கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தைப் பார்க்க முடிந்த இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அருகிலுள்ள திருவள்ளுவர் சிலையைப் பார்க்க முடியாதா?..

கடந்த மார்ச்சு 18 அன்று இந்திய அரசின் குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு வந்து விவேகானந்தர் பாறை மண்டபத்தைச் சுற்றிப் பார்த்ததுடன், அந்த மண்டபத்தைச் சூழ்ச்சியாகக் கட்டிய ஆர் எஸ் எஸ் வெறியர் இராணடேவைப் புகழ்ந்தும் பேசியுள்ளார்.. மண்டபத்தில் உட்கார்ந்து 'தியானமும்' செய்திருக்கிறார்..

1962 இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் விவேகானந்தர் கேந்திரம் ஒன்றை நிறுவுவதன் வழி ஆர் எஸ் எஸ் இயக்கத்தைக் காலூன்றி வளர்க்கலாம் என்னும் திட்டத்தில் இருந்த இராணடே என்கிற சித்பவன் பிராமணருக்கு வேலை திட்டத்தைக் கொடுத்தது ஆர் எஸ் எஸ்..president visit to kanyakumariவிவேகானந்தா கேந்திரம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு முன்பு வரை கன்னியாகுமரி முனையின் பெரும்பாறையில் மீன்கள் உலர்த்தி வந்த மீனவர்கள், கிறித்துமசு நாளில் மிகப் பெரும் விழாவை அங்கு நடத்தி வந்தனர்.. அதை எப்படியாவது நிறுத்தி அந்தப் பாறையில்தான் கிறித்துமசு நாளன்று விவேகானந்தர் தியானம் செய்ததாகச் சொல்லி விவேகானந்தர் மண்டபம் கட்ட வேண்டும் எனும் ஆர் எஸ் எஸ் அழுத்தத்தை அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மறுத்திடவே இந்தியத் தலைமை அமைச்சர் இலால்பகதூர் சாஸ்திரியின் ஒப்புதலோடு வங்காள, கேரளா உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெற்று சூழ்ச்சியோடு அந்த மண்டபத்தை அங்கு நிறுவிக் கொண்டனர்.

வங்காளத்திலோ அல்லது கேரளத்திலோ திருவள்ளுவருக்கோ அல்லது வள்ளலாருக்கோ முதன்மையான இடத்தில் ஒரு மண்டபத்தை இங்குள்ள அமைப்புகள் கட்டி எழுப்பி விட முடியுமா?

தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஏமாற்றித் தமிழ்நாட்டில் விவேகானந்தர் பெயரிலும், அரவிந்தர் பெயரிலும் மண்டபங்கள் கட்டுவதும், அதை இந்திய அதிகார வகுப்பினர் வந்து வேடிக்கை பார்ப்பதுமான நடைமுறை தமிழர்களை ஏமாளிகள் என்கிற அளவில் அல்லவா உருவாக்கி வைத்திருக்கிறது.. கன்னியாகுமரிக்கு வந்த குடியரசுத் தலைவரால் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய முடிகிறது.. ஆனால், அதற்கு அருகில் உள்ள தமிழர்களின் அறவழிநெறியர் திருவள்ளுவர் சிலைக்குச் சென்று பார்க்காமல், பேராசான் குறித்துக் கருத்து கூறாமல் போவது பேராசானை, தமிழர்களை இழிவு படுத்துவதாகாதா?..

தமிழ்நாட்டிற்குள் வந்தேறியாக நுழைந்த இராணடே தமிழர்களின் மெய்யியல் பேராசானை மறைக்கும் நோக்கில் விவேகானந்தரைத் திட்டமிட்டுத் திணித்ததை எதிர்த்துப் போராடாமல் தமிழ் நிலத்தை விட்டுக் கொடுத்ததால் வந்த விளைவுகளல்லவா இவையெல்லாம்..

தமிழ்நாட்டு மெய்யியல் பேராசானை மதிக்காதவர்களைத் தமிழர்கள் ஏன் மதிக்க வேண்டும்?

- என்று கேள்வி எழுப்புகிற உணர்ச்சி தமிழர்கள் இடையே வருவது எப்போது?

- பொழிலன்

Pin It