‘தமிழன் என்று சொல்லடா

தலைநிமிர்ந்து நில்லடா.’

என்று பாடினார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை. இந்த முழக்கம் தமிழ்நாடெங்கும் ஓங்கி ஒலித்தது. ‘தமிழன்டா’ என்று நெஞ்சு புடைக்க அனைத்து மாணவ மாணவியரும், இளைஞர் களும் முழங்கினர்.

‘ஏறு தழுவுதல்’ என்னும் தமிழர்களின் பாரம் பரிய விளையாட்டைத் தடைசெய்ய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஜனவரி 17 முதல் தமிழ்நாடே போராட்டக் களமானது. ‘வேண்டும், வேண்டும், ஜல்லிக்கட்டு வேண்டும்’ என்று சாதி, சமய வேறுபாடு இல்லாமல் ஒன்றாக நின்று குரல் கொடுத்தனர்.

மத்திய, மாநில அரசுகள் செய்வதறியாமல் அதிர்ந்தனர். ‘உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது, எங்களால் ஏதும் செய்ய இயலவில்லை’ என்று கைவிரித்து நின்றனர். தமிழர் திருநாளான பொங்கல் நெருங்க நெருங்க ஆட்சியாளர்கள் மக்களைச் சந்திக்கவே அஞ்சினர்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு 2011 ஜூலை 11 அன்று மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தடை செய்யப் பட்டது. அப்போதைய மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் நடவடிக்கையே ஜல்லிக்கட்டு தடைபடுவதற்குக் காரணமாக அமைந்தது.

அந்த நாளில் மிருகவதைத் தடைச்சட்டம் - 1960 இன் கீழ் ஓர் அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கையின் கீழ் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, குரங்கு போன்ற விலங்குகளை காட்சிப் பொருளாக அடைத்து வைத்து வேடிக்கைக் காட்டுவதை மத்திய அரசு தடைசெய்தது. அதன் காரண மாகவே இந்த விலங்குகளை சர்க்கசில் பார்க்க முடியாமல் போய்விட்டது.

இந்த விலங்குகளின் பட்டியலோடு காளை களையும் சேர்த்ததால்தான் ஜல்லிக்கட்டு விளை யாட்டு நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 7 அன்று காட்சிப் பட்டியலில் இருந்து காளையை நீக்கும் அரசாணையை பாஜக அரசாங்கம் வெளியிட்டது. அதற்கு உச்ச நீதி மன்றம் தடைவிதித்தது. இதுபோன்ற சூழ்நிலை களில் 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது.

இந்த ஆண்டு இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதி யிருந்தார். தமிழர்களின் பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டு, பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டு களாக நடைபெற்று வரும் இது தொடர்பான கருத்துகள் சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங் களிலும் இடம் பெற்றுள்ளன.

இப்போதும் கிராமமக்கள் தங்கள் வேண்டுதல் களை நிறைவேற்றுவதற்காக காளை மாடுகளை கோயில்களுக்குத் தானமாக வழங்குவதும் வழக்கத்தில் இருக்கிறது. மற்றும் இந்த மண்ணுக்கு உரிய திட காத்திரமான காளையினங்களின் மரபணு பாது காப்புக்காகவும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2014 மே 7 அன்று உச்ச நீதிமன்றம் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தடைசெய்தது. இதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையால் வெளியிடப்பட்ட காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலி லிருந்து காளைகளை நீக்கிவிட்டு, ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2015 முதலே தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு பொங்கல் நெருங்கிடவே மக்களின் கோரிக்கை மாணவர்- இளைஞர்களின் கோரிக்கையாக மாறியது. மத்திய அரசின் உறுதுணையோடு தமிழக அரசு அவசரச்சட்டம் இயற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளானது. ஜனவரி 23 அன்று கூடிய இந்த சட்டப் பேரவைக் கூட்டத்திலேயே சிறப்புத் தீர்மானமாகவும் கொண்டு வரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பண்டைய தமிழகத்தில் காளைகளுக்கும், உயிர் நீத்த வீரர்களுக்கும் கோயில் கட்டி வழிபடும் வழக்கம் இருந்து வருவது நடுகல் சான்றுகளால் தெரியவந்துள்ளது. தமிழ்ச்சமூகம் தோன்றியது முதல் கால்நடைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருவதை சமூக வரலாறுகள் கூறும்.

