(குறிப்பு: புதுதில்லி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவு செப்டம்பர் 2022 இல் பேரா. ஜார்ஜ் எல் ஹார்ட் அவர்களின் 80-ஆம் பிறந்தநாளை ஒட்டி அன்னாரின் தமிழாய்வுப் பங்களிப்புகளை எடுத்துரைக்கும் இணையவழி உரைத்தொடர் ஒன்றை ஒருங்கிணைத்தது. அந்நிகழ்வில் பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் வழங்கிய ஏற்புரையின் தமிழ் வடிவமாக இக்கட்டுரை அமைகிறது.)

அனைவருக்கும் வணக்கம் (தமிழில்). தமிழைப் பற்றிப் பேசுகையில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று, தமிழ் பெரும்பான்மை வாய்ந்த உலக மொழிகளுள் ஒன்றாக விளங்குகிறது. பெரும்பான்மையான மக்களால் தமிழ் பேசப்படுகிறது. தோராயமாக பிரான்ஸில் வாழும் மக்களைக் காட்டிலும் அதிகமானோர் தமிழ் பேசுகின்றனர். ஆனால், யாரும் பிரஞ்சு பெரும்பான்மையான மொழி இல்லையா? எனும் வினா எழுப்புவதில்லை. உண்மைதான். இந்தியா உண்மையிலேயே மிகப்பெரிய நாடு. இது பரப்பளவில் வட அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இணைத்தாற் போன்ற பரப்பை உடையதாக அமைகிறது.

george heartமுதலில் நான் குறிப்பிட விரும்புவது யாதெனின், பெரிய இந்திய மொழிகளுக்குத் தர வேண்டிய முதன்மைத்துவத்தை நாம் தர மறுக்கிறோம். அடுத்து, தமிழுக்கு எது முதன்மைத்துவத்தைத் தருகிறது என்பதைக் காண்போம். 'தமிழின் தனிச் சிறப்பு என்ன? அதைப் பத்திக் கொஞ்சம் பேசலாம் (தமிழில்).' எனக்கு முன்பாகப் பேசிய ஸ்ரீநி (ஸ்ரீநிவாஸ் ரெட்டி) தெலுங்கு மொழியின் சிறப்புக் குறித்து எடுத்துரைத்தார். உண்மைதான். இது பிற இந்திய மொழிகளிலிருந்து மிக முரண்பட்டதாக அமைகிறது. ஏனெனில், பெரும்பாலான இந்திய மொழிகள் தெலுங்கைப் போலவே சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றனவாக அமைகின்றன. தெலுங்கு பெரும்பாலும் தானாகவே ஏறக்குறைய கி.பி. 1100 ஆண்டு வாக்கில் தனக்கான புலவர்களையும் படைப்புகளையும் கொண்டு உருவானது. இப்புள்ளியிலிருந்து நோக்கும்போது சமஸ்கிருதம் இக்காலத்தில் தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பொது மொழியாக இருந்தது. இம்மொழி கலந்துரையாடல் நோக்கத்திற்காவும், அதன் உயரிய மதிப்பிற்காகவும் பயன்படுத்தப்பட்டது. எனது நண்பரும் சிறந்த தெலுங்கு அறிஞருமான நாராயண ராவ், ஒருமுறை என்னிடம் 'ஒரு தெலுங்கு எழுத்தாளர் ஒருமுறை தெலுங்கில் எழுதினார். ஆனால், அது ஏற்கப்பட வேண்டுமாயின் அது சமஸ்கிருதத்தில் இடம்பெற வேண்டும். எனவே, அவர் அதைச் சமஸ்கிருதத்தில் எழுதி அது சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது எனச் சொல்ல வேண்டியதாயிற்று' எனக் கூறினார். இதுவே சமஸ்கிருதம் கொண்டிருந்த பெரும் தகுதிப்பாடு ஆகும்.

