கமலினிக்கு இன்றுடன் எழுபத்தைந்து வயது நிறைவடைகிறது. அவள் டென்மார்க் நகரத்திற்கு நகர்ந்து நாற்பது வருடங்கள் ஆகின்றன. கணவன் செல்வநாதன் இறந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. கமலினியின் கனவு ஓர் எழுத்தாளராவது. கடைசியில், டென்மார்க்கில் ஓர் ஆங்கிலப் பத்திரிகை நிறுவனத்தில் பத்திரிகையாளராக இணைந்து பணியாற்றும் கனவாகச் சுருங்கிப் போயிருந்தது. எழுதுவதற்கான வாழ்வியலும் குணங்களையும் வளர்த்துக் கொள்ள அவள் போராடினாள். பத்திரிகையாளராக நிலைபெற்ற பின் இரண்டு நாவல்களை ஆங்கிலத்தில் எழுதினாள். அதில் இரண்டாவது நாவல் அதிகப் புகழ் பெற்றது. அவள் பல நகரங்களுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டுப் பாராட்டப்பட்டாள். கணவன் செல்வநாதன் அவளை அவ்வண்ணம் பார்த்துக் கொண்டார் என்று சொல்ல வேண்டும். எழுத்தாளராவது தான் அவளுடைய லட்சியம் என்பதை அறிந்தது முதல் அவர் அதில் ஈடுபடும்படி அவளை ஊக்குவித்துக் கொண்டே இருந்தார். வருமானமும் தேவைப்பட்டதால் பத்திரிகைப் பணியும் முக்கியமானதாக இருந்தது. ஓய்வு பெற்ற இரண்டு ஆண்டுகளிலேயே செல்வநாதன் இறந்து போனார். வீட்டு வாசலில் இருந்து இறங்கித் தெருவில் நடந்தவர், மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி வீழ்ந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது.

செல்வநாதன் இல்லாமல் தன்னால் வாழமுடியும் என்று கமலினியால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இரண்டு பெண்களும் வெவ்வேறு நாட்டில் வாழ்கிறார்கள். இந்த எழுபத்தைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்று வற்புறுத்தியவர்கள், நாள் நெருங்கும் பட்சத்தில் வெவ்வேறு காரணங்கள் சொல்லி டென்மார்க் வரும் திட்டத்தை ரத்துச் செய்து விட்டார்கள். அவள் முன் இருக்கும் பெரிய கேக்கை என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டே இருந்தவள், அதைத் தனியே வெட்டும் எண்ணத்தைக் கைவிட்டு எழுந்து, அதை ஃப்ரிட்ஜில் (Fridge) வைத்துவிட்டு வெளியே ஒரு நடை போக விரும்பினாள். தன் வீட்டிலிருந்து வெளியே வந்து உலகத்தைப் பார்த்தவளுக்கு அதன் வெறுமை இன்னும் கூடியதாக இருந்தது. குளிர் அதிகமாய் வீசியது. அவள் வீட்டை ஒட்டி ஓர் ஓடை ஓடுகிறது. அதன் கரை வழியே ஒரு கிலோமீட்டராவது நடந்து வரலாம் என்று நினைத்தவளால், ஓர் அடி கூட நடப்பதற்கான மன ஊக்கம் இல்லாமல் இருந்தது. மூத்தவள் சசி தமிழகத்தில் இருக்கிறாள், இந்நேரம் உறங்கிக் கொண்டிருப்பாள். இளையவள் மது வேலைக்காக அலுவலகத்திற்குக் காரில் சென்று கொண்டிருக்கும் நேரம்; அழைத்தால் துண்டித்துவிட்டுப் பிறகு அழைக்கிறேன் என்று சொல்லிவிடுவாள். தன் பிறந்த நாள் அவளுக்கு நினைவில் இல்லாமல் போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே கமலினி சற்று முன் பூட்டிய வீட்டைத் திறந்து உள்ளே வந்து கதவைச் சாத்தினாள்.

