தந்தை பெரியாருக்கு 17.9.1967 அன்று முதல் முதலில் திருச்சியில் சிலை வைத்து பெருமைப்படுத்தினார் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா.

திருச்சி, சிறுகனூர் என்ற இடத்தில் ‘பெரியார் உலகம்’ அமைக்கப்படுகிறது அங்கு பெரியாருக்கு 140 அடியில் சிலை வானுயர எழுப்பப்படவிருக்கிறது.

periyar statueகலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கு பெரியாரின் மார்பளவு சிலைகள் வைக்கப்பட்டன.

“பெரியாருக்கு ஏன் சிலை வைக்கப்படுகிறது?''

“பெரியார் சிலையை ஏன் வணங்குகிறீர்கள்?

பெரியார் சிலைக்கு ஏன் மாலை போடுகிறீர்கள்?'' மடவாதிகளின் ரிப்பீடேட் கொஸ்டின்.

பெரியார் சிலையை பகுத்தறிவாளர்கள் வணங்குவதில்லை. பெரியாரின் பிறந்தநாளிலோ மறைந்த நாளிலோ அந்த நாளை மக்களுக்கு நினைவுபடுத்தி பிரச்சாரம் செய்யும் நோக்கில் பெரியார் சிலைக்கு மாலை போடுவது என்பது சிலையை 'ஹைலைட்' செய்வது. மதவாத மூடர்களுக்குப் பலமுறை சொல்லியாயிற்று.ஆனாலும் அவர்கள் திருந்தியபாடில்லை.

தந்தை பெரியார் சிந்தனையில் உருவான கருத்துகளும் அவற்றை நடைமுறைப்படுத்த கைக்கொள்ளப்படும் அணுகுமுறைச் சிறப்புகளும் தனித்துவம் கொண்டவை. உலகில் தோன்றிய மற்ற புரட்சியாளர்களிடமிருந்து மாறுபட்டு, பொது வாழ்வில் பங்கேற்று சிந்தித்து, யாரும் தொட்டுப் பார்க்காத, தட்டிக் கேட்காத சமூக அவலங்களைத் துணிச்சலாக நேர்கொண்டு வெற்றி கண்டவர் பெரியார். அந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும் எனும் நோக்கத்தில் இயக்கம் கண்டு, அதற்குரிய தலைமையினை அடையாளம் காட்டி தனது வாழ்வினையே வரலாறாக விட்டுச் சென்று, வழித்தடம் அமைத்தவர் தந்தை பெரியார்.

பகுத்தறிவுக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதன் ஒரு அணுகுமுறையாக அவருக்கு சிலை அமைத்திடும் செயல் தந்தை பெரியாரது காலத்தே தொடங்கியதுதான்.

தந்தை பெரியாருக்கு சிலை வைப்பது அவருக்கு ஆராதனை செய்து, வழிபடுவதற்காக அல்ல; சடங்கு, சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு ஆதிக்க ஆன்மீகச் சுரண்டலுக்கு வழி வகுத்திடவும் அல்ல; தந்தை பெரியாருக்கு சிலை வைத்திடுவது அவருக்கு அடையாள மரியாதை செய்திடவே; அவருடைய பகுத்தறிவுக்கொள்கையினை,சிலையைப் பார்வையிடுபவர்களுக்கு உணர்த்திடவே. தனக்கு சிலை வைத்திட தந்தை பெரியார் அனுமதித்தபோது அவர் விதித்த நிபந்தனை இதுதான்; ''என் உருவம் சிலை வடிவத்தில் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்; சிலை வடிவத்தினை விட நான் பிரச்சாரம் செய்த பகுத்தறிவுக் கருத்துகள் சிலை பீடத்தில் பொறிக்கப்பட வேண்டும். எந்த கருத்துகளை நான் எடுத்துச் சொன்னேனோ அந்தக் கருத்துகள் சிலையை பார்ப்பவரிடம் சென்றடைய வேண்டும்'' என்று கூறி சிலை வைக்க அனுமதி அளித்தார்.

பொது வாழ்வில் பங்கேற்ற பலருக்கும் சிலை வைத்திடும் பொழுது அவரது பெயர் மற்றும் வாழ்ந்த நாள் பற்றிய குறிப்புகளுடன் சிலை நிறுவிடுவர். ஆனால் தந்தை பெரியாருக்கு எத்தனை சிலைகள் வைக்கப்படுகின்றனவோ அந்த அளவிற்கு அவரது பகுத்தறிவுக் கருத்துகளும் அவைகளில் பொறிக்கப்படுகின்றன.

''கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்,

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்,

வணங்குகிறவன் காட்டுமிராண்டி'' என்ற சொற்றொடர் நிச்சயம் இடம்பெறுகிறது.

பகுத்தறிவின் முழுமையான அடையாளமே தந்தை பெரியாருக்கு சிலை வைப்பது. இதில், வேண்டுதல், வழிபாடு செய்வது கிடையாது. பகுத்தறிவுக் கருத்துப்பரப்பல்தான் சிலை வைப்பதன் முழு முக்கியக்காரணம்.

எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத இயக்கம் பெரியார் இயக்கம். சோதனைகளையே சாதனையாக்கிக் கொள்ளும் வல்லமை பெற்றது பெரியார் இயக்கம். தந்தை பெரியார் வாழ்ந்த பொழுது, ஒரு சமயம் சுற்றுப் பயணத்தில் அவரது எதிரிகள் அவரை அவமானப்படுத்தும் எண்ணத்தில் அவரை நோக்கி செருப்பு வீசினர். வீசப்பட்ட ஜோடி செருப்புகளில் ஒன்று மட்டும் பெரியாரது வாகனத்தில் வந்து விழுந்தது. பயணப்போக்கில் சற்று தூரம் வந்துவிட்ட பெரியார், வாகனத்தை திருப்பச்சொல்லி, செருப்பு வீசப்பட்ட இடத்திற்கு வந்தார். வீசப்பட்ட செருப்பு ஜோடிகளில் மற்றொன்றையும் எடுத்துக் கொண்டு, வீசப்பட்ட செருப்புகளின் பயன்பாட்டையும் (ஜோடி செருப்பில் ஒரு செருப்பு இருப்பதால் யாருக்கும் பயனில்லை; வீசப்பட்ட மற்றொரு செருப்பும் இருந்தால் நன்றாகப் பயன்படுமே!) வெளிப்படுத்தி எதிரிகளை நாணம் அடையச் செய்து, அற்ப அறிவுகொண்டோரின் செயலினை முறியடித்தார். பின்னர், எந்த இடத்தில் செருப்பு வீசி பெரியாரை அவமானப்படுத்திட நினைத்தார்களோ அந்த இடத்திலேயே அவருக்கு சிலை வைத்து வந்த எதிர்ப்பினையும், பெரியார் தொண்டர்கள் கருத்துப் பிரச்சார வாய்ப்பாக மாற்றினர். “செருப்பொன்று விழுந்தால் சிலையொன்று முளைக்கும்'' என்று,கவிஞர் கருணானந்தம் பாடினார்.

கடந்த 2018 செப்டம்பர் மாதத்தில், சென்னை மற்றும் தாராபுரம் பகுதிகளில் இருக்கும் பெரியார் சிலைகள் மீது அடையாளம் தெரியாத நபர்களால் செருப்புகள் வீசப்பட்டது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது. இவற்றால் எதிரிகளின் எண்ணத்துக்கு மாறாக, ஊடகங்களில் பெரியாரின் பெயர் பலநூறு முறை உச்சரிக்கப்பட்டது..

தந்தை பெரியாரது கருத்துப் பரவலின் வளர்ச்சியாக.ஆந்திர மாநிலம்-விசாகப்பட்டினத்தில் தந்தை பெரியார் சிலை வைக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் முளைத்திட்ட தந்தை பெரியாரின் முதல் சிலையினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 04.02.2012 அன்று திறந்து வைத்தது பெரியாரின் கருத்துப் பரவல் பயணத்தின் ஒரு சாதனை.

கடவுள் வாழும் இடங்களாகக் கோயில்கள் கருதப்பட்டாலும் வீடுகளிலும் கடைகளிலும் அலுவலகங்களிலும் கடவுள் படங்களும் பொம்மைகளும் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. எந்நேரமும் எங்கும் கடவுள் உருவங்கள் வைக்கப்பட்டு மனதில் பதியசெய்யப்படுகின்றன. அப்படி இருக்கும்போது, பகுத்தறிவாளர்கள், பெரியாரியலாளர்கள் தங்கள் வீடுகளில், தங்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களில், பெரியாரின் படங்களை மட்டுமல்லாமல் தந்தை பெரியாரின் முழு உருவச்சிலைகளை வைத்து, சிலைக்குக் கீழே, கடவுள் மறுப்பு வாசகத்தையும் தவறாமல் எழுதி வைக்க வேண்டும்.

