இயக்குநர் மாரி செல்வராஜின் மூன்றாவது திரைப்படம்... அண்மைக் காலமாகச் சாதிய ஆணவப் போக்குகளைக் கண்டிக்கும் வகையில் பல திரைப்படங்கள் வெளிவருகின்றன. அவற்றில் அரசியலில் சமூக நீதிப் பேசுகிறது மாமன்னன். படத்தில் மாமன்னனாக வடிவேலும், அவர் மகன் அதிவீரனாக உதயநிதியும், திரை நாயகி லீலாவாக கீர்த்தி சுரேசும், வில்லன் இரத்தினவேலாக, மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்...

சமூக நீதிப் பேசும் தேர்தல் அரசியல் கட்சிகளுக்குள்ளும் சாதி தீண்டாமை ஆழமாக வேர் விட்டுள்ளது என்பதே மாமன்னன் பேசும் அரசியல். மொத்தத்தில் மாமன்னன் பேசவந்த அரசியலும், பேசிய முறையும் கவனத்திற்குரியது.

ஊர்க் கோவில் குளத்தில் குளித்ததற்காகத் தனது நான்கு நண்பர்கள், தன்னுடைய கண் முன்னாலே கல்லால் அடித்துக் கொல்லப்பட்டதை அறிந்தும், தனது தந்தை, சொந்தக் கட்சி நலனுக்காக, ஊரின் ஆதிக்கச் சாதியினரின் பேச்சைக் கேட்டு, அந்தப் பிரச்சனைக்கு அமைதி காக்கிறார். இதை அறிந்த அதிவீரன் 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது தந்தையுடன் பேசுவதைக் கூட நிறுத்தி விடுகிறார். சாதி பலத்துக்காகவே ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளராகப் பதவி பெற்றிருப்பவர் இரத்தினவேல். மாமன்னனும் அதிவீரனும், இரத்தினவேலைச் சந்திக்கும் சூழலில், அதிவீரனை மட்டும் உட்காரச் சொல்கிறார் இரத்தினவேல். அதிவீரன் தனது தந்தையை உட்காரச் சொல்கிறார், எங்கள் முன்னால் உனது தந்தை உட்கார மாட்டார் என இரத்தினவேல் கூறியதும், வலுக்கட்டாயமாகத் தனது தந்தையை உட்கார வைக்கிறார் அதிவீரன். அதனால் இருவருக்கும் கைகலப்பு மோதல் வெடிக்கிறது.maamannan 630காலம்காலமாகக் கட்டிக் காத்து வந்த சாதியக் கோட்டை அதிவீரனால் தகர்க்கப்பட்டதை இரத்தினவேலின் மனம் ஏற்க மறுக்கிறது. முதலமைச்சர் வரைக்கும் சிக்கல் போகிறது. மாமன்னனின் தரப்பு ஞாயத்தை அறிந்த முதலமைச்சர் இரத்தின வேலை அழைத்துக் கண்டிப்பதுடன், மன்னிப்பும் கேட்கச் சொல்கிறார்..

கட்சி அதிகாரமா? சாதி அதிகாரமா? என்கிற நிலை வரும்போது, சாதி ஆணவம்தான் என முடிவெடுத்துக் கட்சியிலிருந்து விலகுகிறார் இரத்தினவேல்.. எதிர்க்கட்சியில் இணையும் அவருக்கு அதே சாதி பலத்திற்காக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கிறது. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் மாமன்னனைத் தோற்கடிப்பதே தனது முதன்மை வேலைத்திட்டமாக வைத்து சாதிவெறியர்களோடு சேர்ந்து பெரும் நெருக்கடி கொடுக்கிறார்.