தன் தோழி வசந்தியை அழைத்தாள். எந்த நேரம் என்றாலும் அவளைத்தான் அழைக்கமுடியும். அவள்தான் மனம் சுளிக்காமல் அழைப்பை ஏற்பாள். "கமலினி, வாழ்த்துகள். கொஞ்ச நேரம் கழிச்சு அழைக்கலாம்னு நினைச்சேன். நீயே கூப்பிட்டிட்ட. என்ன ஆச்சு? ஏதும் பிரச்சினை இல்லையே?" என்றாள். கமலினிக்கு மனம் சட்டென்று இறகு போல காற்றில் ஏகியது. "75 பாரமில்ல வசந்தி?" கேட்டாள். "எனக்கு இல்லை. உன் புருஷன் உன்னைய உள்ளங்கையில வச்சு தாங்குனாரு. எம் புருஷன் கிட்டேருந்து எப்பத் தப்பிக்கலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். இப்பத்தான் எனக்கு வாழத்தொடங்குற மாதிரி இருக்கு" என்று வெளிப்படையாய்ச் சொன்னாள். "ஆமா வசந்தி. பிறந்த நாளும் அதுவுமா கூட யாரும் இல்லாதது என்னவோ போல இருக்கு. உன்னைய வரவழைச்சிருக்கலாம்" என்று கமலினி பெருமூச்சுடன் சொன்னாள். "இங்க பாரு. என் பர்த்டேக்கு என் பையன் அவன் கூடத்தான் இருக்கணும்னு சொல்லிட்டான். மருமகள் பாயசம் செஞ்சு வச்சிருந்தா. இந்த ரெண்டு நாள் வித்தியாசம் இல்லைன்னா நான் வந்திருப்பேன். அடுத்த வருஷத்துக்கு அப்படித் திட்டம் போட்டுருவோம். நீ என்ன பண்ணுன, சொல்லு" என்றதும், கமலினி மகள்கள் வராததையும் தன் வெறுமையையும் சொல்லித் தீர்த்தாள். "ஆமா, உன் பிறந்த நாளுக்காவது யாராவது உங்கூட இருந்துருக்கலாம். வீடியோ கால் வா" என்றாள்.

உடனே கமலினி உற்சாகமாய்ச் சென்று தன் மீது ஜன்னல் வழியே வெளிச்சம் படும்படி நின்றுகொண்டு ஃபோனின் கேமராவை இயக்கினாள். "யப்பா, எப்படி இருக்க பாரு! எழுபத்தைஞ்சுன்னு நீயே சொன்னாத்தான் யாருமே நம்புவாங்க. நான் எப்படி இருக்கேன் பாரு, முடிக்கு டை அடிக்கிறதை விட்டுட்டேன். அவ்வளவு அழகா இருக்க கமலினி. இந்தத் தோடு, நெக்லஸ் எல்லாம் உன்னைய நதிக்கரையில இருக்கிற ஒரு அம்மனைப் போலக் காட்டுது. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத, இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று வசந்தி சொன்னாள். கமலினி உண்மையாகவே வெட்கப்பட்டாள். யாராவது தன்னைக் கூடவே இருந்து ஒவ்வொரு நாளும் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் தெம்பாய் வாழ்ந்து விடலாம். இந்த நிலையிலேயே எப்படி வாழ்வைத் தொடர்வது என்று கமலினிக்குக் குழப்பமாகத் தான் இருந்தது.

இருவரும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிக் கொண்டிருந்தார்கள். உரையாடலில், பழைய ஆண் நண்பர்களைப் பற்றியும், இளமைக்கால பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் நினைவுபடுத்திப் பேசினார்கள். இருவருக்குமே நினைவுகளைத் துள்ளியமாகப் பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு நல்ல உடல்நலம் இருந்தது என்பதை இருவருமே உணர்ந்தார்கள். அழைப்பை முடிக்கப் போகையில் நினைவிற்கு வந்தவளாய் வசந்தி சொன்னாள்: "ஏய் கமலினி, என்னோட தூரத்துச் சொந்தம் விமலன் டென்மார்க் வரான். ஸ்பேஸ் சயின்ஸ்  சம்பந்தமா டென்மார்க்ல கருத்தரங்கமாம். அங்க உங்கூட வந்து தங்கச் சொல்லட்டுமா? நீயும் தனியாத்தான இருக்க. அவனுக்கு முப்பத்தைஞ்சு வயசு இருக்கும். நல்ல பையன் தான். என்னமோ தெரியல, போன வருஷம் டைவர்ஸ் பண்ணிட்டான். கேரியர்ல கவனம் செலுத்தணும் அத்தைன்னு சொல்லிக்கிட்டு இருந்தான். இந்தச் சின்னதுங்கெல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு டைவர்ஸ் பண்ணிடுதுங்க. எனக்கும் விவரம் இருந்துருந்தா நானும் என் புருஷனை விவாகரத்து பண்ணியிருப்பேன்" என்றாள். வசந்தி சொன்னதும், "சரி திரும்ப முதல்லேருந்து ஆரம்பிக்காத. என் அட்ரஸை திரும்ப அனுப்பி வைக்கிறேன். பேரு என்ன சொன்ன, விமலன் தான? வைக்கிறேன், பசிக்குதுடி" என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியைத் துண்டித்தாள்.