புதிய கற்காலம் (கி.மு. 3000) முதல் நிலையாக ஓரிடத்தில் தங்கியபோது அவர்கள் வேளாண்

மையையே தொழிலாகக் கொண்டிருந்தனர். வேளாண் பணிக்காக மாடு, எருமை, ஆடு, கோழி ஆகிய கால்நடைச் செல்வங்களை வளர்க்கத் தொடங்கினர்.

ஓய்வு நேரத்தில் தங்களுக்கும், தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கும் வாகனமாக விளங்கும் காளைகளுடன் ‘ஏறு தழுவுதல்’ என்னும் விளை யாட்டை நடத்தினர். சைவ, வைணவ, சமணம் ஆகிய எல்லா சமயத்தினரும் இதில் வேறுபாடு இல்லாமல் கலந்து கொண்டனர்.

தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல் காப்பியம் இதுபற்றிக் கூறியுள்ளது. தமிழ் மக்களின் வாழ்வியல் அகம், புறம் என்று பிரிக்கப்பட்டிருந்தது. இதனையே தொல்காப்பியம் அகத்திணையியல், புறத்திணையியல் என்று பகுத்துள்ளது.

அகப்பொருளைப் பாடுவது அகத்திணை யியல் ஆகும். அகப்பொருள் அல்லாத அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைப் பற்றிக் கூறுவது புறப்பொருள் ஆகும். கல்வி, வீரம், கொடை ஆகியன பற்றி நிகழும் ஒழுக்கம் புறப் பொருளாகும். திணை என்பது ஒழுக்கம் ஆகலான் புறப்பொருள் பற்றி நிகழும் ஒழுக்கம் புறத்திணை எனப்படும்.

பண்டைக் காலத்தில் அரசன் பகை நாட்டின் மேல் போர் தொடுப்பதற்கு முன் அந்நாட்டிற்குத் தம் வீரர்களை அனுப்பி பகைநாட்டு பசு மாடு களைக் கவர்ந்து வரச் செய்வான். அவ்வீரர்கள் வெட்சிப் பூவைச் சூடிக் கொண்டு போய் பகை நாட்டு ஆநிரைகளைக் கவர்ந்து வருவர்; இதனை வெட்சித்திணை என்பர்.

இதற்கு எதிராக வீரர்கள் கரந்தைப் பூவைச் சூடி, பகைவர்கள் கவர்ந்து சென்ற ஆநிரைகளை போரிட்டு மீட்டுவருவது கரந்தைத் திணை எனப் படும்.

முல்லை நிலத்தில் வாழும் இடையர்குலமகள் பொன்னால் ஆன அணிகலன்களைத் தவிர்த்து, பசுக்களையும், அதன் கன்றுகளையும் விலை கொடுத்து வாங்கியதாக பெரும்பாணாற்றுப் படை தெரிவிக்கிறது.

சிந்து சமவெளி அகழாய்வுகளில் கண்டறியப் பட்டுள்ள சுடுமண் முத்திரைகளில் காளைச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. 2000 ஆண்டு களுக்கு முன் வாழ்ந்த அரசர்களின் நாணயங்களில் காளை முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் முல்லை நிலத்தில்தான் முதன் முதலாக ‘ஏறு தழுவுதல்’ நிகழ்ச்சி தொடங்கப் பட்டுள்ளது. பெண் குழந்தை பிறந்ததும், அவரது பெற்றோர் காளை ஒன்றை வாங்கி வாழ்ந்தனர். அந்தக் காளையை அடக்கும் இளைஞருக்கே அப்பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர்.

