தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்வதால் தொடர்ந்து மிகப்பெரிய இன்னல்களைத் தமிழக மக்கள் சந்தித்து வருகிறார்கள் என்பதோடு விரைவில் தென்தமிழகம் பாலைவனமாகும் சூழல் உருவாகி இருக்கிறது.

அண்டை மாநிலங்களுக்கு அதிகப்படியான கனிம வளங்களைக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மட்டுமன்றி அதன் வழி மிகுதியான வருவாய்க்காகவும் சக்தி வாய்ந்த வெடிபொருட்களைப் பயன்படுத்திக் கல் சுரங்கம் (குவாரி) உரிமையாளர்கள் பாறைகளை வெட்டி எடுக்கிறார்கள்.

மேலும் வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு ஆழம் தோண்டுகிறார்கள். இதனால் அக்கம்பக்கத்தில் உள்ள வேளாண்மை பாதிக்கப்பட்டு உழவர்கள் தங்கள் நிலத்தைக் குவாரி உரிமையாளர்களிடம் அடிமட்ட விலைக்கு விற்று விட்டுப் போகக்கூடிய நிலை தென்காசி, திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் தற்சமயம் நடைபெற்று வருகிறது.

அதிக அளவு ஆழம் தோண்டப்பட்டு வருவதால் விரைவில் நிலநடுக்கம் கூட வர வாய்ப்பு இருக்கிறது என்று உழவர்களும் கல்குவாரி இருக்கும் பகுதியில் வாழும் மக்களும் வேதனை அடைகிறார்கள்.lorriesஉள்ளூருக்குக் கல் குவாரி தேவைதான்.. ஆனால் அண்டை மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய சூழல் வரும்பொழுதுதான் அங்கு தவறு நடக்கிறது. எனவே தான் அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம்.

தற்சமயம் தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாகக் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 600 ஐத் தாண்டி உள்ளது என்பது வேதனையான சம்பவம். விரைவில் இது இரண்டாயிரத்தைத் தொடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இது நீடித்தால் என்னவாகும் என்பதை மக்கள் சிந்தித்தாக வேண்டும்.

ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு மக்களின் எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லை என்பதே உண்மை. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசு அதிகாரிகள் கோடிகளில் புரளுகிறார்கள். நாளும் சாலையில் செல்லும் கனிமவள வண்டிகளைப் பார்த்து மக்கள் வயிற்றெரிச்சலுடன் தங்கள் வயிற்றில் அடித்துக் கொள்கிறார்கள். இதனால் மக்கள் அரசின் மீது கடும் சினத்தில் உள்ளனர் . மக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதற்குத் தக்க விடை கொடுக்கலாம் ஆனால் அதுவும் தீர்வாகிவிட முடியாது.

ஆறு மாதத்திற்கு முன்னதாக ஒரு நாளைக்கு 200 வண்டிகள் தென்காசி மாவட்டம் புளியரை ஆய்வுச்சாவடி வழியாகச் சென்று கொண்டிருந்தது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 600 வண்டிகள் வரை செல்வதாகச் சொல்லப்படுகிறது.

அதுவும் போலியாக எடைச் சீட்டு உருவாக்கிக் கொண்டு அதிக எடைகளை ஏற்றிக்கொண்டு கேரளாவிற்குள் நுழைகிறது. இந்தக் கனிமவளக் கடத்தல் கும்பல் எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள் என்பதற்குப் போலி எடைச் சீட்டு

ஒரு சான்று.

6சக்கர வண்டியில் 18.5 கல்லெடை(டன்)

10 சக்கர வண்டியில் 28 கல்லெடை

12 சக்கர வண்டியில் 35 கல்லெடை

14 சக்கர வண்டியில் 42 கல்லெடை இதில் 5 விழுக்காடு தார்ப்பாய் மற்றும் டீசல் அளவுகளுக்காக அதிக எடை ஏற்றுக் கொள்ளலாம். இதுதான் வரையறை. ஆனால் இதைக் கனிம வளங்கள் கொண்டு செல்லும் வண்டிகள் கடைபிடிப்பதில்லை. அதிக எடை ஏற்றினால் மட்டுமே அவர்களுக்கு அதிக ஊதியம் என்பதால் எதையும் செய்ய துணிகிறார்கள்.

மலை வளமிக்க கேரளா தன்னுடைய இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாக்கிறது. அந்த நாட்டிலிருந்து ஒரு கைப்பிடி கனிம வளத்தைத் தமிழ்நாட்டிற்குள் கொண்டுவர முடியாது.

ஆனால் தமிழ்நாட்டில் அனைத்து எல்லைகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான வண்டிகளில் நாளும் கனிம வளங்கள் கேரளாவுக்குள் கொண்டு செல்லப்படுகின்றன. எதிர் வரும் நம்முடைய தலைமுறையினருக்குக் கனிம வளங்கள் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் இருந்து வரும் நிலையில் இப்பொழுதே நமக்குக் கனிம வளங்கள் தட்டுப்பாடாகி விட்டது. நினைத்த நேரத்தில் வீடு கட்டுவதற்குக் கனிம வளங்கள் வாங்க முடியவில்லை. இதை ஆளும் அரசு கண்டு கொள்வதும் இல்லை.

இதற்காகத் தொடர்ந்து போராடிவரும் எங்கள் இயற்கை வளப் பாதுகாப்புச் சங்கத்தைப் போராட விடாமல் அரசு தடுக்கிறது நாங்கள் போராட்டத்திற்கு இசைவு கேட்டால் மறுக்கிறது. எங்கள் சங்க உறுப்பினர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்கிறது. இதையெல்லாம் தாண்டி தான் கனிமவளக் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறோம்

எதிர்காலத் தலைமுறையினர்களையும் வேளாண்மையையும் கருத்தில் கொண்டு அரசு அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்வதை நிலையாகத் தடை செய்ய வேண்டும் என்பதே எங்களது தொடர்ச்சியான கோரிக்கை.

- ஜமீன், இயற்கை வளப் பாதுகாப்புச் சங்கம்

Pin It