விமலன் வருவது அவள் எதிர்பார்த்திருக்க ஒரு நல்ல காரணமாக இருந்தது. வீட்டை ஒழுங்கு செய்யவேண்டும், விமலனுக்கு ஓர் அறையை நேர் செய்யவேண்டும், கொஞ்சம் ஆண்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் எல்லாம் வாங்க வேண்டும் என்று நினைத்தவள், வேக வேகமாகச் சாப்பிட்டாள். ஒரு கேக் துண்டை வெட்டிச் சாப்பிட்டுக்கொண்டே காரை வெளியே எடுத்தாள். அதற்குள் இளைய பெண் மது அழைத்தாள், "அம்மா ஹாப்பி பர்த்டே" என்றாள். "வந்துருக்கணும்மா, ரொம்ப மிஸ் பண்ணுறேன்" என்று கமலினி சொன்னது போலியாக இருந்தது. "தேங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு, "ஷாப்பிங் போறேன், அப்புறம் கூப்பிடட்டுமா" என்று சொல்லித் துண்டித்தாள். அன்றைய நாளுக்குக் கமலினிக்கு ஓர் உருப்படியான வேலை கிடைத்து விட்டதாகவே நினைத்தாள். ஒரு நல்ல பெர்ஃப்யூம் வாங்க வேண்டும்; ரூம் ஸ்பிரே, சோப், பெட் கவர், வால் ஹேங்கிங் மாற்ற வேண்டும் என மனதில் நீளமானதொரு பட்டியல் போட்டாள். அவளுடைய கணவனின் ரசனை ஒட்டித்தான் சிந்திப்பதாய்த் தோன்றியது. ஆம், செல்வா இறந்து ஆண் தொடர்பான பொருட்கள் எதுவுமே வாங்கவில்லை என்பதும் அவளுக்கு நினைவிற்கு வந்தது. பொறுமையாக ஷாப்பிங் செய்தாள். தன் கணவன் என்றால் அவருக்கான தேவைகளை வாங்க ஒரு முழு நாள் எடுத்துக் கொள்வார்கள். இருவரும் ஒருவருடன் ஒருவர் கையைக் கோர்த்துக்கொண்டு திரிவது அவர்களுக்கே புதுக் காதலர் போன்று தோன்றும். "யப்பா, நாம ரெண்டு பேரும் எப்பவும் இப்படித்தான் ஒட்டிக்கிட்டு திரியுறோம் கமல். ஆனா ஏதோ ஒன்னு, எனக்குத் தெரியாத மர்மமான அழகு ஒன்னு இன்னும் உங்கிட்ட இருந்துட்டே இருக்கு" என்று செல்வா சொன்னதுமே, அவளுக்கு அது அதிக நாணம் கலந்த ஒரு புன்சிரிப்பை வரவழைக்கும். இருவரும் ஒருவர் கண்ணில் இன்னொருவர் ஆழமாய் நுழைந்து பார்த்துக் கொள்ளும் தருணம் அது.

அவ்வப்பொழுது அவள் உதடுகள் "விமலன்" என்று அவன் பெயரை நினைவுபடுத்திக் கொண்டது. நல்ல சாப்பாடு கூடச் சமைத்துக் கொடுக்கலாம், அவனுக்கு என்ன பிடிக்கும் என்று வசந்தியிடமே கேட்டு விடலாம். இப்பொழுது உடனே அழைத்தால் நன்றாயிருக்காது; அடுத்த முறை பேசும்போது பேச்சோடு பேச்சாகக் கேட்டுவிடலாம். ஏன் இப்படி ஒரு புளகாங்கிதம்? தனிமை வெறுத்துப் போய்விட்டது. ஆனால், அவள் யாரையும் பிறகு சந்திக்காததற்குக் காரணம், செல்வாவைப் போல யாருமே உண்மையாக அவளிடம் அன்பு காட்ட மாட்டார்கள். அவள் வயதுப் பெண்களின் கணவர்கள் எல்லோருமே வசந்தியின் கணவர் போலவே இருந்தார்கள்; செல்வா மட்டும் விதிவிலக்கு. நகப்பூச்சு போட்டுவிடுவார், தன் ஒப்பனை தொடர்பான எல்லாமே அவருக்குத் தெரியும். எந்த நிறத்தில் உதட்டுச்சாயம் பூசுவாள் என்பதைக் கூட அவர் அறிந்து வைத்திருப்பதுடன், பல சமயங்களில் அவரே அவளை அழகு செய்வதில் ஈடுபட்டுவிடுவார். கமலினிக்குத் தன்னை ஒப்பனை செய்து கொள்வதுதான் முழுநாள் வேலை. தொழில்முறை ஒப்பனையாளர் போலவே நல்ல தரமான ஒப்பனை மேசை, பை, கண்ணாடி வைத்திருந்தாள். செல்வாவும் கமலினிக்குத் தன் அழகின் மீது இருக்கும் நம்பிக்கை, ஆர்வம் குறித்து அறிந்து வைத்து அவள் மனமொப்பச் செயல்பட்டார். அவர் வாழ்க்கையில் அவர் சந்தித்த முதல் பெண்ணே கமலினி தான். அவர் அம்மா இளம் வயதிலேயே இறந்து விட்டார், அப்பா தான் வளர்த்து வந்தார். அப்பா, தாத்தா, மாமா மூவருக்கு இடையே வளர்ந்தவர் செல்வா. கமலினியைப் பார்த்ததுமே பிடித்துப்போயிற்று. கமலினியின் அறியாமையும் குழந்தைமையும் அவளிடம் அவரை ஒப்படைக்கச் செய்தது. ஆனால் வாழ்க்கை நீள நீள, கமலினிதான் தன்னைச் செல்வாவிடம் ஒப்படைத்திருந்தாள். செல்வாவின் ஆண்மைக்கு ஈடு இணை என்று யாரையுமே இந்த உலகில் சொல்லமுடியாது என்று கமலினி உறுதியாக நம்பினாள்.