சமஸ்கிருதத்தின் இந்நிலை பல தவறான கருத்தாக்கங்களுக்கு வழி வகுத்துள்ளது. எனவே, தமிழின் தனிச்சிறப்புகளைப் பற்றிப் பேசுவதற்கு முன்னதாகச் சமஸ்கிருதம் பற்றிச் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில், இதையே நான் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பெரிய வெற்றி ஏதுமில்லாமல் செய்ய முயன்று வருகிறேன். சமஸ்கிருதம் படிக்கும் மக்கள் ஆங்கிலத்தில் நாம் குறிப்பிடும் (Tunnel vision) குறுகிய பார்வை உடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் சமஸ்கிருதத்தைத் தாண்டி வேறு எதையும் பார்ப்பதில்லை. சமஸ்கிருதமே ஆதி அந்தமாகக் கருதுகின்றனர், சமஸ்கிருத இலக்கிய மரபிற்கு வெளியே என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பதில்லை. இந்த எண்ணத்தைக் கொண்டிருப்பதற்குச் சமஸ்கிருதமும் அவர்களுக்கு உதவுகிறது. இது பற்றிச் சிந்திக்கும் ஒருவரால் சமஸ்கிருதம் போன்ற ஒரு மொழியை இவ்வாறாகப் பார்ப்பது பொருத்தமற்றது என்பதை நன்கு உணர முடியும்.

உண்மையில் சமஸ்கிருதம் என்பது என்ன? சமஸ்கிருதம் என்பது குறியீட்டு நிலையில் பிற மொழிகளோடு தொடர்புடைய ஒரு மொழி ஆகும். இது பிற மொழிகளிலிருந்து எடுத்துக் கொள்ளவும் செய்கிறது, கொடுக்கவும் செய்கிறது. இதற்கான சில சான்றுகளைத் தமிழ் குறித்துப் பார்த்த பின்னர் தருகிறேன். பிற வாய்மொழி மரபுகளையோ, பிற மொழி மரபுகளையோ அறிந்திராமல் சமஸ்கிருதத்தைப் படிப்பதென்பது சமஸ்கிருதம் என்றால் என்ன? என்பதற்கு மாறான ஒருபக்கச் சார்புத் தன்மையையும் முதன்மையளிக்கும் போக்கையும் தந்துவிடுகிறது. இது பயனற்ற ஒன்றாகும். உண்மையில், சமஸ்கிருதம் மிகச் சிறந்த பாரம்பரியத்தைக் கொண்ட மொழியாகும். எனினும், இது எப்போதும் பிற மொழிகளுடனான தொடர்பிலேயே இருந்து வருகிறது. சமஸ்கிருதத்தின் பெரும்பான்மையான இலக்கியங்கள் தென்னிந்தியாவில், திராவிட மொழி பேசுபவர்களால் எழுதப்பட்டனவே என்பது யாவரும் அறிந்ததே. சங்கராசோரியார் போன்றோர் சமஸ்கிருதத்தில் எழுதும்போது கூடத் தமிழில் இடம்பெறுவதைப் போன்ற இலக்கணத் தொடர்ச்சி அதில் இருப்பதைக் காணலாம்.

 சமஸ்கிருதம் பற்றிப் பேசும் ஏ.கே. ராமானுஜன், அவர் வளர்ந்து வந்த வழியின் அடிப்படையில் 'தமிழ் தாய்மொழி என்றால் சமஸ்கிருதம் தந்தை மொழி எனக் குறிப்பிடுவார்'. அவர் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர், கன்னடப் புலவர், கன்னடம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதுவார். ஆனால், அவர் தமிழும் பயிற்றியே வளர்க்கப்பட்டார். அவர் சங்க இலக்கியங்களை அணுகிய போது அது அவருக்கு வியப்பைத் தருவதாக இருந்தது.