ஊர் மக்களிடம் சாதிய உணர்வு மேலோங்கி இருந்தாலும் அவர்களின் பிள்ளைகளான இளம் தலைமுறையினர் சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக அதிவீரனுடன் கை கோர்க்கின்றனர். இந்த நிலையில் மாமன்னன் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகிறார். சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்ட கட்சித் தலைமை, அவருக்கு அவைத்தலைவர் பதவி வழங்கி, சாதியவாதிகளுக்குச் சம்மட்டி அடி கொடுக்கிறது. இதுதான் திரைப்படத்தின் கதைச் சுருக்கம். இதுவரை வந்துள்ள திரைப்படங்களில் இல்லாத வகையில் திரைநாயகர்கள் ஒடுக்கப்பட்ட சாதி அடையாளமாகப் பன்றிகள் மீது அக்கறை காட்டி அன்பு செலுத்தும் அரசியலை இந்தப் படம்தான் பேசுகிறது. பன்றிகளும் ஆசையோடு வளர்க்கக் கூடிய செல்ல விலங்குகள்தாம் என்று சொல்லும் திரைக்கதை, உயிர்களிடத்தில் எதுவும் இழிவில்லை என்ற அரசியலைக் கொண்டு சேர்க்கிறது.

நாலு பேரோட கொலைவெறி, எப்படி நானூறு பேரோட மானப்பிரச்சினை ஆகும் என்று மாமன்னன் கேட்குமிடத்தில் சாதியவாதிகளின் காதுகள் மூடியே இருக்கிறது. கட்சிகள் நலனுக்காகச் சில ஞாயங்கள் பேசப்படாமலே ஊமையாகிப் போகும் களஅரசியலைத் தொட்டுச் செல்கிறது. நாம் கேள்வி கேட்கவே ஒரு பதவிக்கு, ஒரு இடத்திற்கு வரவேண்டியிருக்கிறது. ஏழைகள் கோபப்படவே தகுதி தேவைப்படுகிறது என்பது போன்ற உரையாடல்கள் திரைப்படம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது. சாதியை வைத்து அரசியலில் அதிகாரமுள்ள பதவிகளைப் பெறும் சாதியவாதிகள், சாதியா? அதிகாரமா? என்ற நிலை வரும்பொழுது சாதிய ஆணவத்தை விட்டு விடுவதில்லை. இங்கு அடையாளத்துக்காகவும், அரசியலுக்காகவும் மட்டுமே சமூகநீதி பேசப்படுகிறது. அதிகாரம் உள்ள பதவிகளுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் வந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரங்கள் கிடைத்து விடுவதில்லை. ஆதிக்கச் சாதியினர் அவர்களைச் சாதிய அடையாளத்துடன் பார்க்கும் கொடுமையே எல்லாக் கட்சிகளிலும் உள்ளது.

உன்னை உட்காரச் சொன்னது என்னுடைய அரசியல், உன் அப்பாவை நிற்க வைத்தது எனது அடையாளம் என இரத்தினவேல் பேசுவது ஆதிக்கச் சாதியாளர்களின் அடிமனதில் உறைந்து கிடக்கும் சாதி அழுக்கைப் படம் பிடித்து காட்டுகிறது. பெரியவர்கள் சாதியைத் தூக்கிச் சுமந்தாலும், அடுத்த தலைமுறைப் பிள்ளைகள் சாதி கடந்து நட்பு பாராட்டுவதான காட்சிகள், ஒரு நம்பிக்கையைக் காட்டுகிறது.

ஒதுக்கீட்டுக்குரிய சட்டமன்ற தொகுதி உறுப்பினரான மாமன்னனை, அவைத்தலைவராக அறிவிப்பது ஆட்சி அளவிலும் சமூகநீதி காக்கப்பட வேண்டும் என்ற செய்தியை உணர்த்தினாலும், இந்திய அரசமைப்புக்குள்ளாகவே புதைந்து கிடக்கிற சாதிய ஆணவத்தைப் பற்றி இப்படம் பேசவில்லை.. இன்றைய தேர்தல் அமைப்பிலேயே சாதி ஆணவங்களுக்குத் தீர்வு காணப்பட இயலும் என்பதான நம்பிக்கை உண்மையில்லை என்பதை இப்படம் காட்ட முன்வரவில்லை..

மற்றபடி பொறுப்பற்ற வக்கிர உரையாடலோ, பாலியல் வன் காட்சிகளோ இல்லாமல் அனைவரையும் குமுக அக்கறையோடு படம் பார்க்க வைத்த இயக்குநருக்குப் பாராட்டுகள்.

இறுதியில்,

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்" என்ற குறளுக்கு உயிரூட்டியது கூடுதல் சிறப்பு!

- தமிழ்முகம்

Pin It