அவ்வப்பொழுது வசந்தியுடன் பேசிக் கொண்டிருந்தாள். விமலனைப் பற்றி அவள் ஏதாவது ஒரு துணுக்குச் செய்தி சொல்வாள், அதைக் கேட்டு அதற்கேற்றபடி அசைபோட்டு ஏற்பாடுகள் செய்யவேண்டும். ஒரு புராஜெக்ட் போல அவள் அதை நுணுகி நுணுகிச் சிந்தித்துச் செயல்பட்டாள்.

விமலன் வருவதற்கு ஒரு வாரம் முன்பு மூத்த மகள் சசி வந்தாள். அவள் அவ்வப்பொழுது திடீரென்று வருவதுண்டு. கமலினியைச் சந்திப்பது நோக்கமென்றாலும் அதற்கெல்லாம் நேரமெடுத்துக் கொண்டு வரமாட்டாள். தன் வேலையாக வந்தால், அந்த நேரத்தை, பணத்தைச் சிக்கனப்படுத்திக் கொண்டு கமலினியைப் பார்த்துவிட்டுப் போவாள். மிகவும் சிக்கனமானவள். கமலினியை அவ்வப்பொழுது அவள் கடிந்துகொள்வாள். "இப்ப எதுக்கு எவனோ ஒருத்தன் வாரான்னு, அதுவும் முன்ன பின்ன பாத்ததுல்ல, இப்படி ரூம ரெடி பண்ணி வச்சிருக்க?" என்று சிடுசிடுவெனக் கடிந்தாள். கமலினி பொருட்படுத்தவில்லை. கமலினி, சசி சமைத்து வைத்ததையெல்லாம் சாப்பிட்டுவிட்டு டையசின் மாத்திரைகளையும் கொஞ்சம் கூடவே எடுத்துக்கொண்டாள். சசி கிளம்பிச் செல்லும் வரை தனக்கு வயிறு அளைந்து கொண்டே இருக்கும். தயாரிக்கும் உணவும் அப்படி, அவள் பேசும் பேச்சும் அப்படி. தன் வீட்டில் அவள் வந்து நின்று இப்படிச் சட்டம் செய்யவில்லை, சசியின் இயல்பு அப்படி. அப்பா இறந்ததும் என்னவோ கமலினியைப் பார்த்துக்கொள்ளும் முழுப்பொறுப்பு அவளுக்கு வந்துவிட்டது போல ஓர் அங்கலாய்ப்பு. அவளால் கமலினியைப் பார்த்துக்கொள்ள முடியவில்லையே என்ற எரிச்சல் வேறு.

கிளம்பும் முன் சசி கமலினியிடம், "ஒரு காபி கொடும்மா" என்றாள். கமலினி அருமையாகக் காபி போடுவாள். காபிக்கொட்டைத் தூளை அதற்கென இருக்கும் வடிகட்டி பாத்திரத்தில் இட்டு, வெந்நீரைக் கீழே இட்டு அதை அடுப்பில் வைத்தால் பொங்கி ஊற்று போல காபி கசாயம் மேலே வரும்; மணம் வீட்டைத் தூக்கும். நன்றாகக் கொதித்த பாலை டிகாக்ஷன் விழுங்கிவிடுவது போல ஊற்றினால் போதும். அது வயிற்றில் இறங்குவதும் அப்படித்தான், வழுக்கி இறங்கும் ஒரு விதக் கமழ்தலுடன். தான் வளர்த்த ரோஜாச் செடிகளுக்கு இடையே இட்டிருந்த நாற்காலியின் இருபுறமும் அமர்ந்து காபி அருந்தினர் இருவரும். ரம்யமாக இருந்தது. அவள் அப்படியே அப்பாவைப் போல. "அம்மா, நீ லோன்லியா ஃபீல் பண்ணுற தான, எங்கூட வந்துரு ப்ளீஸ். எனக்கு உன்னைய விட்டுட்டு அங்க இருக்கவே முடியல" என்றாள். அவள் பல முறை இப்படிச் சொல்லிவிட்டாள். இங்கே இருக்கும் வசதிகள், சூழல் கமலினிக்கு வேறு எங்கும் கிடையாது. நடுநிசி மூன்று மணிக்குக் கூடத் தனியே வெளியே போகமுடியும். இருவரும் காபியை ருசித்துக் குடித்தார்கள். "இவ்வளவு ரோஜாப்பூவை எப்படிம்மா வளர்க்குற?" பேச்சு திசை மாறியதும் கமலினி மகிழ்ச்சியானாள். அவள் தலைக்குச் சில பூக்களை வைத்துக் கொடுத்தாள். அவள் கிளம்பிச் சென்றதும் கமலினிக்கு அவ்வளவு விடுதலையாக இருந்தது.