இப்போது சமஸ்கிருதம் பற்றியும் அது பிற மொழிகளுடனும் கொண்டிருந்த உறவு பற்றி இன்னும் கொஞ்சம் பேசுவோம். அண்மையில் ஒரு புகழ்பெற்ற அறிஞர், சமஸ்கிருதம் ஒரு பரந்துபட்ட மொழி (cosmopolitan) எனும் அடிப்படையில் ஒரு புகழ்பெற்ற நூலை எழுதியுள்ளார். அதில் அவர் தமிழ் பற்றியும் எழுதியுள்ளார். அது கண்டு நான் பெரிதும் வருத்தமுற்றேன். தமிழ் என்றால் என்னவென்று தெரியாமல் அவர் அவ்வாறு எழுதியுள்ளார். அவருக்கு மறுமொழியாகத் தாங்கள் 'தமிழ் வேற்றுக்கிரகமான செவ்வாயில்தான் பேசப்பட்டது எனும் தொனியில் எழுதியுள்ளீர்கள்' என வருத்தத்துடன் குறிப்பிட்டேன். அதற்கு அவர் 'தமிழ் செவ்வாய் கிரகத்தில் பேசப்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை' எனப் பதிலளித்தார். அத்துடன் என்னைச் சற்றுத் தவிர்க்கவும் தொடங்கிவிட்டார். எனினும், அவர் மிகச் சிறந்த அறிஞர் எனவே, இங்கு அவரைப் பற்றி ஏதும் தவறாகக் குறிப்பிட விரும்பவில்லை. அவரது பார்வை முற்றிலும் சமஸ்கிருதத்தைச் சார்ந்தே அமைகிறது. சமஸ்கிருதமே யாவற்றுக்கும் ஆதி அந்தம் எனக் கருதுகிறார். ஸ்ரீநி அது அவ்வாறல்ல என்பதைக் குறிப்பிட்டார். எனவே, சமஸ்கிருதம் படிப்பவர்கள் சமஸ்கிருதம் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ளப் பிற மொழிகளையும் அதன் மரபுகளையும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இது அரிதாகவே நடக்கிறது.

இனி, தமிழுக்கு வருவோம். பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழ் எவ்வாறாக வேறுபட்டு அமைகிறது? நமக்கு, பிற இந்திய மொழிகள் சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் எவ்வாறாகத் தோற்றம் பெற்றன என்பது பற்றியும் அம்மொழிகள் எழுதப்பட மிகுதியான சமஸ்கிருதக் கலப்புத் தேவைப்படுகிறது என்பது பற்றியும் ஓரளவு விளக்கப்பட்டுள்ளது. தமிழ் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவான மொழி. இதற்கு முன்னதாகவும் இருக்கலாம். தமிழ் உருவான காலத்தில், சமஸ்கிருதம் தெற்கு, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளின் பொதுமொழியாக இருக்கவில்லை. பின்னாளில் அது அடைந்த பிரம்மாண்ட நிலையை அப்போது அடைந்திருக்கவில்லை. பெரும்பாலும் குப்தர்களின் காலத்திலேயே அது அந்நிலையை அடைந்தது.

அப்போது, தமிழ் எங்கிருந்து வந்தது? இது குறித்து அறிய வேண்டுமாயின் திராவிட உறவுமுறை அமைப்பு என்பதிலிருந்து ஆராய வேண்டியுள்ளது. திராவிட உறவுமுறை (Dravidian Kinship) குறித்து ட்ராட்மன் தனது நூலில் எழுதியுள்ளார். திராவிட உறவுமுறை என்பது முறைமக்கள்வழித் திருமண முறையை அடிப்படையாகக் கொண்டதாக அமைகிறது. இம்முறை திராவிடம் பேசும் தென்னிந்தியா முழுவதும் பரவியுள்ளது. இது மகாராஷ்டிரம், குஜராத் பகுதிகளிலும் இடம்பெறுகிறது என நினைக்கிறேன். இது பெங்கால் வரை இடம்பெறாது என நினைக்கிறேன் எனினும், ஒரிசாவில் இடம்பெறலாம். எவ்வாறா யினும், இத்தகைய உறவுமுறை அமைப்பு நமக்குச் சுட்டுவது என்ன? இது நடைமுறையிலிருந்த பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பண்பாடு தனித்து விளங்கியதைச் சுட்டுகிறது. இப்பண்பாடே தக்காணியப் பண்பாடு என்பதாகும்.

 இப்பண்பாடு தக்காணம் முழுவதும் பரவியிருந்தது. வடக்கே, மக்கள் பிராகிருத மொழி பேசத் துவங்கும் வரையிலும் இம்மக்கள் திராவிட மொழி பேசுபவர்களாக விளங்கினர். தற்போது நடைபெறும் கீழடி முதலான தொல்லியல் ஆய்வுகளைக் காணும்போது தென்னிந்தியாவின் குறிப்பாகத் தமிழின் பண்பாடு காலத்தால் மூத்தது என்பதை அறிய முடிகிறது. அத்தோடு, வட தென்னிந்தியாவிற்கு இடையே பெரியளவிலான வர்த்தகப் பரிமாற்றம் இருந்துள்ளதாகத் தெரிகிறது. எனவே, மிகத் துவக்கத்திலேயே வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையேயான இணைப்பு இருந்துள்ளமை தெளிவாகிறது. தக்காணப் பண்பாட்டில் குறிப்பிடத்தக்க ஒன்றாக வாய்மொழி இலக்கியங்களையும் தமிழ்ப் பாணர்களையும் குறிப்பிடலாம். இவர்கள் இலக்கியத்தைப் பரப்பவும் வளர்த்தெடுக்கவும் மன்னர்களைப் புகழவும் பயன்படுத்தப்பட்டனர். உண்மையில் தமிழ் இலக்கிய மரபு சமஸ்கிருத மரபிலிருந்து உருவாகவில்லை. அது இத்தாக்கணிய வாய்மொழி இலக்கிய மரபிலிருந்து உருவானது.

