்
எங்கள் பேரம்மைகள்
அரிந்து கொடுத்த கடலின் சதை
ஊர் கொதிமணக்கும்
உப்பிட்டவரை உள்ளவும்
நினையாத ஊண்.

மாலதி மைத்ரி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.