ஒரு வழியாக விமலன் வந்து சேர்ந்தான். கமலினி இதயத்திற்குள் சத்தியம் செய்தாள், "இவ்வளவு அழகான ஆம்பிளை இவளைத் தேடி வரான்னா ஏதோ காரணம் இருக்கு" என்று. விமலன் வசந்தியிடமிருந்து நிறைய அன்பளிப்புகளைக் கொண்டு வந்திருந்தான். செல்வாவின் இளைய வடிவம் போலவே இருந்தான். "ஆண்ட்டி, எப்படி அழக இவ்வளவு நல்லா மெயின்டெய்ன் பண்ணுறீங்க? வசந்தி அத்தை உங்களைப் பத்தி நிறைய சொல்லுவா. நீங்க ஐம்பது வயசுக்குக் குறைவா தெரியிறீங்க." கருத்தரங்கு சென்று வீடு திரும்பும்போதே கூப்பிடுவான். கமலினி சென்று அவனைக் காரில் ஏற்றிக்கொண்டு அங்கங்கே ஊர் சுற்றி வருவார்கள். கமலினியை அழகழகாக வீடியோ எடுத்தான். அவளுக்கு ரீல்ஸ் போடக் கற்றுக்கொடுத்தான். இன்ஸ்டாவில் அவள் ரீல்சுக்குக் கவனம் கிடைத்தது. அதற்காகவே தினம் தினம் அவளிடம் இருக்கும் வெவ்வேறு புடவை, நகை எனக் கலந்து புதிய பொலிவிற்கு மாறினாள். இளையவள் மது அழைத்துச் சொன்னாள், "அம்மா என்ன ஓவரா பண்ணுற?" என்றாள். "அப்படித்தான் ஓவரா பண்ணுவேன்" என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டாள் கமலினி. விமலன் கமலினியை அணைத்துக் கொண்டான், செல்லமாக முத்தமிட்டுக் கொண்டான், தலையை வருடினான், முடியைக் கோதினான். அதிக வயது வித்தியாசம் இருவரையும் நெருக்கமாக்கியது. கமலினிக்கு அது பரவசத்தைக் கொடுத்தது.

விமலன் கிளம்பும் நாள் வந்தது. கமலினி சோகமானாள், அதை விமலன் நல்ல அர்த்தத்தில் எடுத்துக்கொண்டான். "நீங்க என்னைய மிஸ் பண்ணாத மாதிரி பாத்துக்கிறேன் ஆண்ட்டி" என்றான். "இனியாவது ஆண்ட்டி கூப்பிடாம கமலினி அல்லது கமல் இப்படிக் கூப்பிடலாமில்ல?" செல்லம் கொஞ்சினாள். விமலனிடம் சிறு பெண்ணைப் போல நடந்து கொண்டாள். "புரியுது மிஸ் கமல். நான் தினமும் வீடியோ கால் பேசுறேன், யூ வோன்ட் மிஸ் மீ" என்று எழுந்து அவளை இறுக அணைத்துக் கொண்டு, அப்படியே கைகளுக்கு இடையே மெல்ல சரித்துத் தாலாட்டுவது போல் செய்தான். கமலினிக்குத் துக்கம் தாளவில்லை, மெலிதான விரகமும் வீசியது. மெல்ல அழுதாள், விமலன் ஆற்றினான்.

கமலினி அவன் எங்கே பணியாற்றுகிறான் என்று கேட்கும்போது அவன் சொன்னதையெல்லாம் மனதில் கோர்த்து வைத்துக் கொண்டாள். அவன் நிலவு பற்றிய ஆராய்ச்சிக் குழுவினருடன் இருக்கிறான். "குழுவில் அவனுடைய பெயர் இது அன்று, அது அவளுக்கு அவசியமில்லை" என்றான். நிலவில் மனிதர் சென்று வாழ்வதற்கான வாய்ப்பு எவ்வளவு இருக்கிறது என்று எல்லோரும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குழுவினர் அங்கே நெல் விளைவிக்க முடியுமா என்ற திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்களாம். அதற்கு முதலில் நிலவின் மண் மாதிரி சேகரிக்க வேண்டும். "அங்கே ஆக்சிஜன் இல்லை, என் மூச்சிற்கே நான் கடினப்பட்டுத்தான் ஆக்சிஜனை பூமியிலிருந்து எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் நிலவில் மனிதக் குடியேற்றம் சாத்தியம். நாம் இருவரும் போய் வாழலாம்" என்றான். அவன் அப்படிச் சொன்ன தருணத்திலிருந்து அவள் உடலில் சிறகுகள் முளைத்தது போல் ஆனாள். இதயத்தின் வேட்கையை விட உடலின் வேட்கை அதிகமானது. உடலின் வேட்கையை இதய வேட்கை கண்டுகொள்ளாமல் போனது. உடலில் ஹார்மோன்கள் எல்லாம் தீர்ந்து போயிருந்தாலும், இதயத்தின் சுரப்பிகள் கமழ்ந்து மணக்கும் வாழ்விற்கான வேட்கை உதயமாகியது. உடலில் இளமை அசைந்தாடியது.