பெரியாரியலாளர்கள் எல்லோர் வீட்டிலும் பெரியாரின் புகைப்படங்கள் நிச்சயமாக இருக்கும். சிலர் வீடுகளில் கதவுகளில் பெரியாரின் உருவம் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கும். கட்டுரையாளரின் வீட்டிலும் தேக்குமரக் கதவில் பெரியாரின் மார்பளவு சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.

திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் மானமிகு.துரை.சந்திரசேகரன் அவர்களின் வடலூர் வீட்டில் 2004ஆம் ஆண்டில் தந்தை பெரியாரின் சிலை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

வடலூர் தோழியர் ரமாபிரபா, தனது கனவு வீட்டில் தந்தை பெரியார் அமர்ந்திருப்பதுபோல் முழு உருவச்சிலை நிறுவி 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் திறக்கப்பட்டது. அந்த சிலையின் வடிவமைப்பு தத்ரூபமாக அமைக்கப்பட்டதை மெய்மறந்து ரசித்த ஆசிரியர் கி.வீரமணி வெகுவாகப் பாராட்டினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பெரியாரின் முழு உருவச்சிலை 1990ஆம் ஆண்டு திறக்கப்பட்டாலும் திராவிடர் கழக வேலூர் மண்டலத் தலைவர் மானமிகு வி.சடகோபன் அவர்கள் குடியாத்தத்தில் நடத்தும் லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெரியாரின் முழு உருவச்சிலை 17.05.2016இல் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களால் திறக்கப்பட்டது. இதனால் அங்கு பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அன்றாடம் பெரியாரின் சிலையைக் காண்பார்கள், சிந்திப்பார்கள்.

வேலூர் மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் குடியாத்தம் ந.தேன்மொழி-அன்பரசன் இணையரின் வீட்டையொட்டி அமைந்துள்ள பெரியார் அரங்கம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள நிகழ்வரங்கத்தில் (Function Hall) ஆறரை அடி உயரத்தில் பெரியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டு, கடந்த 24.02.2019 அன்று, திராவிடர் கழக மாநில பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்களால் திறக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் கழகத் தோழர்கள் வளர்மதி-தங்கம் இல்லத்திலும் பெரியார் சிலை வண்ணமடிக்கப்பட்டு சிறப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வெ.இ. சிவக்குமார் அவர்களின் குடியாத்தம் வீட்டில் முகப்பில், தந்தை பெரியாரின் மார்பளவு சிலை விரைவில் திறக்கப்படத் தயாராக உள்ளது.

வீடுகளின் வாயிற்படியருகே, அல்லது வீட்டின் மாடியில் தெருவையொட்டி அல்லது, சுற்றுச் சுவரையொட்டி பெரியார் சிலைகள் அமைக்கப்பட வேண்டும். முடிந்தால் சிலையின் கீழே, கடவுள்மறுப்பு வாசகங்களைக் கல்வெட்டிலோ, பெயின்ட்டிலோ எழுத வேண்டும். தந்தை பெரியாரின் பிறந்தநாள், நினைவுநாள் மட்டுமல்ல, அன்னை மணியம்மையாரின் பிறந்தநாள், நினைவுநாள், தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாள் மட்டுமல்லாமல், நம் வீட்டினர் பிறந்தநாள், திருமணநாள், பிள்ளைகள் தேர்வுகளில் வெற்றிபெற்ற நாட்களிலும்,வேலை கிடைத்த நாட்களிலும் பெரியாரின் சிலையை சீரியல் லைட், மாலை போன்றவற்றால் சிறப்புற அலங்கரிப்பதன் மூலம் பெரியாரின் உருவத்தையும் அவரது கொள்கைகளையும் மக்கள் மனதில் மீண்டும்மீண்டும் நினைவுபடுத்த முடியும்.

அவரவர் வீடு, தொழிற்சாலை, பள்ளிகள், தொழில் நிறுவனங்களில் பெரியார் சிலையை நிறுவ யார் அனுமதியும் தேவையில்லை. சாலைகளை,பொது இடங்களை அனுமதியின்றி ஆக்கிரமித்துக்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அமைக்கப்படும்போது, நமக்குச் சொந்தமான இடங்களில் பெரியார் சிலைகளை நிறுவ நாம் ஏன் தயங்க வேண்டும்?

வீடுகள்தோறும் பெரியாரின் சிலைகள், ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று உரக்கச் சொல்லட்டும். பெரியாரின் கொள்கைகளால் மானுடம் வெல்லட்டும்.

Pin It