கைத்தடியின் வீச்சு இரண்டாண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் நுழைகிறது. பெரியாரியலை முழுமையாக அறியாதவர்களும் அறிந்திட வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தின் அடிப்படையிலும், எழுத்துலகிற்குப் புதியதாக வரும் கருத்தாளர்களை ஒன்றிணைத்து சமூக மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடும் கைத்தடி உருவாக்கப்பட்டது. அதில் நாங்கள் நினைத்த இலக்கை இன்னும் அடையவில்லை காரணம் கைத்தடி மட்டுமல்ல.

ஒரு கட்டத்தில் இதழை நிறுத்திவிடலாம் என்று ஆலோசித்தோம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் பகுத்தறிவு சிற்றிதழ்கள் வ(ள)ரவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாகக் கருதினோம்! காரணம் சில பார்ப்பன ஏடுகள் தங்கள் கைகளில் ஊடகம் உள்ளது என்பதற்காக நினைத்ததையெல்லாம் மக்கள் மத்தியில் பரப்பி (திணித்து) வருகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால் கைத்தடி மட்டுமல்லாமல், இன்னும் சில பகுத்தறிவு இதழ்கள் வெவ்வேறு தளங்களில் உருவாக்கப்பட வேண்டும். உருவாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து செயல்பட உழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்னும் வலியை வழியமைத்து நடத்தி வருகிறோம்!

இன்றைய சூழ்நிலையில் அறிவியல் உலகில் பலரும் செய்தித் தாள்களையும், இதழ்களையும் விரும்பி அச்சு இதழில் படிக்கவில்லை என்ற குறை இருந்தாலும்கூட சிலர் நம் இதழ்களைத் தொடர்ந்து சேகரித்து வருகிறார்கள். – இதழ்களின் பிரதிகளைப் பெற்று நண்பர்களுக்குக் கொடுத்துப் படிக்கச் செய்கிறார்கள் என்பதனைப் பார்க்கும்போது தொடர்ந்து அச்சு வடிவில் கொண்டுவர கடமைப்பட்டுள்ளதாகக் கருதுகிறோம்!

அதே நேரத்தில் அறிவியலுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் “கைத்தடி செயலி” “கைத்தடி இணையதளம்” போன்ற அறிவியல் தளங்களிலும் எங்களின் முழு முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் எடுத்துள்ளோம்! புதிய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரியாரியலை, அம்பேத்கரியலை, திராவிடத்தின் பெருமையை நம் வாழ்வின் சிறப்பைத் தெரியப்படுத்தவும், தற்கால இணையதள வசதிகளையும் கையில் எடுக்க இருக்கிறோம்! மாத செய்திகளின் தொகுப்பைப் போல தினசரி செய்திகளை இணையத்தின் வழியாகப் பரப்புவது எனவும், பார்த்து உணர்ந்திடும் வகையில் கார்ட்டூன் என்று சொல்லப்படும் காணொளிக் காட்சிகளை புதியதாக உருவாக்கி குழந்தைகளை கவர்ந்து அறிவுவிருந்தை வழங்குவதென அறிவிக்கிறோம்!

இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவு கொடுத்து வந்த தோழர்கள், வாசகர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள் – தொடர்ந்து எங்களது அடுத்தடுத்த முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்கிப் பெரியாரியலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவும் சமூக மாற்றத்தை சாத்தியப்படுத்த உடன் நில்லுங்கள் என்ற அன்புக் கட்டளையை முன்வைக்கின்றோம்!

- மு.சி.அறிவழகன்

Pin It