டென்மார்க்கிலிருந்து விமலன் கிளம்பிச் சென்றது முதல் கமலினி மனம் இடிந்து போனாள். "தன்னால் அவன் இல்லாமல் இருக்கமுடியாமல் போய்விடுமோ?" என்று நிலைகுலைந்தாள். வசந்தி அழைத்தபோது விமலனைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தாள்; அவனைப் பற்றிப் பட்டும் படாமல் பேசினாள். அறைகளில் எல்லாம் அவன் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்ததைப் போல இருந்தது. எங்கு திரும்பினாலும் அவனுடைய திருத்தமான முகம் பின்னணியிலிருந்து ஒளிவீசும் கதிர்க்கற்றையுடன் அவள் முன்னால் தோன்றியது. அவன் அவளுக்குச் செய்யும் பணிவிடைகளை எல்லாம் கமலினி தவற விட்டாள். அவன் அவளைத் தொட்டுத் தொட்டுத்தான் பேசினான், தொடாமல் அவனால் பேசவே முடியவில்லை. அவன் தொடுவது ஒவ்வொரு கணமும் அவளுக்குத் தேவையாக இருந்தது.

"சென்று இறங்கியதும் அழைப்பேன்" என்றவன் அழைக்கவே இல்லை. கமலினியே அழைத்தாள், விமலன் பதில் சொன்னான்: "யெஸ் டியர் கமலினி, ஜெட்லாக் ரொம்ப. அப்புறம் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுறேன், என்னவோ போல இருந்துச்சு. இதையெல்லாம் மறைக்கத்தான் கொஞ்சம் டிலே பண்ணலாம்னு நினைச்சேன்" என்று உருக்கமாய்ச் சொல்லவும் கமலினி சமாதானமானாள். விமலனுக்கும் தன் போலவே உணர்வுகள் தோன்றுகின்றன என்பதை உறுதி செய்துகொள்ள அவனுடைய இந்த வார்த்தைகள் போதுமானதாக இருந்தன.

விமலன் மின்னஞ்சல்கள் எழுதினான். "இனி ஃபோனில் தொடர்பு கொள்ள முடியாது, விண்வெளிப் பயிற்சிக்காகத் தலைமறைவாவதாக" சொன்னான். இன்னும் ஒரு மாதத்திலோ, இரு மாதத்திலோ அவன் விண்வெளி செல்ல வேண்டியிருக்கும் என்றான். அவனுடைய மின்னஞ்சல்களுக்காக அவள் காத்திருந்தாள்; அவன் தாமதப்படுத்தி எழுதினான், அது அவள் ஏக்கத்தை அதிகப்படுத்தியது. ஒரு மாதத்திற்குப் பின் ஒரு நாள், அவன் விண்வெளி செல்ல வேண்டிய நாள் வந்துவிட்டது என்றும், அவன் நிலவிலிருந்து அவளைப் பார்ப்பான், நினைத்துக்கொண்டிருப்பான் என்றும் எழுதியிருந்தான். தனக்கு ஓர் ஐந்து லட்சம் பணம் தேவைப்படுவதாகச் சொன்னான். உடனே கமலினி பம்பரம் போல சுழன்று இயங்கி, அவன் கேட்ட தொகையை அவளின் அன்பைக் குழைத்து அவனுக்கு அனுப்பினாள். அன்றெல்லாம் அவளுக்குச் சொல்லொணா மகிழ்ச்சி, கிளர்ச்சி. தன்னால் அவனுக்குப் பயனுடையவளாய் இருக்கமுடிகிறது என்று காலத்தின் ஒரு சுற்று தன் வயது குறைந்ததைப் போல நினைத்தாள். ஆள் உயரக் கண்ணாடி முன் நெடுநேரம் நின்று தனக்குத்தானே பேசினாள், தூக்கம் குறைந்தாள். ஒருவிதமான பேதலிப்பும் கொந்தளிப்பும் பொங்கி நுரைத்துக்கொண்டே இருந்தன.