 சங்க காலப் பெருந் தமிழ்ப்புலவர்கள் இவ்விலக்கியங்களைப் பயன்படுத்தினர், குறிப்பாக இவற்றை நகல் செய்தனர். இவர்கள் நகல் செய்துள்ளமையை நம்மால் காண முடிகிறது. சிலர், இவை வாய்மொழிப் பாணர்களின் சொந்த மொழி எனவும் கருதுகின்றனர். அது அவ்வாறு இருக்க முடியாது என நான் கருதுகிறேன். எவ்வாறாயினும், இப் பெரும்இலக்கிய மரபின் தோற்றம் தக்காண இலக்கிய மரபிலிருந்து உருவானது என்பது தெளிவாகிறது. இம் மிகுமுதன்மை தமிழுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் உரித்தானதாக அமைகிறது. நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்களை, அதாவது சங்க இலக்கியங்களைக் காணும்போது (சங்கம் என்பதே குறிப்பிட்டளவு புராணம் சார்ந்ததாக அமைகிறது. எவ்வாறாயினும், அவ்வாறே குறிப்பிட வேண்டியுள்ளது) இதில் காணப்படும் செய்திகள் சமஸ்கிருதத்திலோ, சமஸ்கிருதத்தை அடியொற்றி உருவான வேறெந்த இலக்கியங்களிலோ காண முடியாதனவாக அமைகின்றன. புறநானூறு போன்ற தனித்த இலக்கிய வடிவத்தை வேறெந்த இந்திய இலக்கிய மரபுகளிலும் எனக்குத் தெரிந்தவரையில் காண முடியவில்லை. ராஜஸ்தானில் காணப்படும் இதையொத்த வாய்மொழி மரபுகளில் சில ஒற்றுமைக் கூறுகள் இடம்பெறலாம். அவையும் ஒருவேளை தக்காணியப் பண்பாட்டிலிருந்து உருவானவையாக இருக்கலாம்.

 அடுத்து மிகச் சிறந்த காதற்பாடல்களான சங்க அகப் பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவையும் சமஸ்கிருதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டனவாக அமைகின்றன. உண்மையில், சமஸ்கிருதப் பாடல்களில் பல்வேறு கருத்தாக்கங்களும், பழைய கவிதையியல் உத்திகளும் வடக்கிலிருந்து நுழைந்திருக்கவில்லை மாறாகத் தெற்கிலிருந்த தக்காண மரபிலிருந்தே நுழைந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. இது குறித்து எனது நூலில் எழுதியுள்ளேன். கருத்தாக்கங்களான மழைக்காலத்தில் காதலர்கள் பிரிந்திருத்தல் (ஸ்ரீநி குறிப்பிட்ட மேகதூதம் சமஸ்கிருத மேகசந்தேசம். ஸ்ரீநி மேகசந்தேசத்தைச் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்) முதலியன முற்றிலும் வளர்ந்தனவாக சமஸ்கிருதத்தில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டளவில் தோற்றம் பெறுகின்றன. ஆனால், தமிழில் இதற்கு முன்னதாகவே கிடைக்கின்றன. ஏனெனில், தமிழிலக்கியங்கள் தக்காண வாய்மொழி இலக்கியத்திலிருந்து நேரடியாகத் தோற்றம் பெற்றனவாக அமைகின்றன. இவ்வாறான சங்க இலக்கியப் பாடல்கள் சாதாரண வாய்மொழிப் பாடல்களாக அமைந்திருந்தால், தமிழ் இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்கள் எனக் கூறுவதில் சற்றுத் தயங்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல. சங்கப் பாடல்கள் இதுவரை எழுதப் பெற்றனவற்றிலேயே மிகச் சிறந்த பாடல்களைக் கொண்டனவாக அமைகின்றன. அதுமட்டுமல்லாமல் இலக்கியத்தை மனித உணர்வுகளோடு பொருத்திக் காட்டுவனவாக அமைகின்றன. இத்தகைய இலக்கியங்களை நான் உலக இலக்கியங்கள் யாவற்றிலும் காணவில்லை. சங்க இலக்கியங்கள் அவையே உள்ளும் புறமுமாக அமைந்து தமிழைச் சிறந்த செவ்வியல் மொழியாக ஆக்குகின்றன.

