தற்போது மாறிய வீட்டிலும்
வாங்கும் படியாயிற்று
புதிதாக இரண்டு புத்தக
அலமாரிகள்

இல்லாமல் போகும் காலத்தில்
எடுத்துக் கொள்ளக்கூடும்
எவரேனும்
தமக்குப் பிடித்ததை
வைத்துக்கொள்ள
அலமாரிகளை மட்டும்

வீடு மாறும் போதெல்லாம்
என்னால் தான்
சுமை அதிகம் என்றும்
இவ்வளவு புத்தகங்கள் எதற்கு
என்றும்
கோபமாக கேட்கிறார்கள்
பிள்ளைகள்

நான்
சொல்லிக் கொள்வதில்லை
அவர்களிடம்

இந்தப் புத்தகங்கள்தான்
பழைய குப்பைகள்
வலிந்து அடைக்கப்பட்டு
மூச்சு திணறிக் கொண்டிருந்த
என் அகத்தைச் சுத்தம்
செய்தவை என்று

முறிந்த எலும்புகளின்
வலியை நினைவிற்கொள்ளாது
இன்னும் வேகமாக
நடக்க வைத்தவை என்று

இருண்ட காலத்தில்
எழு கதிர்களாய்
ஒளி தந்தவை என்று

யாரும் செல்லாதப் பாதையில்
செல்கின்ற துணிவையும்
விடுதலையைப் பாடி
பறக்கவும் வைத்தவை என்று

கடும் பாலைத் தனிமையின்
நீரும் நிழலும் என்று

இந்தப் புத்தகங்கள்தான்
அடைபட்ட சூழலில்
வனத்தை அருவி ஒலியை
பறவைகளின் பாடலை
மனசுக்குள் இசைத்தவை என்று

வாழ்வின் கதையை
சொல்லித் தந்தவை என்று

இந்தப் புத்தகங்கள் தான்
இருட்டிய பொழுதுகளில்
மூத்திர சந்துகளில்
அச்சமின்றி நடக்க வைத்து
வீடு சேர்த்தவை என்று

என்னுடன் நின்று
கம்பீரமாக அவர்களை
வளர்க்க வைத்தவை என்று

மனிதர்களின்
இழிவான தந்திரங்களை
இனங்காண வைத்து
உண்மையை அன்பை
உணர்த்தியவை என்று

இந்தப் புத்தகங்கள்தான்
வாழ்வை
வண்ணங்களாக்கும்
எண்ணங்களின்
தீராக் கொண்டாட்டமென்பதை
நான்
சொல்லிக் கொள்வதில்லை
அவர்களிடம்.

***

கொஞ்சம் புன்னகைக்கலாமே..

உங்களிடம்
உயர்பதவியும் அதிகாரமும்
இருக்கின்ற போதே
கையேந்துபவர்களுக்கும்
கருணை புரியுங்கள்.

உங்களின்
அரியப் பொழுதுகளை
பெருமைக்கு விருந்துவைத்தே
வீணடித்து விடாதீர்கள்
பசித்தவர்களுக்கும்
பரிவு காட்டுங்கள்.

குறைந்தபட்சம்
அவர்களிடம்
கனிவான சொற்களையேனும்
பேசப் பழகுங்கள்

அவர்களிடம் நீங்கள்
பேசி
மறந்துவிடும்
சொற்கள்
ஆயுளுக்கும் அவர்கள்
மனதிலிருப்பவை
என்பதை
மறவாதிருங்கள்

உங்களின்
பரிவுச் சொற்களால்
ஒருவரின் பெருந்துன்பம்
தீருமெனில்
தயங்காது அச்சொற்களை
உடனே உபயோகப்படுத்துங்கள்

எதிர்க்க வலுவற்ற
சாமானியர்களை மட்டும்
விதிகள் சான்றுகளென
விரட்டிக் கொண்டே
இருக்காதீர்கள்
உண்மைகளுக்கும்
அநாதரவிற்கும்
பெரும்பாலும் சான்றுகள்
இருப்பதில்லை
கிடைப்பதுமில்லை

மனமில்லையெனில்
சூசகமாகவேனும்
சொல்லிவிடுங்கள்
நம்பிக் காத்திருந்து
ஏமாறும் வலி
எதனினும்
கொடிய வலியென்பதை
எப்போதாவதுண்ணும்
உணர்ந்திருப்பீர் நீங்களும்

கரங்களையும் மனதையும்
கட்டிவைத்துக்கொள்வதே
நேர்மை எனக் கருதி
ஒன்றுமே செய்யாமல்
ஓய்வு பெற்று விடாதீர்கள்.

இயலாதவர்களின்
கண்ணீர்த் துளிகளுக்கு
இளகியும் பழகுங்கள்.

தெரிந்திருந்தால்
சொல்லியிருந்தால்
கேட்டிருந்தால் எனப்
பின் உதிர்க்கும்
பாசாங்குச் சொற்கள்
உடனே வெளுத்து
உதிர்ந்து போகும்
வண்ணங்களென
உங்களுக்கா தெரியாது

கடைநிலையை ஓயாது
மிரட்டிக் கொண்டே இருக்கும்
பெருமிதம் இருக்கட்டும்

புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு
உதவும் துணிவு
உம்மிடம் உள்ளதா என
உங்களையும் நீங்கள்
பரிசோதித்துப் பாருங்கள்.

கூடவே
உம் காலடியில்
உலகென்ற
கர்வ கிரீடத்தை
எப்போதாவதுண்ணும்
கழட்டி வைத்து ..
அவ்வப்போது
கொஞ்சம்
புன்னகைக்கலாமே ...

- இளம்பிறை

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.