தொடர்ந்து அவனிடமிருந்து மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று கவனிப்பது களைப்பைக் கொடுத்தது. முழு ஒப்பனையில் வீட்டிற்குள் நடையாய் நடந்தாள். ஓர் அறையிலிருந்து இன்னோர் அறைக்குச் சென்று பால்கனியைத் திறப்பாள், நிலவை நோக்கிப் பார்த்துக் கொண்டே இருப்பாள், நடுநிசியில் மென்குரலில் பாடுவாள். அவள் பொழுதுகள் அவள் கையில் இல்லாமல் விமலனின் நினைப்பில் கரைந்து கொண்டிருந்தன. இன்னொரு மின்னஞ்சல் வந்தது, "இன்னோர் ஐந்து லட்சம் அனுப்பிவிடவும்" என்று எழுதியிருந்தான். மிகச் சுருக்கமான மின்னஞ்சல். "பூமியிலிருந்து எடுத்து வந்திருந்த ஆக்சிஜனில் கமலினியின் மூச்சும் கலந்திருப்பது போல அப்படி ஒரு மணம் தன் மனதில் சுரந்து கொண்டே இருக்கிறது" என்றும் எழுதியிருந்தான். கமலினிக்குப் பெருமூச்சு வந்தது, அலைபாய்ந்தது, ஏதும் செய்ய முடியாதவளானாள். காரை எடுத்துக் கொண்டு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் எங்கு செல்ல முடியுமோ அங்கெல்லாம் சென்றாள். ஏதோ ஒரு கஃபேயில் காபி குடித்தாள், இன்னும் வேகமெடுத்தது கார்.

அவள் சற்றும் எதிர்பாராத ஒரு நாள் சசி வந்து இறங்கினாள். "அம்மா கிளம்பு, கிளம்பு. உன் பேரனோட இன்டர்நேஷனல் கான்சர்ட். அவனை ஆடிட்டோரியத்துல விட்டுட்டு வந்துருக்கேன். மகிழன் அவனோட பெர்ஃபார்மன்ஸ்க்கு அவசியம் நீ வேணும்னு சொல்லிட்டான். கெட் ரெடி, யூ ஹவ் ஒன் ஹவர்" என்று சொன்னாள். தலைகால் புரியாத நிலை, கமலினிக்குக் கிளம்பும் மனநிலை சற்றும் இல்லை. சசி அப்படித்தான் விரட்டுவாள், கடுமையான பரபரப்பு. குளிக்கச் சென்றாள், சோப்பு தீர்ந்திருந்தது, எரிசலாக இருந்தது. ஷவரைத் திறந்து விட்டுச் சசியைக் கடிந்து கொண்டாள். வழக்கமாகப் பொறுமையாக உடையைத் தேர்ந்தெடுத்து உடுத்துபவள், ஏதோ ஒன்றை வரிசையிலிருந்து இழுத்து அணிந்து கொண்டாள். "விமலன் இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்திலிருந்து அவனுடன் தன்னை இழுத்துச் சென்றால் என்ன?" என்று நினைத்துக் கொண்டாள். உடை உடுத்தி வெளியே வரும்போது சசி அவளை என்னவோ போல பார்த்தாள். "என்ன சசி, இந்த டிரஸ் சரியில்லையா?" என்று கேட்கவும், "நல்லாயிருக்கு, முதல்ல கிளம்பு, ஒரு மணி நேரத்துக்குள்ள நாம போயி சேரணும்" என்று அவசரப்படுத்தினாள்.

ஆனால், வரும்போது இருந்த உற்சாகம் வீட்டிலிருந்து கிளம்பும்போது சசியிடம் இல்லை. ஏதோ நடந்திருப்பதை கமலினியின் உள்ளுணர்வு சொல்லியது. காரில் சசியும் கமலினியும் வழக்கத்திற்கு ஒவ்வாத அமைதியுடன் பயணித்தனர். கமலினி சில அவசியமற்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டே வந்தாள், என்றாலும் சசி பெரிதாகப் பதில் சொல்லவில்லை. சரியான நேரத்திற்கு இடத்தை அடைந்தனர். மகிழன் ஓடிவந்து கமலினியைக் கட்டிக்கொண்டான். "எங்க உங்க மேல வீசுற வழக்கமான பெர்ஃப்யூம் வாசனை இல்லை?" என்று பொய்க்கோபம் கொண்டான். கமலினி வாசனை திரவியம் வீசிக்கொள்ளக்கூட மறந்திருந்தாள். "உன் அம்மா படுத்தின அவசரத்துல எல்லாத்தையும் மறந்துட்டேன். முன்னாடியே எனக்குத் தெரிவிச்சிருந்தா ஜோரா வந்துருப்பேன் செல்லம்" என்று கமலினி சொல்லவும், மகிழன், "அம்மா கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தேன் கிராண்ட்மா, உனக்குச் சொல்லச் சொல்லி. சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லிட்டா" என்று சொல்லிவிட்டு அவனையொத்த குழந்தைகளுடன் ஓடிவிட்டான்.