 அடுத்து சங்க இலக்கியங்கள் ஏனைய இந்தியாவிற்கு எவ்வாறு முதன்மை வாய்ந்தனவாக அமைகின்றன? சமஸ்கிருதம் தனது கவிதையியல் கூறுகளைத் தமிழிலிருந்து நேரடியாகக் கடனாகப் பெறாமல், தெற்கிலிருந்த இந்த வாய்மொழி இலக்கிய மரபிலிருந்து பெற்றிருக்கலாம் எனும் வினாவும் முன்வைக்கப்படுகிறது. அதேநேரம், நாட்டிய சாஸ்திரமும் உறுதியாக இதே மரபிலிருந்து உருப்பெற்றதாக அமைகிறது.

 தொடர்ந்து தமிழும் இந்திய மரபின் நேரடித் தாக்கத்தைப் பெற்றுள்ளது. வெகுசிலரே இதை உணர்வர். இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக, (மறந்துவிட்டேன்). இவ்விடத்தில் எனது மனைவி கௌசல்யா குறித்தும் குறிப்பிட விரும்புகிறேன். அவர் மதுரைத்திட்டத்தோடு இணைந்து பல்வேறு முதன்மையான மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்துள்ளார். திவ்யபிரபந்தம் முழுமையையும் மொழிபெயர்த்துள்ளார். மணிமேகலையையும், இன்னும் பிறவற்றையும் கூட மொழிபெயர்த்துள்ளார். இவ்வகையில் அவர் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளாகவே கருதுகிறேன்.

 அடுத்ததாக ஆழ்வார்கள் குறித்துக் குறிப்பிட விரும்புகிறேன். இவர்கள் வடக்குத் தெற்கு ஆகிய இரண்டையும் அறிந்தவர்களாக அமைகின்றனர். இவர்கள் சங்க இலக்கியத்தை அறிந்தவர்களாகப் பல்வேறு சங்க இலக்கியக் கருத்தாக்கங்களையும் உத்திகளையும் நேரடியாகப் பயன்படுத்தியுள்ளனர். அதேநேரம், இவற்றோடு சமஸ்கிருத மரபுகளான உபநிடதங்கள், கீதை, வேதங்கள் முதலானவற்றின் கருத்துக்களையும் சேர்த்துள்ளனர். ஆழ்வார்களின் பாடல்களில் ஒருவகைக் கலப்புத்தன்மை இருப்பதைக் காண முடிகிறது. ஆழ்வார்களைத் தொடர்ந்து, தமிழ்ப் பரப்பில் பாகவத புராணமும் சேர்த்தே பார்க்கப்படுகிறது. பாகவத புராணமும் அதன் கருத்துநிலையில் ஆழ்வார்களையும் சமஸ்கிருத மரபுகளையும் உள்ளடக்கியதாக அமைகிறது. இது பற்றிய தகவல்களை ஹார்டியின் நூல் நன்கு விளக்குகிறது.

 தொடர்ந்து பக்தி, குறிப்பாக வைணவப் பக்தி வடக்கில் பரவியது. குறிப்பாகத் தெலுங்கில் கிருஷ்ணதேவராயரின் ஆமுக்தமால்யதா வழியாக நுழைந்தது. அடுத்து அது வட இந்தியா முழுவதும் பரவியது. எனவே, சங்க இலக்கியங்களும் ஆழ்வார்களும் இல்லாமல் துளசிதாசரோ, சைத்தன்யாவோ அல்லது வட இந்தியாவின் எந்தவொரு பெரும்பக்தரோ, அவர்கள் எழுதிய பெரும் இலக்கியங்களோ உருவாகியிருக்க முடியாது என்று கூறலாம் என நினைக்கிறேன்.

