தற்பொழுதெல்லாம் தமிழகத்தின் நகரம் மற்றும் மாநகரங்களில் பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் பிள்ளைகளைப் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக அனுப்புவதை காணமுடிகிறது. குறிப்பாக நீச்சல் பயிற்சி, ஓவியப் பயிற்சி, கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி, ஸ்கேட்டிங் பயிற்சி, டேபிள் டென்னிஸ், மட்டைப்பந்து பயிற்சி, இறகுப்பந்து விளையாட்டு என்று பல ஆயிரங்களில் சில இடங்களில் இலட்சங்களில் கட்டணம் கட்டி பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பதைப் பார்க்கலாம். அதுவும் அடுத்த ஆண்டில் பொதுத் தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு அல்லது +1 அல்லது +2 மாணவர்கள் என்றால் அதுவும் இல்லை. ஆனால் கிராமங்களில் அதற்கான வசதியும் வாய்ப்பும் இல்லாததால் அங்குள்ள குழந்தைகளும் சிறுவர்களும் சில கிராமத்து விளையாட்டில் கவனம் செலுத்தி தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வதோடு கூர்மைபடுத்திக்கொள்கின்றனர்.
மனிதன் தன் குழந்தைப் பருவத்தில் இருந்தே தனது திறனை ஏதேனும் ஒரு வழியில் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் இயல்பைப் பெற்றிருக்கிறான். குழந்தைகள் கை கால்களை அசைப்பதாக இருக்கட்டும் கவிழ்ந்து படுத்துக்கொள்வதாக இருக்கட்டும், தரையில் நகருவதாக இருக்கட்டும், சற்று வளர்ந்த பின்பு ஓடுவது, திண்ணையிலிருந்து குதிப்பது, தாண்டுவது, கதவின் மீது ஏறி கதவுச் சட்டத்தில் நின்றுகொண்டு வண்டி ஓட்டுவது என்று ஏதோவொரு வகையில் தனது திறனை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் குழந்தைகளும் சிறார்களும். ஆனால் குழந்தைகள் வளர்ந்து, பள்ளிக்கூடம் அவர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக மாறும்போது, அவர்கள் இயற்கையிலேயே விளையாட்டாகப் பெறக்கூடிய திறமைகளுக்கான வழிகளை எல்லாம் அடைத்து விட்டு, மூளையை மட்டும் வலுப்படுத்தும் வழியை மட்டும் திறந்து விடுகிறோம். மனித இனத்தின் வளர்ச்சி என்பது வெறும் அறிவு வளர்ச்சியோ அல்லது வெறும் உடல் மற்றும் மன வளர்ச்சியோடு நின்றுவிடுவதில்லை. எல்லாவற்றின் ஓட்டுமொத்த வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சியைக்குறிக்கிறது. தமிழர்களின் கிராமப்புற விளையாட்டுகளில் ஒன்றான அஞ்சாங்கல் என்ற விளையாட்டு எப்படி உடல் வளர்ச்சிக்கும், மனவளர்ச்சிக்கும், திறமைகளின் வளர்ச்சிக்கும் பயன்படுகிறது என்று பார்ப்போம்.
பொதுவாகவே விளையாட்டு என்பது ஒரு செயல், அதில் மன நிறைவு என்பது ஒரு பகுதியே என்றாலும் அது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் வெளிப்படுத்தவும் ஓர் களமாகத் திகழ்கிறது என்று பெருமாள் என்னும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார். பெரும்பாலான விளையாட்டுகள் பொழுதுபோக்குக்காக விளையாடினாலும் அவை மன மகிழ்ச்சியைத் தருவதோடு திறமைகளையும் வளர்த்து விடுகிறது, மேலும் விளையாட்டுதான் குழந்தைகளுக்கு சமூக வாழ்வை சொல்லிக்கொடுக்கிறது. விளையாடுவதன் மூலம் குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் உறவுகளை வளர்த்துக்கொள்ளவும் ஒத்து செயல்படவும் தேவையான மானுடத் திறமைகளை கற்றுக்கொள்கிறார்கள் என்று அதன் பின் வந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
பொதுவாக அஞ்சாங்கல் விளையாட்டை சிறுமிகள் தான் விளையாடுவார்கள், சிறுவர்களும் விளையாடலாம். அஞ்சாங்கல் விளையாட்டு விளையாடுவது மிகவும் சுலபம். இந்த அஞ்சாங்கல் விளையாட்டில் சிறுமிகள் கற்களை கீழே வீசி விட்டு வீசிய கற்களில் ஒன்றை எடுத்து மேலே தூக்கிப் போட்டுவிட்டு அந்த கல் கீழே விழுவதற்குள் கீழேயுள்ள கற்களை கையால் எடுத்துக்கொண்டு மேலே தூக்கிப் போட்ட கல்லையும் கீழே விழாமல் பிடிக்கவேண்டும். இவ்வாறு கீழே உள்ள கல்லை எடுப்பதிலும் மேலே தூக்கிப் போட்ட கல்லை பிடிப்பதிலும்தான் விளையாடும் சிறுமியின் வெற்றி இருக்கிறது. கையும் கண்ணும் மூளையும் ஒருங்கே இணைந்து விரைவாகச் செயல்பட்டால்தான் கல்லை எடுப்பதும் பிடிப்பதும் சாத்தியமாகும்.
இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று காண்போம். இந்தவிளையாட்டு விளையாட ஐந்து அல்லது ஏழு கற்களைப் பயன்படுத்துவார்கள். குறைந்தது இரண்டு சிறுமிகளும் சில நேரங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட சிறுமிகளும் சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடுவதுண்டு. இந்த விளையாட்டைப் பல சுற்றுகளாக விளையாட வேண்டும் அதில் அனைத்திலும் யார் வெற்றிபெறுகிறார்களோ அவர்களே வென்றவர்கள் ஆவர்.
ஆட்டத்தின் முதல் சுற்றில் அஞ்சு கல்லையும் கையில் எடுத்து ஒன்னுகொன்னு முட்டாம தரையில வீசணும். அதுல ஒரு கல்லை கையில் எடுத்துக்கணும், அதுக்கு கை கல்லுன்னு பேரு. கை கல்லை எடுத்து மேல நேரா தூக்கிப்போட்டுட்டு, கீழ இருக்கற ஏதொவொருக் கல்லை எடுத்துக்கிட்டு மேல தூக்கிப்போட்ட கல்லையும் அதே கையால புடிக்கணும். இப்படியே “ஒவ்வொரு கல்லாக மற்ற கல்லையெல்லாம் எடுத்து முடிச்சாத்தான் முதல் சுற்று ஆட்டம் முடிஞ்சதுனு அர்த்தம். இதுல எப்பவாவது மேலே தூக்கிப் போட்ட கல்லை புடிக்காம வுட்டாலோ, கீழ இருக்கிற கல்லை எடுக்காம விட்டாலோ, அல்லது ஒரு கல்லை எடுக்கும் போது மத்த கல்லில் கை பட்டுவிட்டாலோ ஆட்டம் ஆடுபவர் ஆட்டம் இழப்பர், ஆட்டம் அடுத்தாளுக்கு போயிடும். அடுத்தாளும் இதே மாதிரி அஞ்சாங்கல்லை தரையில போட்டுட்டு கல்லை ஒவ்வொன்னா எடுக்க வேண்டும். அப்படி கல்லை எடுக்கலனா மீண்டும் ஆட்டம் உங்களுக்கே அதாவது முதல் நபருக்கே வரும். முதல் நபர் மறுபடியும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கனும். இது முடிந்ததும் இரண்டாம் சுற்றுக்குப் போகணும்.
இரண்டாம் சுற்றில் மறுபடியும் அஞ்சு கல்லயும் கையில எடுத்து தரையில வீசணும். இப்ப ஒரு கல்லை கையில எடுத்துகிட்டு அதை மேலே தூக்கிப்போட்டுட்டு இரண்டு இரண்டு கல்லாக தரையில் இருந்து எடுத்துகிட்டு அதே கையால மேல தூக்கிப் போட்ட கல்லையும் பிடிக்கணும். அதற்குத் தகுந்தாற்போல கல்லை தரையில வீசும்போதே பக்குவமாக வீசணும். இப்ப நாலு கல்லையும், இரண்டு சோடியா எடுக்கணும். முதல் சுற்று மாதிரியே இப்பவும் மேலே தூக்கிப் போட்ட கல்லை புடிக்காம வுட்டாலோ, கீழ இருக்கிற கல்லை இரண்டு இரண்டாக எடுக்காம விட்டாலோ, அல்லது கல்லை எடுக்கும் போது மத்த கல்லில் கை பட்டுவிட்டாலோ ஆட்டம் ஆடுபவர் ஆட்டம் இழப்பர், ஆட்டம் அடுத்தாளுக்கு போயிடும். அடுத்தாளும் அவர் விட்ட சுற்றில் இருந்து ஆட்டத்தை தொடங்குவார். இந்த சுற்று முடிந்ததும் அடுத்த சுற்றுக்குப் போகணும்.
