ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி தான் கற்கும் பாடப்புத்தகத்தில் இருக்கும் பெரியாரின் சிந்தனைகள் பகுதியை படித்துவிட்டு அதில் கேட்கப்பட்டு இருக்கும் கேள்விகளுக்குக் கொடுத்த பதில்கள் இவை–. ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பருவ தமிழ்ப் பாடப் புத்தகத்தில்...

1) கேள்வி  : “இன்று பெரியார் இருந்திருந்தால்” என்னும் தலைப்பில் மேடைப் பேச்சுக்கான உரை ஒன்றை எழுதுக.

இன்று பெரியார் இருந்திருந்தால் நாட்டில் நடக்கின்ற மூடப்பழக்க வழக்கங்களை முற்றிலும் ஒழிக்கப் பாடுபட்டிருப்பார். பெண்களுக்கான முன்னேற்றங்களை மேலும் அதிகப்படுத்த ஆலோசனைகள் சொல்லியிருப்பார். சமுதாயத்தில் சரிபாதி பெண்களுக்கு 50% இடஒதுக்கீடும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையைத்தர முயற்சி செய்திருப்பார். ஏனென்றால் தொடக்கப்பள்ளியில் பெண்களையே ஆசிரியராக்க வேண்டுமென்று 1929 ஆம் ஆண்டிலேயே சொன்னவர் பெரியார்தான்.பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் என்று சொன்னதோடு பெண்களிடம் கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகத்தைக் கொடுக்கவேண்டும் என்று சொன்னவர்தான் அவர்.அவர் மட்டுமே இன்று இருந்திருந்தால் ஊராட்சிமன்றம், சட்டமன்றம், பாராளுமன்றம் போன்றவற்றில் பெண்களை அதிகமாக நியமித்திருப்பார். ஏன் பிரதமரே ஒரு பெண் தான் வரவேண்டுமென்று மக்களிடம் பிரச்சாரம் செய்திருப்பார்.

9th std book periyar 6002) கேள்வி  : பெரியாரை நேர்காணல் செய்வதாகக் கருதி வினாப்பட்டியலை உருவாக்குக.

வினா1 : ஈ.வெ.ராமசாமி உங்களது பெயர். உங்களுக்கு "பெரியார்" பட்டம் தந்தது யார்?

வினா2 : கள்ளுக்கடை மறியல், இந்தித் திணிப்பு, வடவர் எதிர்ப்பு போன்ற போராட்டம் செய்ய உங்களுக்குத் தூண்டுதலாக இருந்தது எது?

வினா3 :தமிழ்நாட்டுத் தலைவராக இருந்த நீங்கள் கேரளாவில் உள்ள வைக்கத்தில் போராடச் சென்றது ஏன்?

வினா4 :ஆணாக இருந்து பெண்களுக்காகப் போராட வேண்டிய அவசியமென்ன?

வினா5 : அனைத்து மதத்திலும் உள்ள மூட நம்பிக்கையை ஒழிக்கப் பிரச்சாரம் செய்தது ஏன்?

3) கேள்வி  : இன்றைய சமூகம் பெரியார் பாதையில் நடக்கிறதா? நடக்கவில்லையா? எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடத்துக.

ஆம் நடக்கிறது. அவர் போராடிப் பெற்றுத்தந்த இடஒதுக்கீட்டில்தான் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை கிடைத்துக்கொண்டிருக்கின்றன.

அவரின் முயற்சியால் தான் பெண்களுக்குச் சொத்துரிமை கிடைத்துக்கொண்டு உள்ளது.

4) கேள்வி  :

தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டை சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்

அவர்தாம் பெரியார் - பார்

அவர்தாம் பெரியார்

- புரட்சிக்கவி பாரதிதாசன்

புரட்சிக்கவிஞரின் இயற்பெயர் கனகசுப்பு ரத்தினம். பாரதியார் மேல் இருந்த பற்றால் பாரதி தாசன் என பெயர் மாற்றிக் கொண்டார்.இவருக்கு பெரியார் அவர்கள் "புரட்சிக்கவிஞர்" என்று பட்டம் கொடுத்தார்.

1891 - ஏப்ரல் 29 - பிறப்பு

1964 - ஏப்ரல் 21 - இறப்பு

பெரியாரைப் பற்றி இவர் எழுதிய கவிதையே "தொண்டு செய்து பழுத்த பழம்".புரட்சிக்கவிஞர் -தந்தைப் பெரியாரின் கொள்கைகளை, கருத்துக்களை, தத்துவங்களை யெல்லாம் தன் கவிதை வரிகளால் மக்கள் மத்தியில் பரப்பியவர். பெரியாரின் சிந்தனைகள் தான் இந்த உலகம் பின்பற்றும் என்று பாடியவர்.

Pin It