மகிழன் அவ்வளவு நன்றாக, விசையுடன் பியானோ வாசித்தான். கமலினிக்கு உடல் வழியாக இசையைச் சுவாசித்துக்கொண்டது போல இருந்தது. நிகழ்வு முடிந்ததும் இரவு உணவு எல்லோரும் சேர்ந்து உண்டனர். சசியின் கணவர், கணவரின் அம்மா, அப்பா எல்லோரும் வந்திருந்தனர். கமலினிக்குச் சூழலுடன் ஒட்டவே இல்லை. அவ்வப்பொழுது ஃபோனில் மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பரிசோதித்துக்கொண்டே இருந்தாள், படபடப்பாக இருந்தாள். சசி அடிக்கடி, "என்னம்மா அன்யூஷுவலா இருக்க?" என்று கேட்டால், கமலினி "ஒன்றுமில்லை" என மறுத்தாள். எல்லோரையும் அனுப்பிவிட்டு சசி, கமலினியை வீட்டில் கொண்டு விடுகிறேன் என்றும், அவளுடன் ஓர் இரவு தங்கிவிட்டுச் செல்கிறேன் என்றும் சொல்லி வந்தாள். கமலினிக்குத் தான் ஏற்றுக் கொண்ட தனிமை பிடித்திருந்தது, அதில் அவளுடன் எப்பொழுதும் விமலன் மட்டுமே இருந்தான். வானத்தைப் பார்த்தால் நிலவின் வடிவழகில் அவன் தெரிந்தான். அன்றைய நாளில் எல்லாவற்றிற்குப் பின்னும் அவ்வளவு களைப்பாக இருந்தது. "ஏன் இந்த சசி இப்படித் தன்னைத் துன்புறுத்துகிறாள்?" என்று மனதில் நொந்து கொண்டாள்.

கமலினி இரவு உடைக்கு மாறியதும் சசி கேட்டாள்: "அம்மா, யாரும்மா அந்த விமலன்? அஞ்சு லட்சம் எவ்வளவுன்னு தெரியுமா உனக்கு?" என்று கேட்டதும் கமலினிக்கு நெஞ்சத்தில் இடி இடித்தது போல இருந்தது. "நீ... என்ன என்னோட கம்ப்யூட்டரை, ஈமெயிலைப் பார்த்தியா? ஹவ் டேர்!" கமலினி கதறினாள், அவள் குரல் நடுங்கியது. தன் இதயத்தில் போற்றி ரகசியமாய் வைத்திருந்த மலரின் இதழ்கள் அங்கே உதிர்ந்து காலின் கீழே ஆங்காங்கே கிடப்பதை உணர்ந்தாள். "அம்மா கிளம்பும்மா, இனி நீ ஒரு நாள் கூட இங்க இருக்கக்கூடாது. நான் மது கிட்ட பேசிக்கிறேன். உனக்குச் செல்லம் கொடுத்தது தப்பாப் போச்சு. அவனுக்கு என்ன வயசும்மா, அவன் யாரும்மா, அவன் எப்படி உன்னை மயக்கினான்?" என்று நூறு கேள்விகள் வரிசையாகக் கேட்டாள் சசி. கமலினி மயக்கம் போட்டு விழுந்து விடுவாள் போல இருந்தது. அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து ஜன்னல் வழியே தெரிந்த வானத்தையும், அதன் மத்தியில் எரிந்த பாதி நிலவையும் பார்த்தாள்.

எல்லாம் மாறியிருந்தது. சசியின் வீட்டில் ஒரு மூலையறையில் கமலினிக்கு அடைக்கலம் கொடுத்தனர். அவளுடைய மின்னஞ்சல் முடக்கப்பட்டது. அவளுடைய வங்கிக்கணக்கிலிருந்து சசி அறியாமல் அவள் எந்தப்பணமும் எடுக்கமுடியாது. வசந்திக்கும் சசி தெரிவித்து விட்டாள். "அவன் இப்ப எங்க இருக்கான்னே தெரியாது. இங்க அவனால அவன் குடும்பத்துலயும் பெரிய பிரச்சினை. அவனை உங்கூடத் தங்க அனுப்பியிருக்கக்கூடாது. ரொம்ப சாரி கமலினி" என்று வசந்தி வருந்தினாள்.

கமலினி தன் அறையின் ஜன்னல் கதவின் திரையை ஒதுக்கினால் வானம் தெரிந்தது. வெவ்வேறு நாளில் வெவ்வேறு நிலவு தெரிந்தது. விமலனின் வெவ்வேறு காதல் வெப்பம் தகித்தது. கமலினி எப்பொழுதும் அவனை வானத்திலேயே தேடிக்கொண்டிருந்தாள். அடுத்த வருடம் வந்தால் அவளுக்கு எண்பது வயது. செல்வாவைப் போல, விமலனைப் போல அவளை "அழகு" என்று சொல்லும் இன்னொரு நபரை அவள் அதற்குப் பிறகு சந்திக்கவே இல்லை.

- ரேவதி சுயம்புலிங்கம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.