மூன்றாவது சுற்றில் அஞ்சுகல்லையும் தரையில எடுத்து வீசும்போது மூணு கல்லு ஒண்ணா இருக்கிற மாதிரி வீசினா நல்லது, ஏன்னா இந்த முறை மூணு கல்லை ஒட்டுமொத்தமா எடுத்துட்டு, ஒரு கல்லை தனியா எடுக்கணும். ஒரு கல்லை மொதல்ல எடுத்துட்டு பிறகு மூணு கல்லையும் கூட எடுக்கலாம்.
நான்காவது சுற்றில் இந்தாட்டம் கொஞ்சம் வேற மாதிரி விளையாடனும். அதாவது அஞ்சு கல்லையும் கயில வெச்சுட்டு அதுல ஒரு கல்லை மட்டும் மேல தூக்கிப் போடணும். அந்தக் கல்லு மேல போயிட்டு வரதுக்குள்ளார கையில இருகிற மீதி நாலு கல்லயும் கீழ மொத்தமா வைச்சிட்டு மேல தூக்கிப்போட்ட கல்லைப் புடிக்கணும். அப்புறம் மொத மூணுசுற்று மாதிரியே அந்தக் கல்லை மேலே தூக்கிப்போட்டுட்டு கீழ இருக்கற நாலு கல்லையும் ஒட்டுமொத்தமா எடுக்கணும்.
அடுத்த ஐந்தாவது சுற்று கொஞ்சம் பெரிய சுற்று, இதுல முதல்ல நாலாவது சுற்று மாதிரியே அஞ்சு கல்லயும் கையில வெச்சுட்டு அதுல ஒரு கல்லை மேல தூக்கிப்போட்டுட்டு, அதே கையில ஆட்காட்டி விரலால சுண்டி கீழ தரையைத் தொடணும். மீண்டும் ஒருமுறை இதேமாதிரி செய்யணும். அடுத்து நாலாவது சுற்று மாதிரியே அஞ்சு கல்லையும் கையில வச்சுகிட்டு அதுல ஒரு கல்லைமட்டும் மேலே தூக்கிப்போட்டுட்டு மீதி நாலு கல்லையும் கீழ தரையில மொத்தமா வைச்சிட்டு, மேல போட்ட கல்லைப் புடிக்கணும். இப்ப ஒரு கல்லு கையில இருக்கும் மீதி நாலு கல்லும் கீழ தரையில இருக்கும். இப்ப கையில இருக்கற ஒரு கல்லைத் தூக்கிப்போட்டுட்டு ரெண்டு கையாலயும் கீழ தரையைத் தட்டணும். அப்புறம் மேல போட்ட கல்லைப் புடிக்கணும். இப்ப கையில இருக்கற ஒரு கல்லை மேல தூக்கிப்போட்டுட்டு, கீழ இருக்கற கல்லையெல்லாம் எடுத்துகிட்டு மேலே தூக்கிப்போட்ட கல்லைப் புடிக்கனும். அடுத்து ஆட்டத்தோட முக்கியமான கட்டம். போன ஆட்டத்து முடிவில ஆடறவங்க உள்ளாங்கையில அஞ்சு கல்லும் இருக்கும். அந்த கல்லையெல்லாம் தூக்கிப்போட்டு பொறங்கையால (கையின் பின்பக்கமாக) புடிக்கணும். அப்படி புடிக்கும்போது எல்லாக் கல்லையும் புடிக்கணும்னு அவசியமில்லை, முடிஞ்சவரைக்கும் கொஞ்சமா புடிக்கிறது நல்லது. ஆனா அப்படி முயற்சிக்கும்போது எல்லாக் கல்லும் கிழே விழறதுக்கும் வாய்ப்பு இருக்கு. இந்த நேரத்திலதான் மிகவும் கவனமாக விளையாடனும். அப்படியே எதையும் புடிக்காம வுட்டுட்டாலும் உடனே ‘மொட்டக்கையில மோர் ஊத்து' ன்னு சொன்ன எதிராளி மறுபடியும் எல்லா கல்லையும் ஆடுகிறவருக்கு கையில குடுக்கொணும். ஆனா அப்படி சொல்லறதுக்கு முன்னாடி எதிராளி ‘தூ' அப்படின்னு சொல்லீட்டா ஆடுகிறவரின் ஆட்டம் காலி. இப்ப பொறங்கையில இருக்கற கல்லை அப்படியே வீசி புடிக்கணும். இதை சுங்கனும் அல்லது சுங்கிப்புடிக்கணும்-னு சொல்லுவாங்க. அதாவது உள்ளாங்கை கீழ தரையைப் பார்த்துத்தான் இருக்கும் அப்போது வீசின கல்லை சொக்கிப் புடிக்கனும் அல்லது