 எனவே இவை, தமிழிலக்கியங்கள் ஏனைய இந்தியப் பரப்பிற்கு எவ்வளவு முதன்மையானவை என்பதை விளக்குவனவாக அமைகின்றன. இந்தியப் பண்பாட்டின் மையக் கூறுகளாக அமையும் பலவற்றிற்கு இவை அடிப்படையாக அமைகின்றன. எனினும், இது பெரியளவினதாகப் போற்றப்படுவதில்லை.

 இறுதியாக மற்றுமொரு கருத்தாக்கம் குறித்தும் குறிப்பிட விரும்புகிறேன். நம் அனைவரும் தமிழின் முதன்மையையும், அதன் மையத் தன்மையையும் அறிந்து வைத்துள்ளோம். தமிழ்ச் செவ்விலக்கியங்கள் குறித்து அறிந்துள்ளோம். இதன் பெரும்பாலான படைப்புகள், பாடல்களின் மிகச்சிறந்த இலக்கியத் தன்மை குறித்து அறிந்துள்ளோம். எனினும், இவ்வாறாகப் பின்நோக்கிய பார்ப்பதும் சிக்கலுக்குரியதாக அமைகிறது.

 நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போன்று தமிழ் மாபெரும் மொழியாகும். இது சிறிய மொழியன்று. ஊடகங்களின் வழி நீங்கள் நோக்கினால் தமிழ் மலேசியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளிலும் 60, 70 மில்லியன் இந்திய மக்களாலும் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். தமிழ் அசைவியக்கமுள்ள (Dynamic) மொழியாகும். இது மாற்றமடைகிறது, வளர்கிறது. ஏராளமான மக்கள் எல்லாக் காலங்களிலும் தமிழ் படித்து வருகின்றனர். ஏராளமான இலக்கியங்கள் எழுதப்படுகின்றன.

திரைப்படங்கள், தொலைக்காட்சி, பொழுபோக்கு முதலிய யாவற்றுக்கும் பயன்படுவதாக அமைகிறது.

 இங்கு நாம் சிந்திக்க வேண்டியது யாதெனின், நாம் பழைய தமிழ் மரபை மட்டும் பார்க்காமல் தமிழின் எதிர்காலம் குறித்தும் ஆராய வேண்டியுள்ளது. எனவே, நாம் தமிழின் செவ்வியல் இலக்கியங்களை மட்டும் படிக்காமல் அதன் நவீன இலக்கியங்களையும் படிக்க வேண்டியுள்ளது.

 தற்காலத்தில் மக்கள் என்ன எழுதுகிறார்கள்? ஏன் எழுதுகிறார்கள்? எவ்வகை மக்கள் தலித் தமிழை எழுதுகிறார்கள்? யார் இசுலாமியத் தமிழை எழுதுகிறார்கள்? எவ்வகைத் தமிழில் அவர்கள் எழுதுகிறார்கள் என்பதை நோக்க வேண்டியுள்ளது. இசுலாமியம் பற்றிய தமிழிலக்கியங்கள் பெரிதும் வளர்ந்துள்ளன. இவை கவனத்தில் கொள்ளத் தக்கனவாகவும் பெரும்பாலான மக்கள் அறிந்திராதனவாகவும் அமைகின்றன.

 எனவே, தமிழின் எதிர்காலம் பற்றிக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மக்கள் நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள், முதலியவற்றைப் படிக்க வேண்டும். அவர்கள், ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் என்ன எழுதப்பட்டன என்பதைப் படிக்க வேண்டிய அதேநேரத்தில், தற்காலத்தில் என்ன எழுதப்படுகின்றன என்பதையும் படிக்க வேண்டியவர்களாகின்றனர். இதுவே, ஒரு மொழியின் எதிர்காலத்திற்குத் தேவையானதாகிறது. ஒவ்வொரு மொழியும் அதில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வதற்கு அறிஞர்களையும், திறனாய்வாளர்களையும் கொண்டிருப்பது அவசியமாகிறது.

 இவ்வகையில், தமிழில் இடம்பெறும் ஒரு சிக்கலாக இது பல்வேறு வகைகளையும் வடிவங்களையும் கொண்டுள்ளது. செவ்வியல் தமிழைத் தவிர்த்து மக்கள் வட்டாரத் தமிழில், வழக்குத் தமிழில் எழுதுகின்றனர். எனது மாணவர்கள் தமிழ் நாவல்களில் இடம்பெரும் வட்டார வழக்குகளை ஆராய்ந்துள்ளனர். இவையாவுமே அறிவுப் புலத்தில் மிகுந்த முதன்மையுடையன ஆகின்றன.