மாடுகளுக்கு ஏற்படும் நோய், அதற்குரிய மருந்துகள் பற்றி தனியாக ‘மாட்டு வாகடம்’ என்ற நூலும் இயற்றப்பட்டிருந்தது. இதைத் தவிர கதைப்பாடல்களும், சிந்துப் பாடல்களும் மாடு களுக்காக பாடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இவ்வாறு தமிழர் பண்பாட்டோடும் வாழ் வியலோடும் இரண்டறக் கலந்துவிட்ட பொங்கல் திருநாளின் ஒரு பகுதிதான் மாட்டுப் பொங்கல். அந்த மாடுகளோடு விளையாடும் விளையாட்டே ஏறுதழுவுதல். இந்த விபரம் தெரியாத ஒரு வெளிநாட்டு அமைப்புதான் பீட்டா (ஞநவய).

விலங்குகள் பாதுகாப்புக்காக தொடங்கப் பட்ட இந்த அமைப்பு ஆரம்பத்தில் சிறுசிறு சமூகப் பணிகளைச் செய்து வந்த நிலையில் இப்போது ஒவ்வொரு நாட்டிலும் பிரச்சினையை உருவாக்கும் அமைப்பாக மாறி வருகிறது.

1980 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கப் பட்டது. இங்கிரிட் நியூஹிர்க் என்பவர் அலெக்ஸ் பாச்சியோ என்பவருடன் சேர்ந்து இந்த அமைப்பைத் தொடங்கினார். இளமைக் காலத்தில் பெற்றோருடன் இந்தியாவில் இருந்துவிட்டு, பிறகு அமெரிக்காவில் குடியேறியவர் இவர்.

இந்த அமைப்பு 5 கொள்கைகளை முன் வைத் துள்ளது. அவை, விலங்குகள் நமக்கு உணவுக்காகப் படைக்கப்பட்டது அல்ல; விலங்குகளின் தோல்கள் மற்றும் பாகங்களை ஆடை அணிகலன்களாக பயன்படுத்தக் கூடாது; பரிசோதனைக்கு விலங்கு களைப் பயன்படுத்தக் கூடாது; விலங்குகளை

எந்த விதத்திலும் துன்புறுத்தக் கூடாது. மனிதன் பொழுதுபோக்குவதற்கு விலங்குகளைக் காட்சிப் பொருளாகப் பயன்படுத்தக்கூடாது.

இந்தக் கொள்கைகளை முன்வைத்துதான் பீட்டா (PETA) அமைப்பு உலகெங்கும் போராட்டங் களையும், வழக்குகளையும் நடத்தி வருகிறது. ‘ஜல்லிக்கட்டு’ விளையாட்டில் காளைகளைத் துன்புறுத்துவதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும். காளைகளோடு விளையாடும் மனிதருக்குத்தான் காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறதே தவிர அவற்றிற்கு ஏதும் ஏற்படுவ தில்லை.

“காக்கை குருவி எங்கள் சாதி - நீள்

                கடலும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை

                நோக்க நோக்கக் களியாட்டம்”

என்று பாடி ஆடினார் பாரதியார்.

சங்க காலம் முதல் இயற்கையை வழிபடும் தமிழர்களுக்கு விலங்குகளும் தெய்வங்களாகவே விளங்கின. அத்துடன் இந்திய துணைக் கண்டத்தில் தமிழர்கள் பல காலமாகவே புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

காவிரிநீர், முல்லைப் பெரியாறு அணை என்று தொடங்கி தமிழக மீனவர் பிரச்னை தொடர்கதையாகி வருவதால் தமிழ் மக்கள் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்துள்ளனர். ‘ஜல்லிக்கட்டு’ என்பது அதன் வெளிப்பாடு.

தமிழர்களின் இந்தப் பாரம்பரிய பண்பாடு இடைவிடாமல் நடந்து வந்தால்தான் நாட்டில் மழை பொழியும் என்பது நம்பிக்கை. இந்த இளைஞர்களின் எழுச்சி நமக்கு நடத்தும் பாடம் அதுதான்.

Pin It