சுங்கிப் புடிக்கணும். இதுல ரொம்ப முக்கியம் வீசுன எல்லாக் கல்லையும் புடிக்கனும். இதேமாதிரி மீண்டும் இரண்டுமுறை சுங்கிப் புடிக்கணும். அடுத்த படியாக அஞ்சு கல்லையும் எடுத்து வீசி பொறங்கையில புடிச்சு, எதிராளியை புடிச்ச கல்லுல ஏதேனும் ஒன்றை தொடச்சொல்லனும். எந்தக் கல்லைத் தொடறாங்களோ அந்தக் கல்லைச் சுங்கிப் புடிக்கணும். எதிராளி வெவரமா இருந்தா புடிக்க முடியாத ஒரு கல்லைத் தொடுவாங்க. நீங்க இன்னும் வெவரமா இருந்தா ஒரே ஒரு கல்லை மட்டும் கூட புடிக்கலாம். ஆனா அதை ஆட்டத்தோட தொடக்கத்திலேயே பேசி முடிவு பண்ணிக்கறது நல்லது. அப்புறம் முதல் சுற்று மாதிரியே, கையில இருக்கற கல்லை மேலே தூக்கிப்போட்டுட்டு கீழ தரையில் இருக்கற கல்லை ஒவ்வொண்ணா எடுக்கணும்.
இந்த ஆட்டம் வரைக்கும் யாரு மொதல்ல ஆடி முடிக்கறாங்களோ அவங்கதான் ஜெயிச்சவங்க.
இந்த அஞ்சாங்கல் ஆட்டத்தில் ஆடுபவர் கவனமாக கையையும் கண்ணையும் மனதையும் ஒருங்கிணைத்து ஆடினால்தான் வெல்லமுடியும் ஆகவே ஆடுபவர்க்கு இவற்றை ஒருங்கிணைக்கும் திறன் வளர்கிறது. மேலும் அஞ்சாங்கல் விளையாட்டில் சிறுமிகள் கற்களை மேலே விட்டுப் பிடிப்பதால் அவர்களின் கைவிரல்கள் மற்றும் கைகளின் மணிக்கட்டுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. இந்த ஆட்டத்தை ஆடுபவர் தவறு செய்கிறாரா என்று எதிரில் இருப்பவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதால் அவரின் உற்றுநோக்கும் திறனும் கண்களின் இயக்கமும் பலப்படும்.
சின்ன வயதில் பள்ளி ஆசிரியர் ஒரு மாணவரைப் பார்த்து கேள்வி கேட்டார். அதாவது ஒரு பழைய பாலத்தில் உங்களால் இரண்டு எலுமிச்சம் பழத்தை மட்டும்தான் எடுத்துக் கொண்டு ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்திற்கு பத்திரமாக செல்லலாம், அதற்கும் மேல் எடுத்துச் சென்றால் அந்த பாலம் உடைந்து போகும். ஆனால் நீங்கள் ஒரே நேரத்தில் நான்கு பழத்தையும் பாலத்தின் அடுத்த பக்கத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் அதை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்று கேட்டார். அந்த மாணவனுக்கு அஞ்சாங்கல் ஆடத் தெரிந்திருந்ததால் இரண்டு பழத்தை மேலே தூக்கிப்போட்டு விட்டு அது கிழே வருவதற்குள் அடுத்த இரண்டு பழத்தை மேலே போட்டுவிட்டு முன்பு போட்ட பழம் கிழே வரும்போது அதை கையில் பிடித்துக்கொண்டு நகர்ந்து கொண்டே சென்றால் பாலத்தின் அடுத்த பக்கத்திற்கு நான்கு பழத்துடன் சென்றுவிடலாம் என்று செயல் முறை விளக்கத்தோடு பதில் தந்தானாம் மற்ற மாணவர்கள் எல்லாம் அந்த மாணவனின் அறிவுத்திறனை வியப்போடு பார்த்தார்களாம்.
எனவே பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கும் அஞ்சாங்கல் விளையாட்டைச் சொல்லிக்கொடுங்கள். அவர்களும் வாழ்க்கையில் திறமையோடும் அறிவுக்கூர்மையோடும் வளர்வார்கள்.
- இன்னும் விளையாடலாம்