 நானும் கௌசல்யாவும் பெர்க்லியில் தமிழ்ப் பயிற்றுவித்த வகையில், காலம் செல்லச் செல்ல நிறைய மக்கள் நவீனத் தமிழில் எழுதுவதைக் கற்றுக் கொள்ள விரும்பினர். நாவல்கள், சிறுகதைகள், வட்டார நாவல்கள் ஆகியவற்றைப் படிக்க விரும்பினர். தமிழ் பல்வேறு வட்டார வழக்குகளில் எழுதப்படுவது பற்றியும் தலித் எழுத்தாளர்கள் பற்றியும் அறிய விரும்பினர். செவ்வியல் இலக்கியங்களைக் காட்டிலும் நவீன இலக்கியங்களை அறிந்து கொள்ளவே மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.

 எனவே, தமிழின் எதிர்கால ஆய்வுகள் குறித்துச் சிந்திக்கும்போது, மக்கள் செவ்வியல் தமிழை எவ்வாறு அணுகப் போகிறார்கள்? அணுகுவதற்கான வழிமுறைகள் என்ன? அணுக வைப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது. இவ்விலக்கியங்களை பிறமொழி இலக்கியங்களோடு ஒப்பிட்டு, இவ்விலக்கியங்களுக்கு இடையேயான உறவு எவ்வாறு உள்ளது என்பதைக் காண வேண்டியுள்ளது. அதேநேரம் இவற்றிற்குச் சமமாக நவீனத் தமிழும் ஆராயப்பட வேண்டியுள்ளது.

 இதுவே, தேவையானதாகும். ஏனெனில், இவ்வுலகிற்குத் தமிழின் தேவை பெரும்பாலான மக்கள் உணர்ந்திருப்பதைக் காட்டிலும் மிகுதியானதாகும். இது இந்தியாவைக் கடந்து இவ்வளவு பெரிய பரப்பில் பரவியுள்ளது என்பது தமிழின் எதிர்காலத்திற்கு மிக முதன்மையானதாகும்.

 எங்களுக்கு மலேசியாவில் ஒரு நண்பர் உள்ளார். அவரின் தமிழ் இந்தியாவில் உள்ளோரின் தமிழைப் போலவே, சிறப்பாக இருக்கும். இது, தமிழ் உலகம் முழுவதும் பரவி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என வியப்பை உண்டாக்குவதாக அமைகிறது.

 இத்தோடு நான் எனது உரையை முடிக்க விரும்புகிறேன். நாம் தமிழின் பழமையை நோக்கினால் அது மறுக்க முடியாத வகையில் வளமானதாகவும் சிறப்பானதாகவும் அமைகிறது. அதேநேரம் நாம் அதன் எதிர்காலம் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள் ஆகின்றோம். மாறும் இவ்வுலகில் தமிழும் எவ்வாறு மாறுகிறது என்பதையும் இது இம்மொழிக்கு என்ன சொல்ல விரும்புகிறது என்பதையும் நாம் படிக்க வேண்டியவர்கள் ஆகின்றோம். நன்றி, வணக்கம் (தமிழில்).

 எனது பிறந்தநாள் விழாவிற்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. எனக்கு 80 வயதாகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனினும், என்னிடம் பிறப்புச் சான்றிதழ் உள்ளது. அது அவ்வாறாகவே சொல்கிறது. அது உண்மையானதாக இருக்குமென்றே நான் நம்புகிறேன். மிக மிகச் சிறப்பான இந்நிகழ்வை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி. தனியாகப் பேரா. அறவேந்தன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

அத்தோடு எனது சிறப்பான நன்றியை கமலக்கண்ணனுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். தனது கடின உழைப்பால் எனது நூலை மொழிபெயர்த்துள்ளார். என்னிடம் நூல் உள்ளது. பாதியளவு படித்துள்ளேன். நன்றி கமலக்கண்ணன். தங்களின் உழைப்பைப் பாராட்டுகிறேன்.

அனைவருக்கும் நன்றி.

வணக்கம்.

(பேரா. ஜார்ஜ் எல் ஹார்ட் அவர்களின் உரை (28.09.2022))

தமிழாக்கம்: பு. கமலக்கண்ணன்