தேர்தலில் வெற்றி பெறுவதைவிடத் தோற்பதே நல்லதென்று தோன்றுகிறது! மற்றவர்களல்ல; காங்கிரஸ்காரர்!
தோற்ற துக்கம் ஆறி, கண்ணீர் உலர்வதற்கு முன்பே சந்தானம் அய்யங்காருக்குக் கவர்னர் வேலை கிடைத்தது!
தெலுங்கு நாட்டில் தோற்ற அக்கிரகார துர்காபாய் அம்மாளுக்கு இந்திய சர்க்காரின் திட்ட கமிஷனில் வேலை கிடைத்து விட்டது! ஏதோ, மாதம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் கிடைக்கும்! முதல் வகுப்புப் பிராயணப் படியும் கிடைக்கும்!
நேருவைப் பின்பற்றியே பேரறிஞர் உயர் திரு. ஆச்சாரியாரும் இந்த வேலையில் இறங்கி விட்டார்!
கம்யூனிட்டி ப்ராஜக்ட் ஆஃபீசர் என்ற வேலைக்கு இரண்டு ஆட்களை நியமிக்க வேண்டி யிருக்கிறதாம். தேடித் தேடிப் பார்த்தார்! கடைசியாக தேர்தலில் குப்புற விழுந்து பல்லுடைபட்ட இரண்டு கதர்ச் சட்டைகளைப் பொறுக்கி யிருக்கிறாராம்! இன்னும் உத்தரவு போகவில்லை! ஒரு வாரத்துக்குள் நியமனமாகி விடும்! மாதம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாத சம்பளம்! முதல் வகுப்புப் படிப்பணம்!
இந்த உருப்படிகள் யார் தெரியுமா?
- என்.எஸ். வரதாச்சாரி
- பாபினீடு
தமிழ் நாட்டுக்கு ஒருவர்; தெலுங்கு நாட்டுக்கு ஒருவர்!
ஆகையால், தேர்தலில் தோற்றுப் போன காந்தி சீடர்களே! நீங்கள் கவலைப்பட வேண்டாம்! தபால்காரர் திடீரென்று ஒரு நாளைக்கு ஏதாவதொரு நல்ல கடிதம் கொண்டு வருவார்! அதுவரையில் இந்தப் பாட்டைப் பாடிக் கொண்டிருங்கள்:-
பல்லவி
சஞ்சலங் கொள்ளாதே மனமே!
சந்தோஷச் செய்தி வரும் ஒரு தினமே, (சஞ்)
அ. பல்லவி
நாம் செய்த தியாகங்கள் வீணா?
நாதியற்று நிற்க நாமென்ன தூணா? (சஞ்)
சரணம்
பஜகோவிந்தம் என்றே பாடு!
பன்னாடை முட்டாள்கள் பலருள்ளநாடு;
எவரேனும் நமக்குண்டோ ஈடு?
நாடல்லவே இது, வெறுஞ்சுடு காடு! (சஞ்)
- குத்தூசி குருசாமி (07-07-1952)
நன்றி: வாலாசா வல்லவன்